எனக்குப் பிடித்த கவிதை

அபிலாஷ் என்னைப் பற்றி எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.  அதைப் பாராட்டி பல நண்பர்கள் எழுதியிருந்தனர்.  என் வாழ்வில் என்னை இத்தனைத் துல்லியமாக அவதானித்து யாரும் எழுதியதில்லை.  என் எழுத்து பற்றி இவ்வளவு துல்லியமாக எழுதியவர் அராத்து. அபிலாஷ் ஒரு மனோதத்துவ நிபுணனைப் போல, ஒரு மந்திரவாதியைப் போல் என் மனசுக்குள் புகுந்து பார்த்து விட்டார்.

அடுத்து, கஸலின் கடிதம்.  இத்தனை துல்லியமாக நான் எழுதிய எல்லாவற்றையும் ஒரு ஆத்மா படித்திருக்கும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.  அதிலும் செஸாரியா எவோரா பற்றி எழுதி எத்தனைக் காலம் ஆகிறது!

பொதுவாக நான் முகநூலில் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் செலவிடுவேன்.  ஏதேனும் கண்ணுக்கு நன்றாகத் தென்பட்டால் படிப்பேன்.  இன்று அப்படி மேய்ந்து கொண்டிருந்த போது இந்தக் கவிதை என் கண்ணில் பட்டது.  கஸல் எழுதியது.  முகநூல் என்பது இப்போது ஒரு மாபெரும் கருத்துப் பரிமாற்ற வெளியாக மாறியிருப்பதோடு அல்லாமல், நம் எழுத்து முயற்சிகளையும் உடனுக்குடன் வெளியிடும் சாதனமாகவும் ஆகியிருக்கிறது.  ஒரு கவிதை எழுதினால் அதைப் பிரசுரிக்க முன்பெல்லாம் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.  இப்போது முகநூலில் ஒரே நிமிடத்தில் அதை வெளியிடலாம்.  உடனுக்குடன் அதைப் படிக்க ஆயிரமாயிரம் வாசகர்கள் தயார்.

கஸலின் கவிதை என்னை மிகவும் ஈர்த்து விட்டது. அவர் இதற்கு முன் எழுதிய எதையும் நான் படித்ததில்லை.  கவிதையில்  பல சந்திப்பிழைகள் இருப்பதால் இளம் பெண் என்று தெரிகிறது.  முன்பெல்லாம் இந்த சந்திப் பிழைகளைத் திருத்திய பிறகுதான் இங்கே வெளியிடுவேன்.  இப்போது அதற்கு நேரமில்லை.  குறிப்பாக அந்தக் கடைசி வரிகளின் சந்திப்பிழை மனதை உறுத்துகிறது.  கஸல், இதைப் புத்தகமாக வெளியிடும்போது திருத்தி வெளியிடுங்கள்.  மெழுகுத்திரிகளைப் பற்ற வை என்று வர வேண்டும்.  ஆனால் கவிதை பிரமாதமாக இருக்கிறது.

என்னுடன் ஒரு பயணத்திற்கு வருகிறாயா…
சற்று கால்கள் அலுத்து தீர நான் நடக்கவேண்டும்…என் உலகங்களின் சிறுபகுதியை உனக்கு நான் திறந்து காட்டட்டுமா ?
இந்த இரவில் சற்று உன்னையும் என்னையும் உதிர்த்துவிட்டு இந்த உலகத்தை காணலாம்.
நாம் வேறு வேறு பாதையைச் சேர்ந்தவர்கள்… ஆனாலும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.முன்பின் தெரியாதவனுடன் பயணிப்பது காதலனுடன் பயணிப்பதை விட மேலானது.என்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன…
காது நீண்ட கிழவிகளில் இருந்து கல்லைக்கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து இறந்த அக்காக்கள் வரை நிறைய கதைகள் வசமிருக்கிறது.
நான் களைத்து இருக்கிறேன்… என் இரவுகள் ஒரு சர்ப்பமாய் மாறி என் கழுத்தை நெறிக்கின்றன..
அந்த நாள்களில் நான் தேவாலயங்களின் மெழுகுதாங்கிகள் அடியில் சுருண்டு படுத்திருப்பேன்..
“என் இறைவா..என்னை ரட்சிப்பாயாக..கருணைகடலே..என்னை மன்னித்துவிடு.என் உடல் புலன்கள் புத்தி மனம் சொற்கள் செய்த செய்யப்போகிற பாவங்களை மன்னித்துவிடு..என்னை எடுத்துக்கொள்..எனக்கு தேவைகள் இல்லை..எனக்கு வாழத்தெரியவில்லை.இந்த நெடிய வாழ்க்கையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.
என் பெயர் எழுதிய தானியங்கள் தீர்ந்துபோகுமுன் என்னை எடுத்துக்கொள்.”
என் மன்றாடல்கள் வழியே நீ வருகிறாய்.
என் வெளிறிய கண்கள்வழி உன்னை நான் காணும்போது உன் ஔியானது என்னை கூசச்செய்கிறது நண்பா.பரிசுத்தமான ஒருவனை பயணநிமித்தமாய் காணும்போது தோன்றும் பரவசத்திற்காகவே இதோ..இரண்டு ரொட்டிகளை எடுத்துக்கொள்.
நான் தனித்திருக்கும் இரவுகளில் சாத்தான் என்னை துரத்துகிறான்..உண்மையில் சாத்தான் என்பது நமது தைரியம்..நமது சுயம்..நமது கீழ்படியாமை..நமது க்ரோதம்..நமது காமம்..நமது பொறாமை..நமது திருட்டு..
சாத்தான் இருட்டிலிருந்தப்படியே நம்மை இயக்குகிறான்..
ஒரு நாயை நேசிப்பது போல பன்றியை நேசிக்க வைக்கிறான்.
நாள்கிழமைகளில் தொழுகைநேரங்களில் தூங்க வைக்கிறான்..
ஒரு சாத்தானை பழக்கப்படுத்துவது என்பது அத்தனை எளிதானது..ஆனாலும் நான் மெனக்கெடவில்லை
திராட்ச்சை பழங்களில் நடந்து பழகிய என் கால்கள் ஒயின்சுவைக்காக வெட்டப்படுவது குறித்து எனக்கு புகார்கள் இல்லை.
இந்த உலகமானது இப்படிதான் இயங்கும் என்றானபின் எடுத்துக்கொள்ளவும் இழந்துபோகவும் காதல் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்னுள்..
ஒரு தூரதேச பயணத்திற்காக என் வாழ்நாள் முழுவதும் நான் சுள்ளிப்பொறுக்கிய கதையினை ஒரு நாடோடி பாட்டாக எழுதியிருக்கிறேன்.
என் பதிமூன்றாம் வயதில் நான் பிழிந்து புதைத்த ஒயினை எடுத்து வந்திருக்கிறேன்.
ஏதோ ஒரு காட்டில் ஆற்றங்கரையோரம் ஒரு கற்கூரையின் அடியில் குளிர்காயும் போது உனக்கு ஆலிவ் பழங்களை சற்று வாட்டி தருகிறேன்.
நண்பா..இந்த நிலவானது நமது ஆசை..பூரணமாய் ,குறைந்து கரைந்து காணமல் போவதற்கு முன் நான் உனக்காக அதை பறித்து அவித்து தருகிறேன்..
என்னளவில் எவனாவது வானத்தை கண்டவாறு தனியே எங்காவது அமர்ந்திருப்பான் என்றால்,அவன் கைகளை பற்றி முத்தமிடுவேன்.
போதும்..இந்த வாழ்க்கையில் கசங்கிய முகங்களை நான் தடவி வருகிறேன்.
இந்த மனிதர்கள்..ஒரு அன்பின் தொடுகைக்குகூட எத்தனை அஞ்சுகிறார்கள் தெரியுமா..சந்தேகிக்கிறார்கள் தெரியுமா..சுருங்கிவாடிய நெற்றிகள் இந்த வாழ்க்கையை பறைசாற்றுகி்ன்றன..
எனக்கென்று வாடிய நெற்றிகள் இருக்கின்றன…
நான் வாழ்ந்துவிடுவேன்..
உனது அன்பின் வெளிச்சமானது எனது நிலங்களை செழிக்கச்செய்கிறது..என் இருளை சற்று கேள்வி கேட்கிறது..
அனுமதியின்றி என்னை அத்தனை எளிதாய் அமைதிப்படுத்துகிறது..ஒரு கேவலுடன் என்னால் அழ ஆரம்பிக்க முடிகிறது..உன் முன் நான் மண்டியிடும்போது சற்று அந்த மெழுகுதிரிகளை பற்றவை..அவைதான் நாம்..அவ்வளவுதான் நாம்.