பக்வாஸ் – 2

ஒருவர் தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.  முன்கோபியாக இருக்கலாம்; 24 மணி நேரமும் தண்ணி அடிப்பவராக இருக்கலாம்; கோபம் வந்தால் தன் அருகில் இருப்பவர்களை நாலு சாத்து சாத்துபவர்களாக இருக்கலாம்; நாக்கை மடித்துக் கண்களை உருட்டி வாடா போடா என்று திட்டுபவராக இருக்கலாம்.   அதனால் பாதிப்பு கம்மி.  ஆனால் அப்படிப்பட்டவர்கள் அரசியலில் தலைமை தாங்க வந்தால் மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள்.  விரட்டி அடிக்கப்பட்டவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள்.   மேலே உள்ள எந்த குணமும் இல்லாதவர் கமல்.  நன்று.  ஆனால் இது எல்லாவற்றையும் விட மோசமான குணங்கள் சில உண்டு.  ஒன்று, அகந்தை. இரண்டாவது,  புகழ்பாடிகளை (sychophants) மட்டுமே தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டு அவர்கள் தனக்கு ஜால்ரா அடிப்பதையும் புகழ்வதையும் ரசித்துக் கொண்டிருப்பது.

அவருடைய ஆலோசர்களை – கட்சியின் முன்னணி நிர்வாகிகளை – பாருங்கள். ஸ்ரீப்ரியா, சிநேகன், பட்டிமன்றப் பேச்சாளர் ஞானசம்பந்தம், இத்யாதி இத்யாதி.  இன்னும் நாகேஷும் சந்தான பாரதியும் இருந்திருந்தால் கமல் படம் மாதிரியே இருந்திருக்கும்.  ஸ்ரீப்ரியா தான் இனிமேல் நமக்குக் கல்வி மந்திரி.  சிநேகன் கலாச்சார மந்திரி.  ஞானசம்பந்தம் பொதுப்பணித்துறை.

15 ஆண்டுகளுக்கு முன்னே நடந்த சம்பவம் இது.  மருத நாயகம் படத்துக்கான ஆலோசனை நடந்து கொண்டிருந்த காலம்.  என் நண்பரும் கமலின் intellectual think tank-இல் இருந்தார்.  நண்பர் உலக சினிமா, வரலாறு போன்ற துறைகளில் வல்லுனர்.  பலருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.  தமிழ், இந்தி சினிமா பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளைப் படித்தால் சினிமா பற்றிய பல மாயைகளிலிருந்து வெளியே வரலாம்.  ஒருநாள் அவர் கமலின் கதை ஆய்வுப் பணியிலிருந்து விலகி விட்டார்.  ஏன் என்று கேட்டேன்.  கமலின் அண்ணன் சந்திரஹாசன் இவரிடம் வந்து “நீங்கள் இனிமேல் கமலை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது; சார் என்றுதான் அழைக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

உடனே என் நண்பர் அந்தப் பணியிலிருந்து விலகி விட்டார்.  எப்பேர்ப்பட்ட ஜால்ராக் கூட்டம் பாருங்கள்.  நேற்றைய என் கட்டுரையோடு இதைச் சேர்த்துப் படியுங்கள், புரியும்.  இந்த விஷயத்துக்கும் கமலுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது.  அந்த அறிவுரையே கமலிடமிருந்துதான் போயிருக்கும்.  அதாவது அண்ணனை அழைத்து “இனிமேல் அவரை என்னை சார் என்று அழைக்கச் சொல்லுங்கள்” என்று கமல் சொல்லியிருக்க மாட்டார்.  ஆனால் அவருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை அவர் உணர்த்திக் கொண்டிருப்பார்.

என்னை ஏன் அந்த நடிகர் தே. மகன் என்றெல்லாம் திட்டினார்?  இந்தப் பன்னாடை என் வாழ்க்கையையே கெடுத்து விட்டானே என்பதுதான் நடிகரின் ஆதங்கம்.  டேய், என் கூடவே இருந்துகிட்டு என் படத்தையே திட்றியா, அதுவும் அந்த சாரு நிவேதிதா கிட்ட?  அதாவது, கமல் தன்னை ஜீனியஸ் என்று நினைக்கிறார்.  அப்படிப்பட்ட ஒரு ஜீனியஸின் படம் தப்பு என்றால் அவன் தப்பான மனிதன்.  அவன் என் விரோதி.  இதுதான் ஃபாஸிஸ்டுகளின் அடிமன ஓட்டம்.  அதனால்தான் கமல் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் விட ஆபத்தானவர்.  ஜெயலலிதாவும் இப்படிப்பட்டவர் தான்.    ஆனால் ஜெ. தனிப்பட்ட முறையில் சில நல்ல குணநலன்களைக் கொண்டவர்.  அடுத்தவர் மீது பரிவு, இரக்கம், அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கொண்டவர். அதனால்தான் அவர் இறந்த போது அத்தனை ஜனம் அழுதது.  அவர் காலில் விழுந்த கட்சிக்காரர் எல்லாம் அவரால் பணக்காரர் ஆனவர்கள்.  ஆனால் நம்மவரோ மற்றவரைப் பார்க்க வைத்துக் கொண்டு சாப்பிடுபவர் ஆயிற்றே!

எனக்குக் கமல் மீது தனிப்பட்ட விரோதம் என்கிறார்கள்.  எனக்குத் தனிப்பட்ட விரோதம் என்றால் அது பெருமாள் முருகன் மீதுதான்.  ஏய்யா, எல்லோரும் ஒரு கோட்டில் ஓடி பரிசு வாங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் போது நீர் மட்டும் ஏன் ஓடாமலேயே பரிசு வாங்குகிறீர் என்று.  மற்றபடி கமல் கட்சி நடத்தினால் எனக்கென்ன, நடத்தாவிட்டால் எனக்கென்ன?

இப்போது சொல்கிறேன், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.  கமலால் அதிக பட்சம் திமுகவுக்குக் கிடைக்கும் வாக்குகளைப் பிரித்து பெரும் குழப்பத்தையே உண்டு பண்ண முடியும்.  கடைசியில் அவருக்குக் கிடைக்கப் போவது மன உளைச்சல் மட்டுமே.  தென்னிந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட கமலின் பெயர் இன்று இந்தியா முழுவதும் தெரியவரும்.  புகழ் அதிகமாகும்.  ஆனால் பத்து அடியிலிருந்து விழுந்தால் வலி கம்மி.  அம்பது அடியிலிருந்து விழுந்தால் என்ன ஆகும்?  அவர் மிகப் பெரிய உயரத்துக்குப் போய் விட்டார்.  விஜயகாந்துக்கு என்ன நடந்ததோ அதை விட அதிக நட்டம் கமலுக்கு ஏற்படும்.  ஏனென்றால், ஆரம்பமே தப்பு.  அவரைச் சுற்றி இருக்கும் புகழ்பாடிக் கூட்டத்துக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?  மேலும் அவர் பேசிய அத்தனை விஷயங்களும் பேத்தல்.  இலவசக் கல்வி தருவேன் என்கிறார்.  இப்போது என்ன கல்விக்குப் பணமா வாங்குகிறார்கள்?  எல்லா அரசுப் பள்ளிகளிலும் இலவசக் கல்விதானே ஐயா?  ஆனால் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைத்த கல்வியும் என் தெருவில் குப்பை அள்ளிக் கொண்டிருக்கும் தலித் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கல்விக்கும் என்ன ஐயா சம்பந்தம்?  இதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுக்கு நீங்கள் என்ன மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?