பாலா உங்களுக்குக் கொடுத்த புத்தகங்களைப் படியுங்கள் சாரு என்று பாலாவின் வாசகர் ஒருவர் எனக்கு அறிவுரை நல்கியுள்ளார். நான் மிகத் தெளிவாக பாலா பற்றிய என் பதிவுகளில் அவருக்கும் எனக்குமான நட்பு பற்றிச் சொல்லியிருக்கிறேன். அதைப் படித்த பிறகும் இப்படி எனக்கு அறிவுரை சொல்வதிலிருந்து அவர் என் எழுத்தை அறவே படித்ததில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. நான் இலக்கியம் சாராத எதையுமே படித்ததில்லை. பாலாவின் எழுத்து அனைத்தும் வெகுஜன எழுத்தில் அடங்குவது. Bala is a poor man’s Janakiraman.
நான் வெகுஜன எழுத்தைப் படிப்பதில்லை. இதுவே பாலா கேரளத்தில் இருந்திருந்தால் அவர் எழுதிய எல்லாவற்றையும் இலக்கியரீதியாகவே எழுதியிருப்பார். இங்கே வெகுஜன எழுத்துக்குத்தான் பணம் கிடைக்கும். அவரால் வெறும் இலக்கியம் எழுதி வாழ்ந்திருக்க முடியாது.
நான் பாலாவை எப்படி மதிக்கிறேன், அவருடைய பெருமை என்ன என்பதை என் பதிவுகளில் தெளிவாக எழுதியிருக்கிறேன். உங்கள் ரசனைகளை என் மீது திணிக்காதீர்கள். என்னை பாலாவைப் படியுங்கள் என்று சொல்லும் நண்பர்களை நான் அசோகமித்திரனையும், சி.சு. செல்லப்பாவையும், ஆதவனையும், க.நா.சு.வையும், தஞ்சை ப்ரகாஷையும், நகுலனையும், ந. பிச்சமூர்த்தியையும், கு. அழகிரிசாமியையும், சார்வாகனையும், சா. கந்தசாமியையும், ந. முத்துசாமியையும், ப. சிங்காரத்தையும் படிக்கச் சொல்வேன். படித்தால் நீங்கள் பாலாவை வேறு விதமாக அணுகுவீர்கள்.
சென்ற ஆண்டு ஒருநாள் என் நண்பர் ராம்ஜி இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு பதில் சொல்வதை விட, எது இலக்கியம் இல்லை என்று சுலபமாகச் சொல்லி விடலாம். அதையும் என் தம்பி சொல்லியிருக்கிறான் என்று சொல்லி, பாலா பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த ஒரு சிறிய குறிப்பின் லிங்கைக் கொடுத்தேன். ஆனால் ஏண்டா கொடுத்தோம் என்று ஆகி விட்டது வேறு கதை. என் உயிர் நண்பரான ராம்ஜி அந்தக் கணமே ஜெயமோகனின் தீவிர விசிறியாகி அவருடைய பல புத்தகங்களைத் தருவித்துப் படிக்க ஆரம்பித்து விட்டார். எனவே நீங்களும் பாலா பற்றி ஜெ. எழுதிய அந்தக் குறிப்பைப் படித்து விடுவது நல்லது.
இதனால் எல்லாம் பாலா மீது எனக்கு மரியாதை குறையாது. பாலாவை நான் பார்க்கும் கோணம் வேறு. அதை நான் என்னுடைய இரண்டு பதிவுகளில் எழுதியிருக்கிறேன். கடவுளே என்னிடம் வந்து நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன் சாரு, உன் மதிப்பீடு என்ன என்று கேட்டால், அது வெகுஜன நாவலாக இருந்தால் எடுத்துட்டு ஓடிரு; நாம் கடவுள் – பக்தன் என்ற ரீதியிலேயே சந்திப்போம்; எழுத்து என்று வந்து விட்டால் நீர் அல்ல; நான் தான் நெற்றிக்கண்ணைத் திறந்து உம்மைச் சுட்டெரிப்பவனாக இருப்பேன், கபர்தார் என்றே சொல்வேன். யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்.
நட்பு வேறு; இலக்கியம் வேறு. நான் உங்கள் வழியில் குறுக்கே வர மாட்டேன். நீங்களும் அப்படியே நடக்கலாம். பார்க்கில் ஒரு ஆள் என்னை தேவனின் புத்தகங்களைப் படிக்கச் சொன்னார். அவரைத் திட்டி நாலு பக்கம் எழுதினேன். இனிமேல் அப்படித் திட்ட மாட்டேன். இப்படித்தான் எழுதுவேன். நல்ல இலக்கியவாதிகளாகப் பரிணமித்திருக்க வேண்டியவர்களையெல்லாம் தமிழ்ச் சமூகம் வணிக எழுத்தாளர்களாக மாற்றி விட்டது. அது பற்றிய போதம் உங்களுக்கு வேண்டும். இல்லையேல் இந்தச் சமூகத்துக்கு விடுதலையே இல்லை.