பிரபலங்கள் எல்லோருமே தங்களுக்குள் ஒரு குறுகிய உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உலகத்தைத் தவிர வேறு உலகப் பிரஜைகளால் அவர்களோடு உரையாடவோ தொடர்பு கொள்ளவோ முடியாது. மற்றும் அவர்கள் எல்லோருமே நார்ஸிஸிஸ்டுகளாகவும் (Narcissist) இருக்கிறார்கள். தாங்கள் சொல்வதே சரி; மறுப்பவனெல்லாம் எதிரி.
நானும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தேன். சொல்லிக் கொண்டே வந்தவர் டபாரென்று நீங்களும் அப்படித்தான் என்று ஒரு குண்டைப் போட்டார். அடப் பாவி. நான் ஒரு நார்ஸிஸிஸ்ட் என்பது உண்மைதான். ஆனால் உலகத்தில் உள்ள எல்லோருமே நார்ஸிஸிஸ்டாக இருக்க வேண்டும் என்றல்லவா நான் விரும்புகிறேன்? முதலில் உங்களை நேசியுங்கள்; அதன் மூலம் பிறரையும் நேசிக்கத் துவங்குவீர்கள் என்பதுதானே என் செய்தி? மேலும், இப்படி ஒரு அபாண்டத்தை, பழியை என் முகத்துக்கு நேராகச் சொல்ல முடிவதே நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதற்கு சாட்சியாக இருக்கிறதே? அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதும் இனி உன் மூஞ்சியில் முழிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு ஓடி விடவில்லை நான். அந்த நண்பரோடுதான் காலை உணவும் உண்டேன். அந்த நண்பர் சொன்னதில் உண்மை இருக்குமா என்றுதான் யோசித்தேனே தவிர அவரைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அவர் அப்படி நினைக்க எந்தக் காரணத்தையும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக, யாரோடும் பேச வேண்டுமானால் கூட உடனே அந்த நண்பரை நான் அழைத்து விட மாட்டேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது என்னை அழையுங்கள் என்று சொல்லி விட்டுக் காத்திருப்பேன். சமயங்களில் ஒரு நாள் முழுதும் கூடக் காத்திருக்கிறேன். அப்படியும் வராவிட்டால் மீண்டும் ஒரு மெஸேஜ்தான் கொடுப்பேனே தவிர போனில் அழைக்க மாட்டேன். மிக நெருங்கிய நண்பர்களிடமே இப்படித்தான். இதற்கு விதிவிலக்கு ஒரே ஒரு நபர் தான். அவர் டாக்டர் ஸ்ரீராம்.
மேலும், நான் என்னை ஒரே ஒரு மனிதனாக நினைக்கவில்லை. எத்தனையோ எழுத்தாளர்களின் சாரம்தான் என் ரத்தத்திலும் சிந்தனையிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களின் அடியாராகத்தான் என்னை உணர்கிறேன்.
மேலும், என்னிடம் வேறோர் விதமான அடிமை மனோபாவம் இருந்து கொண்டிருக்கிறது. ஊரில் நான் வளர்ந்தது ஒரு சேரியில். தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் வாழும் தெரு. ஆனால் நான் அப்போது கருப்பாக இல்லாமல் பழுப்பாக இருப்பேன். பழுப்புத் தோலை நம்மவர்கள் வெள்ளை என்பார்கள். அதனாலேயே என்னை நாணயக்காரத் தெரு என்று நினைத்துக் கொண்டு நீ எந்தத் தெரு என்று கேட்கும் போது என் தெருவின் பெயரைச் சொல்லும் போது நானே என்னைச் செருப்பால் அடித்துக் கொண்டது போல் இருக்கும். ஏனென்றால், தெருவின் பெயரில் சாதி இருக்கும். நாங்கள் இருந்த வீடு ஓட்டு வீடு. அது திரு ராமசாமி என்பவர் பர்மாவிலிருந்து போரின் போது வங்காளம் வழியே ஓடி வந்து தான் எடுத்துக் கொண்டு வந்த தங்க நகைகளிலிருந்து கட்டிய வீடு. வீட்டின் நடுவே பளிங்குக் கற்களில் ராமசாமி தன் மனைவி பாப்பாத்திக்கு ஒரு தாயக் கட்டம் வேறு அமைத்துக் கொடுத்தார். பிறகு கள்ளுக்கடை வைத்து, சூதாடி தோற்று இளம் வயதில் செத்துப் போனார். அவருக்கும் பாப்பாத்திக்கும் 12 குழந்தைகள். அந்தப் பனிரண்டு குழந்தைகளையும் பாப்பாத்தி – அதுவரை உடம்பு பூராவும் நகைகளோடு வலம் வந்து கொண்டிருந்த ராஜாத்தி – கொத்துவேலை செய்து காப்பாற்றி ஊரோடு சேர்த்தார். பாப்பாத்தியின் பதினொன்றாவது பெண் பார்வதிக்குப் பிறந்தவன் தான் நான். என் தாய்மாமாக்கள் ஊரில் பெரிய ரவுடிகள். குத்து வெட்டெல்லாம் சகஜம்.
அது தனிக்கதை. சாவதற்கு முன் ராமசாமி தன் மனைவிக்காகக் கட்டிய வீட்டை வைத்து சூதாடித் தோற்றார். அந்த வீட்டில்தான் நாங்கள் பின்னர் வாடகைக்கு வந்தோம். தற்செயலாக நடந்தது அது. எந்த வருத்தமும் இல்லாமல் அம்மா அந்தப் பளிங்கு தாயக்கட்டத்தைப் பார்த்துக் கொண்டே பழைய கதையைச் சொல்வார்கள். அப்போது மாத ஆரம்பத்தில் வீட்டின் உரிமையாளரின் சேவகன் காலையில் ஆறரை மணிக்கு வந்து வாடகைப் பணத்துக்காகக் கத்துவார். அஞ்சு ரூபாய். அந்த அஞ்சு ரூபாய் இல்லாமல் ஏழெட்டு நாளாவது அந்த ஆள் வந்து கத்த வேண்டியிருக்கும். பிறகு அம்மா ராட்டி தட்டி விற்று, அந்த அவமானம் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள்.
தன்மானமே இல்லாத கேவலமான வாழ்க்கை அது. உங்களுக்கெல்லாம் உங்கள் இளம் பிராயம் ரொம்ப ரம்மியமாக இருக்கும். நினைத்து நினைத்துப் பார்த்து மகிழக் கூடியதாக இருக்கும். என் இளம் பிராயம் அவமானங்களால் நிரம்பியது. முக்கியமாக, தெருவின் பெயர். ”அந்தத் தெருவுல இருந்துக்கிட்டு எப்படி நீ வெள்ளையா இருக்கே?” உடனே பக்கத்தில் இருப்பவர் விளக்கம் கொடுப்பார். அவுங்கல்லாம் பறையங்க இல்ல; தொம்பருங்க. தெலுங்கு. அப்படித்தான் இருப்பாய்ங்க.
எப்படி வரும் கெத்து? நீங்கள் என்னை மேடையில் கவனித்தீர்கள் என்றால் தெரியும். ஓரமாகப் போய்த்தான் உட்காருவேன். யார் வீட்டுக்காவது போனால் அங்கே உள்ள சோஃபாவில் விளிம்பில்தான் அமர்வேன். விழுந்துடப் போறீங்க, நல்லா உக்காருங்க என்பார்கள் கவனித்தவர்கள். அப்போதும் நன்றாக முதுகைச் சாய்த்து அமர்ந்ததே இல்லை. இன்று வரை எந்த சோஃபாவிலும் முதுகைச் சாய்த்து ஹாய்யாக உட்கார்ந்ததே இல்லை. விளிம்புதான். கால் மேல் கால் போட்டு அமர்ந்ததே இல்லை. 25 வயது வரை அடிமை. அதற்கு மேல் அதை விட அடிமை. அரசு உத்தியோகம். அதுவும் ஸ்டெனோ. கிளார்க் என்றால் கூட தப்பித்திருப்பேன். ஸ்டெனோ என்றால் BJ தவிர மற்ற அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். தில்லியில் பரவாயில்லை. பத்து ஆண்டுகள் ராஜ வாழ்க்கைதான். ஆனால் சென்னை போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் குனிய வைத்துக் குத்தி விட்டார்கள். a typical catamite’s life. கும்பிடு போட்டு கும்பிடு போட்டு முதுகு நிரந்தரமாகவே வளைந்து விட்டது. இந்த நிலையில் நான் எங்கே ஈகோவுடன் வாழ்வது? யார் வேண்டுமானாலும் ஏறி மிதித்து விட்டுப் போகலாம் என்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறது.
இந்த நிலையில் நானே விரும்பினாலும் ஈகோவுடன் வாழ முடியாது. நான் இதுவரை யாரையும் வா போ என்றே விளித்தது இல்லை. 25 வயதே ஆன என் வீட்டுப் பணிப்பெண்ணைக் கூட வாங்க போங்க என்றே பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த ஆட்டோக்காரரையும் வா போ சொன்னதில்லை. சார் தான். வாங்க போங்க தான். இவ்வளவையும் காலையில் என்னிடம் என்னைப் பற்றிச் சொன்ன நண்பரிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் அவர் சொன்னார், உங்களைச் சுற்றி ஜால்ரா கூட்டம்தான் இருக்கிறது என்று. என் நண்பர் வட்டத்தில் அப்படி ஒருத்தர் கூடக் கிடையாது. எல்லோரும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்தான். இப்போதும் எனக்கு போன் செய்து என்னை விமர்சிக்கலாம். யார் வேண்டுமானாலும். ஆனால் என் எழுத்தின் மீதான அடிப்படை மரியாதை இருக்க வேண்டும். அவ்வளவுதான் நான் எதிர்பார்ப்பது.
நேற்று ஒரு கடிதம் முகநூலில் பார்த்தேன். அதை உங்களோடும் பகிர விரும்புகிறேன். இவர்களெல்லாம் ஜால்ராவா என்று நீங்கள் சொல்லுங்கள். எப்பேர்ப்பட்ட வாசகர்களை நான் உருவாக்கியிருக்கிறேன் என்பது பற்றி எனக்கு மிக மிகப் பெருமையாக இருக்கிறது.
அன்புள்ள சாரு..
இரண்டு நாட்களாக உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் விஷயத்தைப் பற்றிதான் நானும் பேசப்போகிறேன்.நானும் என்பங்குக்கு சற்று உங்களுக்கு மனஅழுத்தம் தரப்போகிறேன்..உங்கள் வாசகியாக எனக்கு அந்த உரிமை இருக்கிறது சாரு.
உங்களது ரசனை தான் சாரு எங்களுக்கெல்லாம் தீனி..கருப்புவெள்ளையாய் ஊரே Melancholy
எழுதியபோதுகூட நீங்கள் கொண்டாட்டமாய் எழுதியவர்..
நீங்கள் எழுதாமல் லத்தின் அமெரிக்க கதைகள் பற்றியெல்லாம் நாங்கள் எங்கு கண்டோம்.நீங்கள் சிலாகித்தீர்கள்..நாங்கள் தேடி வாசித்தோம்..
உலக சினிமா பற்றி நீ எழுதியபிறகுதான் நானெல்லாம் அதை பார்க்க ஆரம்பித்தேன்.. “அலைந்துதிரிபவனின் அழகியல் ” ,சினிமா சினிமா ” கட்டுரைகள் தேடிதேடிபடித்து படம் பார்த்த ஆள்கள் ஏராளம்..
கலகம்,காதல் இசை படித்துவிட்டு Daddy Yankee யின் Gasolina வை ரிங்டோனாக வைத்தவள் நான்..Cesario evora இன்றும் ப்ளேலிஸ்டில் வைத்து அவ்வப்போது கேட்கற அளவு உங்கள் ரசனை எங்களுள் வந்துவிட்டது..
எனக்கு உங்களை தனிப்பட்ட முறையில் தெரியாது சாரு..நான் உங்களிடம் பேசியது இல்லை..ஆனால் நான் உங்களிடம் உரிமையாக பேசக்காரணம் உங்கள் எழுத்து..அதனுடைய தரம்..அராத்து சிலமாதம் முன்பு எழுதியிருந்தார்..” சாருவிற்கு கொஞ்சம் நல்ல இலக்கியம்..சுமாரான இலக்கியமெல்லாம் தெரியாது..அவரை பொறுத்தவரை இரண்டுவகைதான்..ஒன்று உலகத்தரம்..இன்னொன்று குப்பை..”
எவ்வளவு உண்மையான அவதானிப்பு அது சாரு..நீங்கள் சிலாகித்தவைகளை கண்ணைமூடிக்கொண்டு வாசிப்போம்..அதனுடைய தரத்தில் நீங்கள் காம்ப்ரமைஸ் செய்துகொண்டதே இல்லை..நீங்கள் தூரப்போட்டது குப்பையாகத்தான் இருக்கும்.
சாரு ..உங்கள் வாசகர்களுக்கெல்லாம் ஒரு பொது குணம் இருக்கும்..கொண்டாட்டமான எழுத்தை யார் எழுதினாலும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம்..Roald Dahl வாசித்தவர் நீ்ங்கள்..உங்களது அதகளமான விமர்சனத்திற்கு பிறகுதான் விசிட்டர் வாங்கி படித்தேன்.
ஆனால் லுலுவுடைய கதை ஒரு குப்பை சாரு..நீங்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே வாரமலர் படிப்பதை நிறுத்தியிருக்கக்கூடும்.அதி்ல் அத்தனையும் அந்தரங்கம் பகுதியில் வரக்கூடிய க்ளிஷே பத்தி இது..வெளிப்படையாக ஆபாசமாக பேசி எழுத என்ன தைரியம் வேண்டிக்கிடக்கறது சாரு..ஆபாசம்கூட இல்லை, இது சுத்த சைக்கோத்தனமான பெர்வர்ஷன் .லுலு ஒரு தனிமனிதி..அவரைப்பற்றி எனக்கு ஒரு ஆர்வமும் இல்லை..ஆனால் எங்கள் சாரு கொண்டாடும் எழுத்து ஒரு குப்பையாக இருக்கூடாதே என்கிற பதைப்பில்தான் இ்த்தனைபேர் பேசுகிறோம்.இதை personal ஆக எடுக்கவேண்டாம்..
We love you charu
அன்புடன்
கஸல்