ஆண்டவன் நினைத்தால்…

சமீபத்தில் கோலா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி பேசியதை பத்திரிகையில் படித்தேன்.  அந்தப் பேச்சின் நடுவில் அரசியலுக்கு வர மாட்டேன் என்கிறார்.  பேச்சின் இறுதியில் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என்கிறார்.  வாயில் கெட்ட வார்த்தைதான் வருகிறது.

தமிழ்நாடு என்ற இடத்தில் ஒரு படத்துக்கு 60 கோடி (அறுபது கோடியா, இல்லை, அதுக்கும் மேலயா?) ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் அரசியலில் நுழையலாமா வேண்டாமா என்று ஜோசியம் சொல்வதைத் தவிர ஆண்டவனுக்கு வேறு ஜோலியே இல்லையா?  ம்?  இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்?  எதற்காக இப்படி நதிகளை இணைக்க வேண்டும் இணைக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார்?  நதிகளை இணைக்க எல்லோரும் வாட்ஸ் அப் செய்யுங்கள், நதிகள் எல்லாம் ஒன்னா சேந்து ஓடும்னு ஒரு ஃபேஷன் சாமியார் சொன்னார்.  அதை விடுங்கள்.  தமிழ்நாட்டில் இப்படி எதற்கெடுத்தால் நடிகன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வாழ வேண்டும் என்பது நம் தலை எழுத்து!  ஏதாவது ஒரு நாட்டில் ஒரு சினிமாவின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை இப்படி சமூகப் பொதுநிகழ்வாகவும் அரசியல் பற்றி நடிகர் உளறுவதைக் கட்டம் கட்டிப் போட்டு விவாதிக்கும் சம்பவமாகவும் மாற்றுவார்களா?  அப்படி ஒரு நாடு இந்தப் பூமியில் வேறு எங்காவது இருக்கிறதா?  இந்த நாட்டில்தானா சங்க இலக்கியம் பிறந்தது?  இந்த நாட்டில்தானா அரிய கலைப் பொக்கிஷங்கள் கோவில்களில் உருவாக்கப்பட்டன?  இந்த நாட்டைப் பற்றிப் பாராட்டி எழுத என்ன எழவு இருக்கிறது என்று தெரியவில்லையே?  இப்படி மருத்துவத் துறையிலிருந்தோ கல்வித் துறையிலிருந்தோ பொறியியல் துறையிலிருந்தோ இலக்கியத் துறையிலிருந்தோ உளறுவதில்லையே?  ஏன் இப்படி சூப்பர் ஷ்டார்களும் ஒலக நாயகர்களும் உளறிக் கொண்டே இருக்கிறார்கள்?