சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? – அபிலாஷ்

என் அன்புக்குரிய நண்பர் அபிலாஷ் என்னைப் பற்றியும் என் வாசக அன்பர்கள், நண்பர்கள் பற்றியும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்.  மனோதத்துவத்திலும் உளவு இயலிலும் ஆள் பலே கில்லாடி போல் தெரிகிறது.  பக்கத்தில் இருந்து பார்த்தது போல் எழுதியிருக்கிறார்.  ஆனால் ஒன்றே ஒன்றுதான் தவறு.  அபிலாஷ் உங்களைப் பாராட்டவில்லை, கிண்டல் செய்து திட்டியிருக்கிறார் என்று சொன்னால் (சொல்வார்கள்தான்) அதை நான் “அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையுடன் (பக்கத்தில் கேள்விக் குறி அல்ல; ஆச்சரியக் குறி) கடந்து விடுகிறேன்.

லேசர் கதிர்களைப் போல் உள்ளே புகுந்து பார்த்திருக்கிறார் அபிலாஷ்.  ஒரு எழுத்தாளனைப் பற்றி இத்தனை ரகளையான அலசலை நான் படித்ததில்லை.  அப்புறம் அவரது இன்னொரு புகார் பற்றி.  மார்க்கேஸ் மாதிரி என்று ஒருத்தரைச் சொன்னால் அந்த ஆளின் எழுத்து எனக்கு மார்க்கேஸை ஞாபகப்படுத்துகிறது என்றே பொருள்.  அசோகமித்திரனைப் படிக்கும் போது, சி.சு.செ., க.நா.சு., எம்.வி.வி., தி.ஜா, எஸ். சம்பத் போன்றவர்களைப் படிக்கும் போது அவர்கள் யாரையும் எனக்கு ஞாபகப்படுத்துவதில்லை.

மேலும், எனக்கு மார்க்கேஸ் மேல் மரியாதை இல்லை.  அவரது நூறாண்டுகளின் தனிமை ஒரு ஃபேக் நாவலாகப் படுகிறது.  அவரது சிறுகதைகள் குறுநாவல்கள் எல்லாம் எனக்குப் பிடிக்கும்.  மற்றபடி, யாரையும் யாரோடும் ஒப்பிட்டுப் பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை.  மனுஷைப் படிக்கும் போது சில லத்தீன் அமெரிக்கக் கவிகள் ஞாபகம் வருகிறார்கள்.  அதற்கான காரணத்தை நான் ஆயிரம் பக்கங்கள் அளவுக்கு விளக்கி விட்டேன்.

என்னை இந்த அளவுக்குப் புரிந்து கொண்டுள்ள அபிலாஷுக்கு என் முத்தங்கள்.

http://thiruttusavi.blogspot.in/2017/09/1_15.html

http://thiruttusavi.blogspot.in/2017/09/2_15.html