பாலாவும் நானும் – 4

பாலா பற்றிய சிலரது இரங்கல் குறிப்புகளைப் படித்தேன். அறியாமையில் பேசுகிறார்கள். வேறு என்ன சொல்ல இருக்கிறது? நேற்றைய குறிப்பில் ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். பாலாவையும் சுஜாதாவையும் வெகுஜன எழுத்தாளர்களாக வைத்திருந்தது தமிழ்ச் சூழல்தானே அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.

ஒரே ஒரு உதாரணத்தோடு இந்தப் பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். சுஜாதாவின் தொடர்கதை ஒன்று வெகுஜன இதழில் வெளிவர ஆரம்பித்தது. இரண்டு மூன்று வாரத்திலேயே ஒரு ஜாதி பற்றிய குறிப்பு வர – அவர் ஒன்றும் பெருமாள் முருகனைப் போல ஒரு ஜாதியினர் கோவிலில் வைத்து கூட்டுக் கலவி செய்கிறார்கள் என்றெல்லாம் எழுதவில்லை; ஜாதியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார் – அந்தத் தொடரை நிறுத்தச் சொல்லி அந்த ஜாதியிலிருந்து மிரட்டல் வந்தது. தொடரும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதே விஷயம் பெருமாள் முருகன் விஷயத்தில் எப்படி நடந்தது? அவர் குறிப்பிட்ட ஜாதியினர் அவருக்குப் பிரச்சினை கொடுத்தனர்; அரசு விசாரணை, மிரட்டல் எல்லாம் வந்தது. ஒருசில நாட்களிலேயே நியூயார்க் டைம்ஸ் உட்பட உலகின் எல்லா பத்திரிகைகளிலும் அவர் பெயரும் பேட்டியும் வந்தன. எனக்குத் தெரிந்து இப்போது 20 ஐரோப்பிய மொழிகளில் அவர் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் சல்மான் ருஷ்டி அளவுக்கு ஆகி விட்டார். துக்ளக்கில் கூட சோ தலையங்கம் எழுதியிருந்தார் என்றால் இந்தப் பிரச்சினையின் வீச்சை நாம் புரிந்து கொள்ளலாம். இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கு நோபல், புக்கர் போன்ற ஒரு சர்வதேசப் பரிசு கிடைக்கும். அதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை.

ஆனால் சுஜாதா விஷயத்தில் என்ன நடந்தது? தொடர் நிறுத்தப்பட்டது. முற்றுப் புள்ளி. அதோடு முடிந்தது கதை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொண்டால் தமிழ்ச் சமூகம் இனியாவது உருப்படும். இல்லாவிட்டால் நஷ்டம் எனக்கு இல்லை.

என்ன வித்தியாசம் என்றால், சுஜாதா பாலா இருவரும் இயங்கிய தளம் வெகுஜன எழுத்து. இருவருமே தமிழ் உரைநடையில் ஜாம்பவான்கள். கதை சொல்வதில் கில்லாடிகள். பெருமாள் முருகன் எந்த விதத்திலும் இந்த இரு ஜாம்பவான்களின் நிழலைக் கூடத் தொட முடியாது. ஆனால் அந்த இருவரும் வெகுஜன தளத்தில் இயங்கினார்கள். பெருமாள் முருகன் இயங்கியது இலக்கியத் தளம். பெருமாள் முருகனின் இலக்கியம் படு மட்டமான, மூன்றாந்தரமான எழுத்து என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. சுஜாதா பாலா இருவரின் எழுத்தும் வெகுஜன எழுத்தின் உச்சங்கள். ஆனாலும் இருவராலும் தமிழ்நாட்டு எல்லையை விட்டுத் தாண்ட முடியாததன் காரணம், மேலே குறிப்பிட்டதுதான்.

ஆக, அந்த இருவரும் இலக்கியத்தின் பக்கம் நகர முடியாததன் காரணம், சூழல். மேலும் இருவருமே இலக்கியத்திலிருந்துதான் வெகுஜன எழுத்தின் பக்கம் நகர்ந்தார்கள். வெகுஜன எழுத்து, அது எத்தனைதான் நன்றாக இருந்தாலும் சர்வதேச இலக்கிய உலகம் தொட்டுக் கூடப் பார்க்காது. இதுவே மலையாள இலக்கியச் சூழலைப் போல் இருந்திருந்தால் சுஜாதா ஒரு மரியோ பர்கஸ் யோசா போலவும் பாலா ஒரு பாவ்லோ கொய்லோ போலவும் எழுதியிருப்பார்கள்; அறியப்பட்டிருப்பார்கள்.

இத்தோடு இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்.