விவேகம் விவகாரம் தொடர்பாக…

பின்வருவது முகநூலில் லுலு தேவ ஜம்லா எழுதியது.  லுலுவுக்கு என் நன்றி:

சாரு அஜித்துக்கு எழுதியிருக்கிற கடிதத்தை வாசிச்சேன். என் மனசுக்குள்ள ஏற்கனவே அந்த தமிழ் சமூகத்து மேல இருந்த கோவம், ஆத்திரம் எல்லாம் இன்னும் இரட்டிப்பா ரௌத்திரமா மாறியிருக்கு.

இப்படி ஒரு குறிப்பிட்ட நடிகனின் படத்தை உண்மை மாறாம விமர்சனம் செய்திட்டார் என்கிற ஒரே செயலுக்காக முகந்தெரியாத மாக்களின் மிரட்டல்களை எதிர் கொள்வது என்பது எவ்வளவு கொடுமையான வேதனை தெரியுமா? அதில அவரு பொண்ணோட பிறப்புறுப்பில் இரும்பு ராடை பழுக்க காய்ச்சி சொருகணும்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் எவ்வளவு வன்மம், எவ்வளவு வக்கிரம். தன் மண்டைக்குள்ள மனித மலத்தை நிரப்பி வச்சிருக்கிறவனால தான் இப்டி ஒரு பெண்ணை இழிவு செய்ய இயலும். இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் அறவே இல்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. கக்கூஸ் பட இயக்குனர் திவ்யா மேல கட்டவிழ்த்து விடப்பட்ட வார்த்தை வன்முறைகளும் இந்த வகையறா தான்.

எல்லாத்துக்கும் மேல இந்த மாதிரி மிரட்டல்கள் தனி மனித உரிமை மீறல். இது இணையத்துலயும் சமூக வலைத்தளத்திலயும் ஏன் நாம வாழுற சமூகத்துலயும் இப்பவெல்லாம் ரொம்ப அதிகமாவே நடக்கிறத பார்க்கிறேன். இதுக்கு காரணம் உரிமைகள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை அப்புறம் நம் மக்களிடையே இருக்கும் தனிமனித வழிபாடும் (போற்றுதல்) தான்ங்கிறது என்னோட புரிதல்.

சரி, மனித உரிமைகள் என்றால் என்ன…

நம்மளோட மதம், இனம், மொழி, தேசம், நிறம், மொழி, பிறப்பிடம், இருப்பிடம், பால் எதுவா இருந்தாலும் மனிதர்களுக்குன்னே வரையறுக்கப்பட்டுள்ள, இயற்கையாய் அமையப்பெற்றிருக்குற அனைத்து உரிமைகளும் மனித உரிமைகளே. மனிதம் அப்டீங்கிற வார்த்தையில நாம எல்லாருமே சமமாப் பிணைக்கப்பட்டிருக்குறோம்னு சொல்லலாம். மனித உரிமைகள் எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையவை, பிரிக்கமுடியாதவை, ஒன்றையொன்று சார்ந்து நிற்பவை.

ஒரு நாட்டின் சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியாக மனித உரிமைகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டு, உறுதிப்படுத்தப் படுகின்றனன்னும் சொல்லலாம். அவையே மனித உரிமைகளைக் காத்து, தனி மனித மற்றும் குழு உரிமைகளை நிலைநாட்டுகின்றன.

மனித உரிமைகளுக்கான பொது அம்சங்கள் என்னன்னா,
1)உலகளாவிய அளவில் அனைவருக்கும் சமமானது.
2)மாற்றத்துக்கோ, திருத்தத்துக்கோ உட்படாதவை.
3)ஒன்றுக்கொன்று சார்ந்து நிற்கும் தன்மை கொண்டவை.
4)பிரிக்க முடியாதது.
5)அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள்.
6)மக்களிடையே பாகுபாடுகளோ, பாரபட்சமோ காட்டாத பண்பு கொண்டவை.

ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் படி, மனித உரிமைகள் வெறும் உரிமைகள் (Rights) மட்டுமல்ல. அடிப்படை உரிமைகளைப் போல இவை நமது கடமைகள் (Duty) ஆகும்.

மனித உரிமைகளுக்குள் சமத்துவம் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட காரணிகள் எவையெல்லாம்னு பார்த்தோம்னா, வறுமை, பாகுபாடு, மோதல் மற்றும் வன்முறை, சிலருக்கு மட்டும் தண்டனைகளில் இருந்து விடுதலை, ஜனநாயகத்தின் மீதான பற்றாக்குறை, மற்றும் பலவீனமான நிறுவனங்கள் எனலாம்.

உலகம் பூராவும் மனித உரிமைகள் தினந்தோறும் மீறப்பட்டுக் கொண்டே தான் இருக்குது. இந்திய அளவில இதை பத்தி நாம பேசினோம்னா முக்கியமா, பெண்ணுரிமை மீறல், காவல்துறை அடக்குமுறை, மத வன்முறைகள், குழந்தைத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள், முக்கியமா இப்போ தங்களுக்கு உரிமையான ஊடகப்பக்கங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதால் தனி மனிதர்கள் மீது இணைய சமூகவலைத்தளங்களில் கட்டவிழ்த்து விடப்படும் வார்த்தை வன்முறைகள் இதெல்லாம் தான் அதிகளவில் இருக்குது.

அப்புறம் தனி மனித வழிபாடு பத்தி சொல்லணும்னா, தமிழகத்தின் நடைமுறைச் சூழலில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு மனிதரை, ஏதோ ஒரு வழியில் அகத்தினாலும், புறத்தினாலும் தனி மனித வழிபாட்டை தார்மீகப் பொறுப்பேற்று தனித்தும், குழுவாகவும் இணைந்தும் செயல்பட்டு வருகின்றனர் அப்டீன்னு சொல்லலாம். ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க மாமன்னன் வாழ்க, நின் கொற்றம் வாழ்க என வாழ்த்திய அரச காலம் முதல் இன்று தங்கத்தலைவர் வாழ்க, தானைத்தலைவர் வாழ்க என்று அரசியலிலும், எங்களின் மக்கள் திலகம், சூப்பர்ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார், காதல் மன்னன், தல, இளைய தளபதி என்று திரைத்துறையிலும், எங்களின் குருவே, ஆன்மாவே, சித்தரே என்று ஆன்மீகத் துறையிலும், அதிரடி ஆட்டக்காரர், ரன் குவிக்கும் இயந்திரம் என விளையாட்டுத் துறை வரை தனி மனித வழிபாடு எங்கும் வியாபித்து இருக்கிறத பார்க்கிறோம்.

இந்த வழிபாட்டை நடத்துகிறவர்களுக்கு விசிறிகள், ரசிகர்கள், தொண்டர்கள், அடியார்கள், கூலிகள், எனப்பல பெயர்கள் உண்டு. இந்த இழிநிலை பிழைப்பு தேவைதானா? சரி ஏன் இவர்கள் இவ்வாறு தனி மனித வழிபாடு நடத்துகிறார்கள்? அவ்வாறு வழிபட வேண்டியதன் அவசியம் என்ன? எனப் பல கேள்விகள் மண்டைக்குள்ள ஓடும். இதைப்பத்தி எல்லாம் ரொம்ப விளக்கினா விடிஞ்சிரும்.

இப்டி ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வழிபட காரணம் என்னன்னு சுருக்கமா சொன்னா, அவர்கள் தன்னை விட அழகாக இருத்தல் (நடிகர்கள்), தன்னை விட அதிக செல்வத்தைக் கொண்டிருத்தல் (நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீகவாதிகள்), தன்னை விட அதிக உடல் பலம் கொண்டிருத்தல் (விளையாட்டு வீரர்கள், ரவுடிகள்) தன்னை விட உயர் பதவி வகித்தல் (அரசியல்வாதிகள், அரசு அல்லது தனியார் துறையில் உயர் பதவி வகிப்பவர்கள்) அனைவருக்கும் அறிவுரை கூறும் அளவிற்கு ஞானம் பெற்றிருத்தல் (ஆன்மீகவாதிகள்) ஆகியவை அந்த தனி மனிதர்கள் மீது ஒரு பிரம்மிப்பை அவகளை பார்ப்பவர்களின் மனங்களில் ஏற்படுத்துது. அந்த பிரம்மிப்பு அவர்களை வழிபட வைக்கிறது மட்டுமில்லாம அது ஒரு சமூக நோயா முத்துறப்போ அவர்களுக்கு எதிரா கருத்து சொல்லுறவங்களை தாக்கவும் வைக்குது.

மேல சொன்ன துறைகளில் பல்வேறு நபர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிலரே நம் மனதிற்கு நெருக்கமாக, நமக்குப் பிடித்தவராக இருப்பார்கள். இவர்களைப் பிடிக்கும் என்பது சாதாரணமானது. ஆனால் அதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் அவர்களுக்காய் எதையும் செய்யத் துணிவதும், சதா நேரமும் அவர்கள் துதி பாடியே இருப்பதும் தான் சமூகத்தில் தனி மனிதக் கோளாறாக வடிவம் பெற்று, தன்னைச் சார்ந்து இருப்போரையும் பெரும் அவதிக்குள்ளாக்குகிறது.

இந்த தனி மனித கோளாறு தான் இப்ப சாரு மேல கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிரட்டல்களுக்கெல்லாம் காரணம். இந்த நோயியல் மாறணும்னா பாகுபாடான சமூக கட்டமைப்புகள் அடியோடு மாறணும். சமத்துவ சிந்தனைகள் தோன்றணும் எல்லார் மனசிலயும். நடக்குமா?

நடக்கும். ஆனா ரொம்ப மெதுவா. அதுக்கான முயற்சிகளை முடிஞ்ச அளவு எழுத்து திறமை உள்ளவங்க தங்கள் பதிவுகள் மூலமா எடுத்துக்கணும்னு என் அவா….

இப்ப இந்த நிமிஷத்துல தாக்கப்படுற சாருவுக்கு என்னாலான ஒரு மாரல் சப்போர்ட் இந்த பதிவு.

என,
சாருவின் எதார்த்தமான எழுத்தால், தார்மீகமான கோபத்தால், காம ரூப கதைகளால் வெகுவாய் ஈர்க்கப்பட்டிருக்கும், சாருவை கண்மூடித்தனமாய் தனிமனித வழிபாடு செய்யும் ஒரு சாமான்ய பெண்,
லுலு தேவ ஜம்லா

With you Charu Nivedita ❤️