அராத்து

என்னைப் பற்றி அராத்து எழுதிய கட்டுரைக்குப் பல எதிர்வினைகள் வந்தன.  ஒரு கட்டுரையைப் பாராட்டி இதுவரை யாரும் இந்த அளவுக்கு எழுதியதில்லை.  எனக்கே அராத்து என்னைப் பற்றி இப்படி நினைக்கிறார் என்பது இப்போதுதான் தெரியும்.  ஆனாலும் இத்தனை ஆண்டு அனுபவத்தில் ஓரளவுக்காவது மனித மனங்களை எடை போடத் தெரியும் அல்லவா, அந்த அடிப்படையில்தான் அராத்துவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் உங்கள் வாரிசு யார் என்று கேட்ட போது சட்டென்று அராத்து என்று சொல்லி பலரிடமும் பலவாறு வாங்கிக் கட்டிக் கொண்டேன்.  அப்படிச் சொன்னவுடனேயே கூட்டத்தில் சிலர் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்கள்.  சரி, இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  என்னை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட நண்பர் யார்?  எந்தப் பின்னணியில் இதைச் சொல்கிறேன் என்றால், என்னோடு இருபது ஆண்டுகள் பழகிய நண்பர் கூட என்னை வீட்டுக்கு அழைத்தால் தேநீர் போட்டுக் கொடுக்கிறார்.  என் உயிரோ போனாலும் நான் தேநீர் குடிக்க மாட்டேன்.  க்ரீன் டீ மட்டும்தான் குடிப்பேன்.  பால் கலந்த டீ என்றால், அது இஸ்லாமியர் வீட்டிலோ இஸ்லாமியர் வைத்துள்ள உணவகத்திலோ மட்டும்தான் குடிப்பேன்.  முன்பு ஆழ்வார்ப்பேட்டை சாம்கோ உணவகத்தில் அப்படிப்பட்ட டீ கிடைத்தது.  இப்போது டை கட்டி, ஆங்கிலம் பேசும் பணியாளர்கள் வந்த பிறகு அந்த டீ காணோம்.  மவுண்ட் ரோட் புகாரியில் இன்னமும் அந்த டீ கிடைக்கிறது.  நாகூரில் அந்த டீ இன்னமும் உண்டு.  எழுபதுகளின் பிற்பகுதியில் என் நண்பர் ரஃபி (நாகூர் ரூமி) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவரைப் பார்க்க தஞ்சாவூரிலிருந்து அடிக்கடி போவேன்.  அப்படிப் போகும் போதெல்லாம் ஜமாலுக்கு எதிரே இருக்கும் டோல்கோட் முனையில் இருந்த டீக்கடையில் பட்டிக்காட்டு ராஜா படத்தில் வரும் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடலை சுமார் இருபது முப்பது முறை போட்டு நாலைந்து டீ குடித்து விட்டு வருவோம்.  இந்தப் பாடலில் ஸ்ரீப்ரியா போட்டிருக்கும் ஆடையைப் போல் இந்தக் காலத்தில் இண்டர்நெட்டெல்லாம் வந்து நீலப்படங்கள் கோடிக் கணக்கில் குவிந்து கிடந்தாலும் அந்த sensuality க்கு ஈடாகாது போல் தெரிகிறது.  செக்ஸ் அப்பீலைப் பொறுத்தவரை இப்போதைய கனவுக் கன்னி சன்னி லியோனி இந்தப் பாடலில் வரும் ஸ்ரீப்ரியாவிடம் பிச்சை வாங்க வேண்டும்.

 

 

என்னைப் பொறுத்தவரை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உச்சபட்ச பாடல் இது.  அந்தக் காலத்தில் ரஃபி பாபி படத்தில் வரும் பேஷாக் மாந்த்திர் பாடலை சஞ்ச்சல் குரலில் அப்படியே பாடுவார்.  சஞ்ச்சலுக்கும் ரஃபிக்கும் துளிக்கூட வித்தியாசம் தெரியாது.  நூற்றுக் கணக்கான முறை ரஃபியை அந்தப் பாடலைப் பாடச் சொல்லி நானும் நண்பர்களும் கேட்டிருக்கிறோம்.  (என்னை இளம் பிராயத்தில் மிக நன்றாக அறிந்த ஒருசிலரில் ரஃபியும் ஒருவர்.)  இந்தியிலும் தமிழிலும் எத்தனையோ அற்புதமான பாடகர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் சிறப்புக்குரியவர்கள்.  ஆனால் சஞ்ச்சலுக்கு இணை சஞ்ச்சல் மட்டுமே.  அது ஒரு தனி ரகம்.  கோவில் மணியின் ரீங்காரத்தை வெறும் காற்றிலேயே உண்டாக்கக் கூடிய குரல்.  ஒலியின் அதிர்வுகளை அவர் அளவுக்கு நம் மனதில் செலுத்திய வேறு ஒரு பாடகரை என்னால் சொல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட நாகூர் ஹனீஃபாவும் இப்படிப்பட்டவரே.  இவர்கள் இருவரும் நகல் எடுக்க முடியாத மாபெரும் கலைஞர்கள்.

https://www.youtube.com/watch?v=lrKMLsE-r1o

சில ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸைல் நாவலுக்காக சில விஷயங்களை ரஃபியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.  என்ன ரஃபி, பேஷாக் மாந்த்திர் இப்போதும் பாடுகிறீர்களா என்று ஆர்வத்துடன் கேட்டேன்.  எங்கண்ணே, அதெல்லாம் ஜமாலோடு முடிந்து விட்டது என்றார்.  ஒருக்கணம் என் இதயமே நின்று விடும் போல் இருந்தது.  துக்கத்தில் தொண்டை அடைத்து விட்டது.  நீண்ட நேரம் எதுவுமே செய்யத் தோன்றவில்லை.  நாகூர் பற்றிய எண்ணங்கள் குமுறிக் குமுறி வந்தன.  ஃபரீது காக்கா (ரவிச்சந்திரன் படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்தவர்), பிஏ காக்கா (நாகூரில் முதல் முதலாக பி.ஏ. பட்டம் வாங்கியவர்) – அவர் மேடையில் பேசும் போது மக்கள்கள் மக்கள்கள் என்றுதான் கள் சேர்த்துப் பேசுவார், தூயவன் என்ற பெயரில் எக்கச்சக்கமான படங்களுக்கு வசனம் எழுதிய அக்பர் (இவர் நாகூர் ரூமியின் மாமா), ஆயிரக் கணக்கான பாடல்களை எழுதிய நாகூர் சலீம் (இவரும் ரூமியின் இன்னொரு மாமா), உலகெங்கும் தமிழ் வாழ் மக்களிடையே பெரும் புகழ் பெற்றிருந்த நாகூர் ஹனீஃபா (தமிழர்களைத் தவிரவும் இவர் புகழ் பரவியிருக்க வேண்டும்.  கலைஞர்களை மதிக்கத் தெரியாத தமிழர்களிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது) என்று என் நாகூர் ஞாபகங்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய நாவலாக எழுத வேண்டும்.

சரி, டீ விஷயத்துக்கு வருகிறேன்.  இருபது ஆண்டு பழகிய நண்பர்களுக்குக் கூட எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரியவில்லை என்கிற போது என்னுடைய அத்தனை விஷயங்களையும் மிகத் துல்லியமாக அறிந்தவர் என்று அராத்துவை அவதானிக்கிறேன்.  ஒரு விஷயத்தை நான் எப்படி அணுகுவேன் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.  என் வாழ்வில் இந்த அளவுக்கு என்னைத் துல்லியமாக அறிந்த ஒருவரை இதுவரை நான் சந்தித்ததில்லை.  அந்த அர்த்தத்தில்தான் அராத்துவை வாரிசு என்றேன்.

இருதினங்களுக்கு முன்பு வந்த கட்டுரைக்கு மேலும் ஒரு குறிப்பு எழுதி அனுப்பியிருந்தார் அராத்து.  இரண்டையும் படித்த போது இதை நீங்கள் ஒரு புத்தகமாகவே எழுதலாமே என்றேன்.  பல நண்பர்களும் இதேபோல் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.  அவரிடமும் அப்படிச் சொன்னார்கள் என்று அறிந்தேன்.  செய்வார் என்று நம்புகிறேன்.  அவர் அனுப்பிய இரண்டாம் பகுதியை சிறிது நேரத்தில் வெளியிடுகிறேன்.