விவேகம் சர்ச்சை – 6 (இயக்குனர் அருண் வைத்தியநாதனின் பதில்)

நான் பெரிதும் மதிக்கும் சாரு அவர்களுக்கு, விமர்சனமே செய்யக்கூடாது என்றோ, சினிமா விமர்சனம் செய்பவர்களை ஜெயிலில் போட வேண்டும் என்று கதறும் அளவுக்கோ சின்னபுத்திக்காரன் நானில்லை. விமர்சனமென்பது எந்த ஒரு கலைக்குமே வேண்டும் – சினிமாவிற்கு கண்டிப்பாய் வேண்டும். அது குத்திக் குதறி, வன்மத்தை கக்கும் ஒரு விஷ அருவியாய் வெளியே விழக்கூடாது. எவ்வளவு மோசமான விஷயத்தையும், செய்தவரே நாணுமளவுக்கு, அவர்களே அடுத்த முறை அதை செய்யத் தயங்கும் அளவுக்கு, ஒரு கண்ணாடி போல் செயல்பட வேண்டும். இந்த நீலசட்டைக்காரருக்கு அஜீத்குமார் மேல் ஏதோ ஒரு தனிப்பட்ட வன்மம் இருப்பது, அவருக்கு அஜீத்தின் ரசிகர்களுக்கும் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் என்று சில வலம் வருவதில் தெரிகிறது. ஏக வசனம், கெட்ட வார்த்தைகள் என்று கேட்க சகிக்கவில்லை. அந்த தனிப்பட்ட வன்மம், அவரது விமர்சன தொனியிலும் கண்டிப்பாய் தெரிகிறது. மற்றபடி சினிமாவிற்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் எனக்கும் ஒவ்வாத விஷயமே. நான் சினிமா எனும் பெருங்கடலில் ஒரு துளியாய் செயல்பட்டு வருகிறேன் – இந்த விமர்சனம் செய்யும் முறை மனவருத்தத்தை அளித்தது, அதை பதிவு செய்தேன் …அவ்வளவு தான். மற்றபடி நீலசட்டைக்காரார் மட்டுமல்ல, தாராளமாய் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும்….அதில் சிறிதளவேனும் கண்ணியமும் இருக்கட்டும் என்பதே எனது வேண்டுகோள். மற்றபடி, உங்களோடு காபி சாப்பிட ஆவலாய் காத்திருக்கும், உங்கள் எழுத்தின் பரம விசிறி என்பதில் எந்த மாற்றமுமில்லை 🙂