சாருவின் எந்த நாவலையும் இதுவரை மனுஷ்ய புத்திரன் பாராட்டியதில்லை. அவ்வளவு ஏன், அவர் பெயரைக் கூட சொன்னதில்லை. ஆனாலும் சாரு மனுஷின் கவிதைகளைப் பாராட்டாமல் இருந்ததே இல்லை. ’இது என்ன பிஸினஸா கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு?’ என்ற சாருவின் தனித்தன்மையான மனோபாவம்தான் இதற்குக் காரணம். மனுஷுடனான நட்பில் அவ்வப்போது உரசல்களும் வரும். சில சமயங்களில் வரும் உரசல்கள் மற்றவர்களுக்கு வந்திருந்தால், கூலிப்படையை வைத்துக் கொலை செய்யும் அளவிற்குப் போவார்கள். அந்த அளவுக்குக் கடுமையான உரசல்கள். அந்த உரசல் கால கட்டத்தில் கூட மனுஷின் கவிதைகளை சாரு பாராட்டத் தவறியதில்லை. சாருவுக்கு இலக்கியம் வேறு, நட்பு வேறு!
***
பாராட்டு என்ற வார்த்தை வந்துவிட்டது, அதனால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சாரு மீது எப்போதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. பாராட்டினால் ஒரேயடியாகத் தூக்கி வைத்துப் பாராட்டுகிறார். திட்டினால் காலில் போட்டு மிதிக்கிறார்.
இது உண்மையிலேயே நுட்பமான விஷயம்தான். நாம் நம் அன்றாட லௌகீக வாழ்க்கையில், யாரையும் திட்டும்போது கூட, திட்டுவதால் நமக்கு ஏதும் பாதகம் வந்து விடக்கூடாது என பதமாகத் திட்டுவோம். யாரையும் முழுதாக பாராட்டவும் மனம் வராது. “சுமாரா இருக்கு“, “நல்லா முயற்சி பண்ணி இருக்காரு, இன்னும் சிறப்பா செஞ்சி இருக்கலாம்”. “ஒரு ஸ்பார்க் தெரியிது, ஃப்யூச்சர்ல நல்லா வரலாம்“. இதைப்போல மெலூக்காகத்தான் பாராட்டுவோம். இந்த வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வேலையே நம்மிடம் கிடையாது.
இலக்கியத்தைப் பொறுத்தவரை, சாருவுக்கு சுமார் என்ற ஒன்றே கிடையாது. ஒன்று உலகத் தரம் . இல்லையென்றால் குப்பை. இந்த அபூர்வமான மனநிலையை கொஞ்சம் முயற்சி செய்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிச் சொல்லலாம். இவரு சுமாரா ஹார்ட் ஆபரேஷன் செய்வாரு, விமானத்தை ஓரளவுக்கு நல்லா ஒட்டறாரு, இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா, ஆக்ஸிடன்ட் ஆவாம ஓட்டுவாரு என்றெல்லாம் சொல்ல முடியுமா? சொன்னால் இதய அறுவை சிகிச்சைக்குச் செல்வீர்களா? விமானத்தில் பயணிப்பீர்களா?
சாருவுக்கு இலக்கியம் என்று வந்து விட்டால், இதய அறுவை சிகிச்சை போலத்தான். விமானப் பயணம் போலத்தான். உலகத் தரமாக இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் குப்பை. ஏன் கண்டபடிக்குத் திட்டுகிறார் என்றால், உங்கள் மனைவியை ஆப்பரேஷன் பண்ணி ஒரு டாக்டர் சாகடித்து விட்டால், மென்மையாகவா திட்டுவீர்கள்? இல்லை, அமைதியாக ஆலோசனை சொல்வீர்களா ?
***
சாருவுக்கு வயதே கிடையாது, வயது வித்தியாசமும் பார்க்க மாட்டார். 18 வயது இளைஞன் அவரை வாத்சல்யமாக “சாரு” என்று அழைப்பதைக் காணலாம். அவ்வளவு ஏன் மூன்று வயது இருக்கும்போதே என் புத்திரன் ஆழி அவரை சாரு என்றுதான் அழைப்பான்.
நான் அவருடன் எங்காவது வெளியில் சென்று விட்டு (கோயில் குளத்துக்கா போகப்போறோம்!) அவரை வீட்டில் இறக்கி விடுகையில், எனக்கு என் வயதொத்த தோழனை வீட்டில் இறக்கி விடுவது போலவே தோன்றும்! என் வயதொத்த தோழர்களை வீட்டில் விடுகையில் , தோழனின் அம்மா கண்களில் படாமல், ஓடிவிடுவது போலவே சாரு வீட்டில் இருந்தும் ஓடி விடுவேன். அப்போது அவந்திகா சாருவுக்கு மனைவி என்றோ, சாருவுக்கு வயது 60 ஆகிறது என்றோ தோன்றவே தோன்றாது. அவந்திகாவை சாருவின் தாய் போல நினைத்து, பயந்து கொண்டு, ஓடி விடுவேன்.
சாரு இளைஞர்கள் மத்தியில் இருக்கும்போது எனக்கு வித்தியாசமாகத் தோன்றாது. மிக இயல்பாக இருக்கும். இதுவே சாரு அவர் வயதையொத்த ஆட்களுடன் எப்போதேனும் மாட்டிக்கொள்வார். அப்போது எனக்கு செம காமடியாக இருக்கும். அவர்களுடன் இருக்கையில் தண்ணீரும் எண்ணையும் கலந்தது போல இருக்கும். அதிலும் சாரு இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு போடும் சில அணுகுண்டுகளை அந்தத் தொண்டு கிழங்கள் தாங்க முடியாமல் கதிகலங்கி நிற்பதைக் காண கோடி கண்கள் கூலர்ஸுடன் வேண்டும்.
சமயங்களில், அந்த கிழவர்களின் கை ஓங்கி இருந்தால், சாரு திருவிழாவில் தொலைந்து, போலீஸிடம் மாட்டிக்கொண்ட குழந்தையை போல விழித்துக்கொண்டு இருப்பார்.
***
தொலைக்காட்சி விவாதங்கள், பொது கூட்ட மேடைகள் இதெல்லாம் சாருவுக்கு ஒவ்வாத விஷயங்கள். உண்மையான சாரு அங்கே வெளிப்பட மாட்டார். அங்கெல்லாம் சாருவுக்கு மூளையே வேலை செய்யாது. ஃப்ரீஸ் ஆகி இருக்கும். ஆனால் நண்பர்கள் சந்திப்பு, வாசகர் வட்டக் கூட்டம் என்று வரும்போது ஐயா குஷியாகி விடுவார். மூளை பூனைக்குட்டிகள் விளையாடிக்கொண்டு இருப்பதைப்போல லைவ் ஆக இருக்கும். அதைப்போன்ற சந்தர்ப்பங்களில் ஏதேனும் கேள்வி கேட்டால் மிக அற்புதமான பதில் அளிப்பார். ஒரு நொடி கூட யோசிக்க மாட்டார்.
ஒருமுறை நண்பர்கள் சந்திப்பின் போது, மிதமான போதையில் பேசிக்கொண்டு இருந்தோம். தூங்கும் வரை எங்களுக்கு மிதமான போதைதான் என்பது வேறு கதை 🙂 . அப்போது கருப்புசாமி, மெனக்கெட்டு இடையில் புகுந்து, ”ஆனாலும் சாரு எனக்கு உங்களை விட அராத்துவைத்தான் பிடிக்கும்” என்றார்.
ஒரு பத்து பேர் இருந்து இருப்போம். அனைவரும் அமைதியாகி விட்டனர். நான் கூட இது என்னடா வம்பாகிப்போச்சு என்று ஸ்டார் ஃப்ரூட்டை ஸ்டார் ஸ்டாராக நறுக்க ஆரம்பித்தேன்.
சாரு நொடியில் சொன்னார், ”ஆமா கருப்பு… எனக்கும் அராத்துவைத்தான் ரொம்பப் பிடிக்கும்.”
*****
இன்னொரு நண்பர்கள் சந்திப்பில் நான் புலம்பிக்கொண்டு இருந்தேன். வழக்கமாக நான் புலம்பும் ஆள் இல்லை. அன்று அப்படி ஆகி விட்டது. என் நெடுநாளைய நண்பன் ஒருவன்… அவனே என்னை பார்ப்பான்னு திட்டிட்டான் சாரு என்றேன். இவ்ளோ நாளா அப்ப பாப்பான்னு மனசுல வச்சிதான் பழகிட்டு வந்து இருக்கானா என்று புலம்பிக் கொண்டு இருந்தேன்.
அட விடுங்க சீனி. இது உங்களுக்கு மிகப் பெரிய புகழ்ச்சி என்றார். நானும் உங்களைத் திட்டணும்னு முடிவு பண்ணிட்டா பாப்பான்னுதான் திட்டுவேன். ஏன்னா, உங்களைத் திட்டறதுக்கு உங்க கிட்ட வேற ஏதும் விஷயம் இல்லை. எதோ பொறாமைல, எரிச்சல்ல உங்களைத் திட்டணும்னா, பாப்பான்றது மட்டும் தான் திட்ட, சாய்ஸ் இருக்கு என்றார்.
***