23rd March at Goobe Book Store, Bengaluru

நான் ஒரு perfectionist.  தயிர் சாதம் சாப்பிட்டால் கூட அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாம் போட்டு மோர் மிளகாய் கொண்டு தாளிக்க வேண்டும்.  தயிர் புளித்திருக்கக் கூடாது.  பெண்கள் பூப்பு எய்துவதைப் போல, காலையில் சூரியன் உதயமாவதைப் போல பால் எப்போது தயிராக மாறுகிறது என்று தெரியாத நிலையில் அந்தத் தயிரைத்தான் பயன்படுத்த வேண்டும்.  தயிர் ஆவின் பாலில் உறையேற்றியதாக இருக்கக் கூடாது.  பசும்பால் அல்லது எருமைப்பால்.  சாப்பிட்டு விட்டு கையைக் கழுவினால் கை வெண்ணெய் பிசுபிசுக்க வேண்டும்.  சோப்புப் போட்டு இதமான வெந்நீரில் கழுவினால்தான் கை சுத்தமாக வேண்டும்.  இப்படித்தான் எல்லா விஷயங்களிலும்.

கவிதை வாசிப்பு பற்றி நமக்குத் தெரியும்.  கலைஞர், கவிக்கோ, கவிப்பேரரசு என்று திராவிடப் பாசறை வீரர்களிடமிருந்து நமக்கு அது அத்துப்படி.  ஆனால் வசன வாசிப்பு என்று ஒன்று இருக்கிறது.  எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளிலிருந்து ஒருசில பகுதிகளை ஒரு மணி நேரம் வாசிப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை.  அதைக் கேட்க முப்பது பேரிலிருந்து மூவாயிரம் பேர் வரைத் திரளுவதுண்டு.  தமிழில் அந்த நடைமுறை இல்லை.  ஜெயமோகனோ, எஸ்ராவோ அவர்களின் கதைகளை வாசித்து நாம் கேட்டதில்லை.  ஆனால் அவர்கள் ஆற்றும் உரை மற்றும் பேருரைகள் பல ஷ்ருதி டிவி கபிலன் புண்ணியத்தில் யூட்யூபில் கிடைக்கின்றன.  இலக்கியப் பேச்சில் இருவரும் வல்லவர்கள்.  எஸ்ரா அதில் மன்னர்.  ஆங்கிலத்தில் பல மாமன்னர்கள் உளர்.  ஆலன் சீலி அவர்களில் ஒருவர்.

ஆனால் வாசிப்பு என்பது தமிழில் இன்னும் பிறக்கவே இல்லை.  காரணம், யாருக்குமே தமிழை அழகாக வாசிக்கத் தெரியவில்லை.  எந்த இடத்தில் ஏற்ற வேண்டும், எங்கே இறக்க வேண்டும், எங்கே இடைவெளி விட வேண்டும், எங்கே அழுத்த வேண்டும்… ம்ஹும் ஒருவருக்கும்  தெரியவில்லை.  புத்தக வெளியீட்டு விழாக்களில் வரும் தொகுப்பாளர்கள் தமிழை வன்கலவி செய்வதை ரத்தக் கண்ணீருடன் கவனித்திருக்கிறேன்.  இலக்கியக் கூட்டங்களில்தான் இந்த வன்கலவி பயங்கரமாக நடக்கிறது.

நான் கொஞ்சம் சுமாராக வாசிப்பேன்.  ஆனால் ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாது.  எங்கே pause விடுவது என்பதுதான் பெரிய பிரச்சினை.  அதனால் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு Almost Island கருத்தரங்கில் என்னை ஸீரோ டிகிரியிலிருந்து (ஆங்கிலம்) வாசிக்கச் சொன்ன போது என் நண்பர் விவேக் நாராயணனை (சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு ஆங்கிலக் கவி) வாசிக்கச் சொன்னேன்.  திடீரென்று சொல்லவில்லை.  காலையிலேயே நான் கேட்டுக் கொண்டபடி அவர் அதற்கு மதியத்திலிருந்தே தயாரித்தார்.

வாசிப்பு ஒரு கலை.  நடிப்பு மாதிரி ஒரு கலை.  அதைப் பயிற்சி செய்ய வேண்டும்.  விவேக் நன்றாகவே வாசித்தார்.  பிறகு பார்வையாளர்கள் என் குரலையும் என் வாசிப்பையும் தமிழையும் கேட்க வேண்டும் என்று விரும்பியதால் தமிழ் ஸீரோ டிகிரியிலிருந்து சில கவிதைகளை வாசித்தேன்.  இசை போல் இருந்ததாகச் சொன்னார்கள்.  அவர்கள் அப்போதுதான் தமிழை முதல்முதலாகக் கேட்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் Hay Festival-ஐ சென்னையில் துவக்கி வைத்த வைபவத்தில் என்னுடைய நாவலிலிருந்து சில பகுதிகளை நான் வாசிப்பதிலிருந்து துவக்கலாம் என்று ஆசைப்பட்டார் அப்போதைய பிரிட்டிஷ் தூதர்.  எனக்கு ஆங்கில வாசிப்பு தெரியாததால் எக்ஸைல் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காயத்ரியை வாசிக்கச் சொன்னேன்.  அவர் தயங்கினார்.  அதனால் காவேரி என்ற பெண் எக்ஸைலில் உள்ள என் பெயர் பக்கிரிசாமி என்ற அத்தியாயத்தை வாசித்தார்.  பக்கிரிசாமியின் பராக்கிரமங்களைக் கேட்டு பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இனிமேலும் அப்படி என்னால் மற்றவர்களை வாசிக்கச் சொல்லி ஜல்லி அடிக்க முடியாது.  நானேதான் வாசிக்க வேண்டும்.

23 மார்ச் மாலை ஆறு மணி அளவில் பெங்களூர் சர்ச் சாலையில் உள்ள Goobe Book Store-இல் மார்ஜினல் மேனிலிருந்து சில பகுதிகளை வாசிக்க இருக்கிறேன்.  பெங்களூர் நண்பர்கள் வந்து கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.