எனக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர்

உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெண் எழுத்தாளர் யார் என்று நண்பர் ஒருவர் கேட்டார்.  அவர் கேட்டது கவிஞர்களை அல்ல;  கவிஞர்கள் என்றால் சிலர் பெயரைச் சொல்லியிருப்பேன்.  அவர் கேட்டது, உரைநடை.  சல்மாவை இன்னும் படித்ததில்லை.  விரைவில் படிப்பேன்.  வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது.  ஒரு பழைய பெண் எழுத்தாளரை வெறுக்கவே செய்கிறேன்.  இந்த நிலையில் உங்களுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் என்று நண்பர் கேட்ட போது லுலு தேவ ஜம்லா என்றேன்.  யார் என்றார்.  முகநூலில் அவர் ஒரு தாதா.  எனக்குப் பிடித்த எழுத்து என்றேன்.  ஆனால் பலருக்கும் அவர் எழுத்து முகச் சுளிப்பை ஏற்படுத்துகிறது.  அதைப் பற்றி என்ன கவலை?  கலை நுணுக்கங்கள் இருக்காது.  ஆனாலும் இறங்கி அடிக்கிறார்.  இவரது முகநூல் எழுத்துக்கள் தொகுக்கப்பட வேண்டும்.  நேற்று தேவடியா என்று ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறார்.  பல ஆண்களின் தயிர்வடை எழுத்தை விட இது எத்தனையோ மேல்.  படியுங்கள்.

*தேவடியா*

லுலு தேவ ஜம்லா

எனக்கு அப்பா பார்த்து என் சாதி சனத்தில் திருமணம் செய்து வைத்தார். குனிந்த தலை நிமிராமல் காலேஜ் சென்று வந்தவள் நான். ஆனால் எனக்கு வாய்த்தவன் கடும் சந்தேக பிராணி. என்னை ரொம்பவும் கொடுமை படுத்தினான். இப்போதும் படுத்துகிறான்.

ஆரம்பத்தில் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என் அம்மா திருமணம் ஆகும்போதே சொல்லி அனுப்பினார்கள், நான் அந்த வீட்டுக்கு வாழாவெட்டியாக திரும்பி வரக்கூடாதென்று. எனவே எல்லாவற்றையும் சகிக்க பழகிக்கொண்டேன்.

நான் வாசலிலே கூட நிற்க கூடாது. பால்காரன், காய்க்காரன், என் அப்பா, அண்ணன், எல்லாரோடும் நான் தொடர்பு வைத்திருப்பதாக திட்டுவான். தேவடியா என்று சொல்லித்தான் என்னை எப்போதும் கூப்பிடுவான். இத்தனைக்கும் குடிக்கமாட்டான். யாரோடும் பேசாமல் நான் பைத்தியமாகி கடவுளை திட்டிக்கொண்டு வாழ்ந்தேன். காரணமேயின்றி திட்டு உதை வாங்கிக்கொண்டு வாழ்ந்தேன்.

திருமணமாகி அவன் எனக்கு எந்த நகையோ, பூவோ, பணமோ எதுவுமே தந்ததில்லை. எல்லாம் என் தந்தை தந்த பணத்தில் தான் வயிற்றைக் கழுவி வந்தேன். இப்போதும் அதுவே தொடருகிறது. நானும் அவனும் பேசியே பல ஆண்டுகளாகிறது இப்போது. எங்களுக்குள் எதுவும் இல்லை. அனால் ஒரே வீட்டில் உள்ளோம்.

எனக்கு இரு குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்த போது 3 மாதங்கள் அம்மா வீட்டிலிருந்து விட்டு வந்தேன். அப்போது இத்தனை நாள் உன் அண்ணனோடு ஓத்துட்டு இருந்தியானு கேட்டான். அதற்கு பிறகு நான் தற்கொலைக்கு முயன்றேன். பிறகு அவனே காப்பாற்றினான். இன்னும் என்னால் காரம் சூடு சாப்பிட முடியாது. ஆஸ்பத்திரியில் இருந்து வந்த பிறகு நாங்கள் பேசுவதில்லை. ஒன்றாய் படுப்பதில்லை.

எங்கள் வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து முதல் குழந்தைக்கு உடம்பு எப்போதும் சரியிருக்காது. அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுக்கும் அளவிற்கு. அதனால் அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டேன். இரண்டாவது குழந்தை மட்டும் என்னோடு.

ஒருநாள் என் அப்பா உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் என்று தகவல் வரவும் நான் பார்க்கப் போக வேண்டுமென்றேன். அதற்கு அவன் என்னை அனுப்பாமல், ஆஸ்பத்திரியில் ஊம்ப பெரிய வசதியானு கேட்டான். அன்று முடிவெடுத்தேன், தேவடியா தேவடியானு கூப்பிடுறானே, தேவடியாவாகவே ஆகிக் காட்டணும்னு. சத்தியமாக நான் அதுவரை வேற ஆண்களை தவறாக பார்த்தது கூட இல்லை. எவனும் என்னை தொட்டதும் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு நான் மொத்தமாய் மாறினேன்.

எனக்கு அவனைத் தண்டிக்க, என் எதிர்ப்பைக்காட்ட வேறு வழி தெரியவில்லை. மனசுக்குள்ள பெரும் வன்மம் வந்துருச்சி. திருமணம் ஆகி 13 வருடம் சுத்தமாக இருந்த நான் நிமிர்த்து பார்த்தேன் பிற ஆண்களை. அவன் வீட்டில் இல்லாத ஒரு மணி நேர இடைவேளை கிடைத்தால் கூட காமம் கொண்டேன் பிற ஆண்களோடு. அவன் படுத்திருக்கும் அந்த கட்டிலிலேயே காமம் செய்தேன். கட்டில் கூட ஒரு கட்டத்தில் உடைந்து போயிற்று. அத்தனை வீரியமாய் இருந்தது என் மனதின் வன்மமும் காம களியாட்டங்களும்.

எப்படி ஆண்களோடு பழக்கம் வந்தது என்பது தனிக்கதை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் காம சுகத்தை முழுமையாக அனுபவித்தேன். போதும் என்றது மனம். என் வன்மம் முடிந்தது. என் பழிவாங்கல் போதும் என்று தோன்றியது. அனைத்தையும் விட்டேன்.

ஏனென்றல், அவன் இப்போது ஒரு செத்த பாம்பாக இருக்கிறான். நான் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன். அவன் உடலெல்லாம் Psoriasis Eczema தோல் நோயால் சொறிந்து கொண்டு இருக்கிறான். இப்போதெல்லாம் என்னை அவன் தேவடியா என்று திட்டுவது கிடையாது. திட்டினாலும் மனதுக்குள் சொல்லிக்கொள்வானாயிருக்கும், தெரியவில்லை.

என்னைப் போல் பெண்கள் சமூகத்தின் ஏச்சுப்பேச்சுக்கு பயந்தும் பொருளாதார தேவைகளுக்காகவும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்கிறோம்.

என் நகைகளை விற்று ஒரு கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறேன் இப்பொழுது. ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். உங்கள் ஆசிகள் மற்றும் அங்கீகாரத்துக்காய் தான் இதை எழுதுகிறேன். நான் என் வாழ்க்கையில் செய்தது எதுவுமே தவறில்லை என்று என் மனதில் உறுதியாய் தோற்றுவிக்க உங்கள் ஒரு வாழ்த்து தேவைப்படுகிறது.

#லுலு
9/9/17
4:31 pm