நான் ஏன் மோடியை எதிர்க்கிறேன்? – 1

தினம் ஒரு புத்தகம் என்று நான் பதிவிடும் நூல்களை இதைப் பார்க்க நேரும் நண்பர்கள் யாரேனும் வாங்குகிறீர்களா? அந்த நூல்கள் பற்றி ஒரு வார்த்தையாவது எழுத வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவலை அடக்கிக் கொண்டே அந்நூல்களின் அட்டைகளைப் பதிவிடுகிறேன். இதுவரை ஒரு நாள் கூட பதிவு வராமல் இருந்ததில்லை என்பதை கவனியுங்கள். இதையே ஒரு 35 வயதுக்கு உட்பட்ட யாரிடமாவது சொல்லியிருந்தால், செய்து கொண்டே வந்து 27-ஆவது நாள் எனக்கு குதத்தில் வலி, அக்குளில் கட்டி என்று சாக்குபோக்கு சொல்லி விட்டு லீவு எடுத்திருப்பார்கள்.

என்னிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஞானம் மட்டும் அல்ல; ஒழுங்கு (Discipline). வாரம் இரண்டு முறை ரெமி மார்ட்டின் குடித்துக் கொண்டிருந்த போதும் இந்த ஒழுங்கை மீறியதில்லை. ஒழுங்கை மீற வேண்டிய தருணங்களும் உள்ளன. நாடகக் கலைஞர்கள் தங்கியிருந்த ஒரு பெரிய வளாகத்துக்குள் மூன்று தினங்கள் யாரும் புகைக்கக் கூடாது என்று ஒழுங்கு பண்ணிய போது என் நாடகத்தின் முதல் காட்சியில் மேடையில் ஏறி ஒரு முழு சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். (நான் அப்போதும் புகைப் பழக்கம் உள்ளவன் அல்லன்). ஆனால் அதிகாரம் அடக்கு முறை என்று வந்த போது ஒழுங்கை மீறினேன். பொருள்? எப்போது ஒழுங்கு அடக்குமுறையாக மாறுகிறதோ அப்போது ஒழுங்கை மீறுங்கள். சமூகத்தின் ஆற்றொழுக்கான தன்மைக்கு ஒழுங்கு தேவைப்படும் போது ஒழுங்கை மீறுவது துக்கிரித்தனம்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டேன். நான் நைனித்தால் போய் வனத்தில் தங்கிய போது கூட தவறாமல் தினம் ஒரு புத்தகம் ஒழுங்கைக் கடைப்பிடித்தேன். ஆனால் புத்தகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் எழுதத் தொடங்கினால் கூட இந்த ஒழுங்கைக் கடைப்பிடித்திருக்க முடியாது. ஆரம்பித்தால் இழுத்துக் கொண்டு போகும். என் பட்டியலில் உள்ள சில நூல்களை நீங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்தும் வாசிக்கலாம். இந்த நூல்களில் சிலவற்றையாவது வாசிப்பதன் மூலம் நீங்கள் இந்திய வயப்பட்ட சிந்தனையிலிருந்து விடுதலை பெறலாம். அது என்ன இந்திய வயப்பட்ட சிந்தனை? மோடியும் மோடியின் ஆதரவாளர்களையும் அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இலக்கியத்திலும் சிலரை உதாரணமாகச் சொல்லலாம். பெயர் வேண்டாம். விவாதம் வேறு திசையில் மாறி விடும். அது இங்கே தேவையில்லை. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் – இந்தியாவின் பிராந்திய மொழியான ஒன்றில் சிந்தித்து அதிலேயே எழுதிக் கொண்டிருக்கும் நான் – மட்டும் எப்படி இந்த இந்தியவயப்பட்ட சிந்தனையிலிருந்து விடுதலை பெற்றேன்?

எல்லா மொழிகளிலும் கலைஞர்கள் ஒரே விதமாகத்தான் சிந்திக்கிறார்கள். கணியன் பூங்குன்றன் ஒரு உதாரணம். ஆனால் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதை நான் புரிந்து கொண்டது, லெவி ஸ்த்ராஸ் மற்றும் மிஷல் ஃபூக்கோவின் நூல்களைப் பயின்றதன் மூலமாகத்தான். அவை என் சிந்தனையின் அடித்தளத்தையும் பாதையையும் மாற்றி அமைத்து விட்டன. அந்தக் கல்வியின் முடிவில்தான் (2001) என் ஐரோப்பியப் பயணம் அமைந்தது. அப்போது நான் நேரில் கண்ட விஷயங்களும் அதை உறுதிப்படுத்தின. தேசியவாதத்தைத் (Nationalism) தன் நாட்டின் விடுதலை முழக்கமாகக் கொண்ட ஹிட்லர் 1930களிலும் நாற்பதுகளிலும் ஒரு மாபெரும் தலைவனாகக் கருதப்பட்டான். சில தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளும் இசைக் கலைஞர்களும் கூட ஹிட்லரைக் கொண்டாடினார்கள். (அந்தக் கூட்டத்தில் சேராமல் ஜான் பால் சார்த்தர் ஹிட்லரை எதிர்த்தார் என்பதால்தான் அவர் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.)

அவ்வாறு ஹிட்லரைக் கொண்டாடிய புத்திஜீவிகளில் அதி முக்கியமானவர் ஜெர்மானியத் தத்துவவாதி மார்ட்டின் ஹைடெக்கர் (1889 – 1976). ஜான் பால் சார்த்தரின் Being and Nothingness –இல் நாம் காணும் existential psychoanalysis ஹைடெக்கரின் Being and Time-ஐத்தான் பெருமளவு சார்ந்திருந்தது. ஹைடெக்கரின் சிந்தனையே சார்த்தரைப் பெருமளவு பாதித்தது. ஆனாலும் சார்த்தர் ஹிட்லரை எதிர்த்தார். ஹைடெக்கர் ஹிட்லரை ஆதரித்தார் என்பது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் மறைவு வரையிலும் அவர் நாஜிக் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். ஜெர்மானிய தேசியவாதம் உச்சத்தில் இருந்த 1933-இல் (இப்போதைய இந்தியா அப்படித்தான் இருக்கிறது) ஹைடெக்கர் நாஜிக் கட்சியில் சேர்ந்தார். அந்த வருடமே அவர் Freiburg பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் துணைவேந்தராக இருந்த போது பல்கலைக்கழகத்தில் அவர் வைத்ததே சட்டமாக இருந்தது. மிகக் கொடுமையான சர்வாதிகாரியாக நடந்து கொண்ட அவரை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்து கிளர்ச்சி செய்ததால் ஒரு ஆண்டில் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினாலும் ஹிட்லரின் மரணம் வரை அவர் நாஜிக் கட்சியின் உறுப்பினராகவே இருந்தார். உலகப் போர் முடிந்த பிறகு ஹிட்லரை அதுவரை ஆதரித்து வந்த பல புத்திஜீவிகள் பொதுவில் மன்னிப்புக் கேட்ட போதும் ஹைடெக்கர் அப்படி எதுவும் செய்யவில்லை. தன் நண்பர்களிடையே பேசும் போது மட்டும் “ஹிட்லரை ஆதரித்தது என் வாழ்விலேயே செய்த படு முட்டாள்தனமான செயல்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

என் நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ட்ரம்பின் தேர்தல் உரையைக் கேட்டுப் பாருங்கள். ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லீம்கள் மீதும் இந்தியர்கள் மீதும் நடக்கும் தாக்குதல்களை அவதானியுங்கள். இன்றைக்கு ட்ரம்ப்பும் ட்ரம்ப்பின் குண்டர்களும் உங்களை – அதாவது, மோடிஜீயை ஆதரிக்கும் உங்களை – எப்படி நடத்துகிறார்களோ அதே ரீதியில்தான் மோடியின் ஆதரவாளர்களும் இஸ்லாமியர்களை நடத்துகிறார்கள். அது ஏன் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிய மாட்டேன் என்கிறது?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நான் ஏன் மோடியை ஆதரித்தேன்? அதனால் எத்தனை பேரின் நிந்தனைகளை நான் கேட்டுக் கொள்ள வேண்டியிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் அத்தனை எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் மோடியை அப்போது எதிர்த்தார்கள். நானும் ஜோ டி க்ரூஸும் மட்டுமே மோடியை ஆதரித்தோம். இப்போது ஏன் மோடியை எதிர்க்கிறேன்? ”மோடிஜி சும்மாவா வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? பல நாடுகளில் இந்தியர்கள் ஆன் அரைவல் வீசா வாங்க ஏற்பாடு செய்து விட்டார், தெரியுமா?” என்று முகநூலில் ஒரு மோடி ஆதரவாளர் எழுதியிருந்தார். அடக் கடவுளே, குண்டியை மறைக்கக் கோமணம் இல்லை; குடிக்க பன்னீரா? ம்? உலக அளவில் பணத்தின் மதிப்பு அதல பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. காங்கிரஸும் காரணம்தான். ஆனால் மோடியின் மூன்றரை ஆண்டுகளில் பணத்தின் வீழ்ச்சி சரி செய்யவே முடியாத அளவுக்குப் படு பாதாளத்தை நோக்கிப் போய் விட்டது. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் தங்கள் வியாபாரத்தையே மூடி விட்டு – அவர் நிறுவனத்தில் பணியாற்றிய மொத்தம் 300 பேர் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள் – இப்போது நாடோடியாய் அலைந்து கொண்டிருக்கிறார். மோடியின் பொருளாதாரக் கொள்கைதான் காரணம்.

தேர்தலில் மோடியை எதற்குத் தேர்ந்தெடுத்தார்கள் மக்கள்? ஊழலை ஒழிக்க. அடுத்து, விலைவாசியைக் கட்டுப்படுத்த. விலைவாசி ஏறி உட்கார்ந்திருக்கும் இடத்தை அண்ணாந்து பார்த்தால் நம் கழுத்து முறிந்து விடும். ஊழல் ஒழிந்ததா? கிழிந்தது. எல்லாம் மோடியின் வாய்ச் சவடால் என்று தெரிந்து விட்டது. ஒரு ஊழலைக் கூட அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாவற்றையும் சி.பி.ஐ. ஒரே கட்டாகக் கட்டி யமுனை நதியில் போட்டு விட்டது போல. (தமிழ்நாட்டில் விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. பகிரங்கமாகவே வாபஸ் பெற்று விட்டதை நினைவில் கொள்ளவும்.) இப்போது கூட காஷ்மீரில் ஆசிஃபா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றச் சொல்லித்தானே மோடி ஆதரவாளர்கள் ஊர்வலம் போகிறார்கள்? ஆக, மோடி பதவிக்கு வந்த பிறகு அவரால் ஊழல்வாதிகளின் மீது சுண்டு விரலைக் கூட வைக்க முடியவில்லை.

ஆனால் பிரச்சினை அது அல்ல. அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறது. இது சர்வாதிகாரத்துக்கே இட்டுச் செல்லும். மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக தேசியவாதம் என்ற ஃபாஸிஸ எண்ணம் விஷத்தைப் போல் விதைக்கப்பட்டு விட்டது. அதன் ஒரு அடையாளம்தான் வட இந்திய நகரங்களில் நூறு அடி நூற்றைம்பது நீளத்துக்குப் பறக்கும் தேசியக் கொடி. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான தேசியக் கொடிகளை ஒருவர் அமைக்க வேண்டுமானால் அதற்குப் பல வகையான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கொடிகளை இரவு ஆறு மணிக்கு மேல் இறக்க வேண்டியதில்லை. நிரந்தரமாகப் பறக்கலாம். ஆனால் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். கொடிக்கு ஏதேனும் பழுது என்றால் கொடியின் பொறுப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதெல்லாம் ஒரு பெரிய அமைப்பு ரீதியான விஷயம். இதை வட இந்திய நகரங்களில் பல பெரிய மனிதர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மோடி ஆதரவாளர்கள். இதையெல்லாம் ஒரு வார்த்தை விமர்சனம் செய்தால் நீங்கள் தேசத் துரோகி. இப்படித்தான் கனையா லால் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பேசினார். நமக்கு வறுமையிலிருந்தும், சாதிப் பாகுபாட்டிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் ஆஸாதி வேண்டும் என்று பேசினார். ஆஸாதி என்றால் விடுதலை. ஆஹா, இவன் இந்தியாவைப் பிரிக்க நினைக்கிறான், பிரிவினைவாதி, தேசத் துரோகி என்று ஜெயிலில் போட்டு விட்டது மோடி அரசு.

the next part will appear tomorrow…