ஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர்

ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர் முகநூலில் எழுதியிருப்பதற்காக அல்லது வேறொருவர் எழுதியதைத் தன் பக்கத்தில் போட்டதற்காக அவர் எல்லா ஊடகப் பெண்களிடமும் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். படுக்காமல் ஊடக வேலை கிடைக்காது என்று சொன்னால் அதன் உள்ளர்த்தம் என்ன தெரிகிறதா? எனக்கு நீண்ட காலப் பழக்கம் உள்ள எஸ்.வி. சேகர் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 86 வயதோ 96 வயதோ ஏன்யா ஒரு பெண்ணின் கன்னத்தைத் தட்டினாய் என்று கேட்டால், படுக்காமல் மீடியா வேலைக்கு வர முடியாது. அதனால் தட்டினால் தப்பில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒரு பெண்ணை உற்று நோக்கினாலே மேற்கத்திய நாடுகளில் குற்றம். இங்கே கன்னத்தில் தட்டுகிறார்கள். கேட்டால், படுத்துத்தானே மீடியா வேலைக்கு வந்தாய் என்று கேட்கிறார்கள். என்ன நாடுய்யா இது? இந்த நாட்டில் வாழ்வதற்காக வெட்கப்படுகிறேன். இன்னும் 50 ஆண்டுக் காலத்துக்கு பிஜேபி இந்தியாவில் தலையெடுக்க முடியாதபடி செய்து விட்டார்கள். இந்தியர்களின் தலையெழுத்து வாரிசு ஆட்சிதான் போல!