அர்ச்சனைக்கு என் பதில்…

அனிருத் இசை metal ம்யூசிக் என்று சொன்னது Black Sabbathக்கு நீங்கள் செய்த துரோகம்” என்று விஜய் ரகுநாதன் முகநூலில் சொல்லியிருந்தார். அவருக்கு நான் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத் தாண்டி வருவாயா, துப்பாக்கி, கில்லி, சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இறுதிச் சுற்று, ஆடுகளம் போன்ற பல படங்களைப் பாராட்டி எழுதியிருக்கிறேன். ஆ, பெர்க்மனைப் பாராட்டும் நீங்களா இதையெல்லாம் பாராட்டினீர்கள் என்று கேட்கக் கூடாது. ஒரு கோடீஸ்வரர் என் புத்தகத்தின் விலை என்ன என்று கேட்டார். நூறு ரூபாய் விலை உள்ள அந்த நூலை பத்தாயிரம் ரூபாய் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டேன். வேறு சில நண்பர்களுக்கு என் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தேன். என்னுடைய ஐரோப்பிய அளவுகோல் வேறு, இந்திய அளவுகோல் வேறு. சொல்லப்போனால் பெர்க்மெனையும், பஸோலினியையும், ஃபெலினியையும், ஹொடரோவ்ஸ்கியையும் ரசிக்கும் நான் தமிழ்ப் படங்களே பார்க்கக் கூடாது. அப்படி ஒரு காலத்தில் நான் இருந்தேன். அதனால்தான் கவுண்டமணியிடம் நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் சார் என்று கேட்டேன். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் வாழ்கிறேன். அதனால் தமிழ்ப்படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது கூட என் வேலை இல்லை. லௌகீக வாழ்க்கைக்காக, பணத் தேவைக்காக நான் தமிழ்ப் படங்களைப் பார்த்து விமர்சனம் செய்கிறேன். ஒரு நாவல் எழுதி, 50 லட்சம் ரூபாய் கிடைத்தால் நான் சீலே போய் விடுவேன். மூன்று ஆண்டுகள் கழித்து இன்னொரு நாவலோடுதான் தமிழ்நாட்டுக்கு வருவேன். அப்போது யாராவது அஜித்தை அறிமுகம் செய்தால் பார்க்க இத்தனை வசீகரமாக இருக்கிறீர்களே அஜித், நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று கேட்டிருப்பேன். என் தலையெழுத்து, ஒரு நாவல் எழுதினால் நாலாயிரம் ரூபாய் கிடைக்கிறது. என் வீட்டின் பணிப்பெண்ணின் சம்பளமே 5000. அதனால் ப்ளாக் சபாத் வேறு அனிருத் வேறு. என் எழுத்துக்களை ஊன்றி கவனித்தால் என் இரட்டை அளவுகோல்களை ஒருவர் அனாயாசமாகப் புரிந்து கொள்ளலாம்.