பாலாவும் நானும்…

பாலகுமாரனுக்கும் எனக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிக நெருங்கிய நட்பு இருந்தது.  பல முறை அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  நானும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.  என் எழுத்தைப் பற்றி பிரமித்து பிரமித்துப் பேசுவார்.  நீ வா போ தான்.  நான் அவரிடம் சொல்வேன், பாலா என் 25-ஆவது வயதில் வெளியான ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் என்ற தொகுப்பில் வந்த உங்கள் கதை ஒன்றைத் தவிர உங்களுடைய வேறு ஒரு கதையோ நாவலோ நான் படித்ததில்லை என்று.  அதைப் பற்றியெல்லாம் புகார் செய்ய மாட்டார்.  உடையாரைப் படி என்பார்.  எடுத்துக் கொடுப்பார்.  அடுத்த முறை பார்க்கும் போது உடையார் படித்தாயா என்று ஆர்வத்தோடு கேட்பார்.  இல்லை பாலா என்பேன் சிரித்துக் கொண்டே.  உடனே விட்டு விடுவார்.

ஆனால் கணையாழியில் அவருடைய 25 வயதில் எழுதிய ரொமாண்டிக் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்வேன்.  சிறுபிள்ளை மாதிரி குதிப்பார்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நார்ட்டன் ரோட்டில் வசித்த போது என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தான் அவர் சகோதரியின் வீடு இருந்தது.  தினந்தோறும் ஸ்கூட்டரில் அங்கே வருவார்.  பார்ப்பேன்.  பிறகு நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் என்ற பெயரில் ஏதோ ஒன்றைச் செய்வார்.  உணவுக் கட்டுப்பாடு அறவே கிடையாது.

சின்ன வயதிலேயே அசோகமித்திரன், ஆதவன், இ.பா., கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா. (லா.ச.ரா. வெறியன் அப்போது), கு.ப.ரா. என்று நான் ரொம்பவே கெட்டுப் போயிருந்ததால் பாலாவின் எழுத்தோடு எனக்குத் தொடர்பு இல்லை.  முதலில் ஜெ.கே. அடுத்து சுஜாதா.  அதோடு நேராக அ.மி., எம்.வி.வி. என்று போய் விட்டேன்.

ஆனாலும் பாலாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  எழுத்தைத் தாண்டி பல காரணங்கள்.  ஒன்று.  சினிமா.  பாட்ஷா, நாயகன் போன்ற பல படங்களுக்கு அவர் வசன கர்த்தா.  அதை விட புதுப்பேட்டைக்கு அவர் தான் வசனம்.  அந்த இடத்தை நிரப்ப ஆளே இல்லை.  சினிமா வசனத்துக்கு ஒரு உயர்தர ஸ்தானத்தைக் கொடுத்தார் அவர்.

  1. பெண்களை அவரும் அவரைப் பெண்களும் நேசித்தது. பெண்களை அவர் அளவுக்கு மரியாதை செலுத்திய ஒரு மனிதரை நான் கண்டதில்லை. துளிக்கூட possessiveness இருக்காது அவரிடம்.
  2. அவர் அளவுக்கு அடக்கமான அன்பான மனிதரை நாம் பார்ப்பது அரிது. அன்பின் மொத்த வடிவம். இரவு பத்து மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டி, தான் எழுதிய புதிய புத்தகத்தைக் கொடுத்து விட்டுப் போவார்.  அடுத்த சந்திப்பில் படித்தாயா என்ற கேள்வி வரும்.  வழக்கமான பதில் தான்.  இல்லை.  கவலையே பட மாட்டார்.  மீண்டும் ஒருநாள் இரவு பத்து மணிக்கு இன்னொரு புதிய புத்தகம்.

கடைசியில் சென்ற ஆண்டு அவருடைய ஒரு புத்தகத்தைப் படித்து பிரமித்தேன்.  ஆன்மீக நூல்.  இது போதும்.  யோகியின் சாரம்.

பல சித்து வேலைகள் செய்திருக்கிறார்.  அதைப் பற்றிச் சொல்ல மாட்டேன்.  போலிகள் உலவும் பூமி.  நேரில் சொல்கிறேன்.  இவ்வளவு அன்பான மனிதனும் உண்டா என்று நினைக்கும் போது பொங்கிப் பொங்கி அழ நேர்கிறது.  சென்ற மாதம் பூராவும் நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.  பாலா, இப்படிச் சொல்லாமல் போய் விட்டாயே?  இரவு பத்து மணிக்கு வந்து வீட்டுக் கதவைத் தட்டி தன்னைப் படிக்கவே படிக்காத ஒருத்தனிடம் புத்தகம் கொடுக்க  இனி யார் இருக்கிறார்கள்?