When Charu meets Noe -3
ஆபாசம் Vs காமம்- (பாகம் 2)
இதோ! முதல் எழுத்தை ஆரம்பிக்கையிலேயே சாருவின் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரில் (29) பசி மற்றும் காமத்தைப் பற்றி அவர் எழுதியது தான் நினைவில் வந்தது. அதில் வரும் இந்த வரி தான் இந்த பதிவின் அடிநாதம்.
“பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்;
காமத்தை எழுதுபவன் கல்லடிக்கப்படுகிறான்”.
காமம் ஒரு Biological need அல்லது urge. பசி, தாகம், சோர்வு, சிரிப்பு, அழுகை மாதிரி தான் காமமும். அதை ஒரு கலாச்சாரம், ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பாவிப்பதே இது போன்ற சிக்கல்களுக்கு காரணம் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சூழலில் காமம் சார்ந்த படைப்புகள் வெளிவரும் போது பொதுச்சமூகமானது, இருட்டில் வைக்க வேண்டிய பொருளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தாற் போல பதறுகிறது. கல்லெறிகிறது. அதனாலேயே, காமத்தைப் பற்றிய புரிதல்களும் விவாதங்களும் பொதுவெளியில் மிகக் குறைவு.
சரி. இந்த பதிவின் நோக்கம் zero degree போன்ற இலக்கியப் படைப்புகள் ஏன் ஆபாச எழுத்தாக பாவிக்கப்பட்டு நிராகரிக்கப்படக் கூடாது என்பதே.
ஸீரோ டிகிரியின் அமைப்பை பார்த்தால் ஒரு Maze போல இருக்கும். அது நேர்கோட்டில் பயணிக்காது. அத்தியாயங்களைக் கலைத்துப் போட்டு நம்மை புரிதலுக்கு வேண்டி அலைய வைக்கும். ஆனால், அதை எல்லாம் படித்து கிரகித்து ஒரு Bird’s eye viewல் இருந்து மேலிருந்து பார்க்கையில் சொல்ல வருகிற விஷயங்கள் ஏராளம் என்பது புரியும்.
நாவலில் இதை சூர்யா ஒரு கட்டத்தில் பிரதிபிம்பம் என்கிற அத்தியாயத்தில் தன் மகள் ஜெனஸிஸிடம் சொல்வது போல அமைக்கப் பட்டிருக்கும்.
“தவறு நிகழ்ந்து விட்டது ஜெனஸிஸ். நாவலைப் பிரதியெடுக்கும் உற்சாகத்தில் அத்தியாயங்கள் கலைந்து போய்விட்டன”.
புரிவது போலத் தான் சாரு நமக்கு இந்நாவலை கொடுத்திருக்கிறார். இதை எப்படி அணுக வேண்டுமென்று உள்ளிருக்கும் அத்தியாயங்கள் மூலமே நமக்கு தெளிவுபடுத்துகிறார். இதெல்லாம் சொல்லவேண்டுமென்றே இல்லை. நாமாக இதன் வடிவத்தை தேடி அலைய வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே சாரு அதற்கும் இடமளிக்காது நம்மை சற்று நிதானப்படுத்தியே உள்ளிழுத்துச் செல்கிறார்.
Irreversible படமும் இப்படி தான். ஒரு சந்தோஷமான கணவன் மனைவி. பார்ட்டிக்கு செல்கிறார்கள். மனைவி வன்புணர்வுக்கு ஆளாகிறார். கணவன் பழி வாங்குகிறான். கேட்கையில் இவ்வளவு தட்டையான கதையா என தோன்றும். ஆனால் அது எடுக்கப்பட்ட reverse chronological order. காட்சிகளை நேர்க்கோட்டில் சொல்லாது shuffle செய்யப்படும்போது அந்த விஷயம் வேறு வடிவமெடுக்கிறது. மட்டுமல்லாது படம் எடுக்கப்பட்ட விதம். நோக்கம். கேமரா கோணங்களில் ஏகப்பட்ட புது முயற்சிகள் இருக்கும்.
சாருவின இந்த படைப்பும் இப்படி தான். மொழியை வைத்து ஏகப்பட்ட experiments. சொற்கள் தவிர்த்து, நிறுத்தக்குறிகளற்று, வாக்கியக் கட்டமைப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வித psychedelic stateக்கு இழுத்துச் செல்ல வல்லது.
எழுத்து நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் விஷயத்துக்கு வந்தபாடில்லை. என்ன செய்வது. கொஞ்சம் excite ஆகிவிட்டேன். எளிமையாக, எனக்கு தோன்றிய உதாரணத்தோடு ஆரம்பிக்கிறேன்.
அத்தியாயம் ஒன்பதில், முனியாண்டியின் தொலைபேசி உரையாடல்கள். ஆபாசத்திற்கும் காமத்திற்குமான வேறுபாட்டை என் தனிப்பட்ட புரிதல் அளவிற்கு இதன் மூலம் விளக்க முயற்சிக்கிறேன்.
ஆபாசம் என்பது morality சார்ந்தது. காமம் என்பது உணர்ச்சிகள் சார்ந்தது.
அந்த இருவருக்குமான தொலைபேசி உரையாடல்கள், யாரேனும் ஒருவர் மற்றொருவரை பழி வாங்கும் நோக்கத்துடனோ/ ஆதாயம் தேடும் நோக்கத்துடனோ செய்தால் அது ஆபாசம். ஆனால் அங்கு நிகழ்ந்தேறியது, காமம். இயற்கையான ஈர்ப்பு. உடனே extra marital affairகளுக்கு ஆதரவாக பேசுவதாக முன்முடிவு எடுக்கவேண்டாம். திருமணம் பல தளங்களில் interlink ஆன விஷயம். சம்மந்தப்பட்ட நபர்கள் சார்ந்த சூழல் சார்ந்த விஷயமது. சாருவும் அதை அங்கு நியாய அநியாய கோட்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. ஒரு உரையாடலையும் அதிலிருக்கும் இரு உயிர்களின் உடல்சார் ஆசைகளையும் காட்டுகிறார்.
Gaspar Noeவின் எல்லாப் படங்களிலும் செக்ஸ் ஒரு அங்கமாக இருக்கும். அது அழகியலுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். சாருவின் ஸீரோ டிகிரியையே ஆபாசமென்பவர்கள் கேஸ்பாரின் Love போன்ற படங்களை போர்னோ என்று தான் சொல்வார்கள். சாரு தனது நாவலில் மிக லேசாக கொண்டுவந்த செக்ஸை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமூகத்திடம் erotic literature எல்லாம் பேசினால் அவர்களுக்கு நெஞ்சே வெடித்து விடும். Batailleன் Story of an eye, Vladimir nobokovன் லொலீட்டா போன்றவற்றை கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். Pornographic literature என்று வசைபாடி ஓரம் கட்டப்பட்டிருக்கும்.
நோக்கம். காட்சியோ/எழுத்தோ வைக்கப்பட்டிருக்கும் context. அது தான் ஆபாசத்திற்கும் காமத்திற்குமான வித்தியாசம். இங்கு நான் Pornக்கு எதிராக கொடி பிடிக்கும் ஒழுக்கவாதி போன்ற பிம்பத்தையெல்லாம் கட்டமைக்கவில்லை. நானும் பதின்ம வயதுகளில் பார்க்க ஆரம்பித்த விஷயம் தான். இன்றைய சூழலில் பெரும்பாலும் செக்ஸ் என்றால் என்ன என்பதை porn தளங்களுக்குச் சென்றுதான் டீனேஜ் ஆட்கள் தெரிந்துகொள்கிறார்கள். செக்ஸ் பற்றி பொதுவெளியில் அவனிடம் யாரும் தெளிவுபடுத்துவதில்லை. சமூகத்திலோ, பள்ளியிலோ, வீட்டிலோ யாரும் தெளிவுபடுத்த முனைவதில்லை.செக்ஸ் என்பது செய்பொருளாக இருக்குமளவு பேச்சுப் பொருளாகவோ, பொதுவெளியில் விவாதப் பொருளாகவோ இல்லை. இதனால் அது ஒரு taboo போல மாறி விட்டது.
” இதெல்லாம் அவனா தெரிஞ்சுப்பான். இத கூடவா உக்காந்து க்ளாஸ் எடுப்பாங்க?”,என்று கடந்து விடுகிறார்கள்.
சாருவின் எழுத்தை எப்படி வெறும் ஆபாச எழுத்தாக பார்க்க முடிகிறது. அன்பெல்லாம் வழிந்தோடும், சூர்யா தன் மகளுக்கு எழுதும் கடிதங்களைப் படித்துமா இப்படி தோன்றுகிறது? ஜெனஸிஸ். எப்பேர்ப்பட்ட அன்பு அது.
ஆக, இங்கு காதல்/காமம்/ ஆபாசம் போன்ற பதங்களுக்கு வித்தியாசம் அனைவருக்கும் புரியும் பட்சத்தில் தான் இங்கு ஒரு தெளிவு கிட்டும். சாருவின் படைப்புகள் கொண்டாடப்படும். அதிவீரம பாண்டியரின் கொக்கோகமும், வத்சயாணரின் காமசூத்திரத்தையும் படைத்த அதே நிலம் தான் இன்று அதைப் பேசி தெளிவடைய முனைப்பில்லாமல், பல பாலியல் பிரச்சனைகளுக்கும் குற்றங்களுக்கும் உட்பட்டு நிற்கிறது.