விவேகம் சர்ச்சை – 5

விவேகம் பிரச்சினை பெரிய பிரச்சினையாகப் போகும் போல் இருக்கிறது. படம் கபாலியை விட பெரிய வசூல் என்று தெரிகிறது. அப்படியென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே? ஏன் அந்தப் படத்தை விமர்சிப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுகிறார்கள்? இதில் ஒருவர் சினிமா என்பது குழந்தை பெறுவது போல. பிறந்த குழந்தையை யாராவது திட்டுவார்களா என்கிறார். அப்படியானால் தமிழில் வெளிவந்துள்ள எல்லா படங்களுமே குழந்தைதான். எதையுமே விமர்சிக்கக் கூடாது. எழுத்தாளர்கள் எழுதும் எல்லா கதைகளுமே குழந்தைதான். எந்தக் கதையையும் யாரும் யாரும் விமர்சிக்கக் கூடாது. ஓட்டலுக்குப் போனால் அவன் ஊசிப் போன பண்டத்தைக் கொடுத்தால் விமர்சிக்கக் கூடாது. பேசாமல் தின்னு விட்டு வரணும். ஏன்னா, அவனும் கஷ்டப்பட்டுத்தானே சமைச்சிருப்பான்.
ஒரு மாணவன் பரீட்சைக்குப் போனான். எல்லா கேள்விக்கும் பதில் எழுதினான். டீச்சர் கடுப்பாகி சைபர் மார்க் போட்டார். இவன் டீச்சர் மேல் கடுப்பாகி அவர் சட்டையைப் பிடித்து நான் எவ்ளோ கஷ்டப்பட்டு படித்தேன், எழுதினேன். ஏய்யா சைபர் போட்டே. டேய் லூசுப் பயலே, ஏண்டா நீ தமிழ்ப் பரீட்சையில இங்லீஷ் பதிலை எழுதினாய் என்றார் வாத்தியார்.
விவேகம் படத்தில் கதையே இல்லை; இடைவேளை வரை அஜித் சுட்டுக் கொண்டே இருக்கிறார். எந்தக் காட்சியையும் நம்பவே முடியவில்லை. இதெல்லாம் அஜீத்தின் தப்பா? இயக்குனர் சிவா ஒழுங்காக வேலை செய்யவில்லை. நீங்கள் விமர்சகர்களை மிரட்டுவதை விட்டு விட்டு, இத்தனை லட்சம் பக்தர்களைத் தன் ரசிகர்களாகப் பெற்றிருக்கும் அஜீத்துக்கு ஏன் ஒரு நல்ல படத்தைக் கொடுக்கவில்லை என்று இயக்குனர் சிவாவைக் கேளுங்கள். வரலாறு, என்னை அறிந்தால் எல்லாம் நல்ல பொழுதுபோக்கு படங்கள் தானே? விவேகத்தில் எல்லோரும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். இயக்குனரைத் தவிர.