அற்புதத் தருணங்கள்…

இன்னும் ரெண்டு நாள் பேப்பர் படிக்கவில்லை.  நாட்டு நடப்பு தெரியாது.  ஒரே நோக்கமாக ஊரின் மிக அழகான பெண் புத்தகத்தை கிண்டிலில் (இங்கே நடுவில் நான் க் போடுவதில்லை.  ஆங்கில வார்த்தைகளோடு தமிழைச் சேர்க்கும் போது எதற்கு ஐயா ஒற்று எழுத்தைப் போட்டு உயிரை வாங்குகிறீர்கள்?  தமிழ்ச் சினிமா!!!) போட்டு விட்டுத்தான் மறுவேலை என்று உட்கார்ந்தேன்.  வார்த்தைக்கு வார்த்தை ஒற்றெழுத்தைப் போடுவதிலேயே நேற்று முழுவதும் போய் விட்டது.  இன்றும் முழுநாளை முழுங்கி விடும்.  நீங்கள் யாருமே இது பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள் என்று தெரியும்.  அதும் என் சக எழுத்தாளப் பயல்கள் இது பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.  ஆனால் என் உயிர் உள்ளவரை என் நூல்களில் இலக்கணப் பிழையோ ஒற்றுப் பிழைகளோ இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஊரின் மிக அழகான பெண் முடியும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்தலாகாது என்று இருக்கிறேன்.  ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை உலகத்துக்குச் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும்.  எனவே இதில் உட்கார்ந்து விட்டேன்.  நேற்று லண்டனிலிருந்து ஒரு நண்பர் போன் செய்தார்.

உலக இலக்கியம் படிக்க வேண்டும்.

ஆஹா, ரொம்ப நல்ல விஷயம். படிங்க.

ஆனா, தமிழில்தான் படிப்பேன்.

ஐயோ, மொழிபெயர்ப்பா, அப்படீன்னா அப்புறம் பேசலாம்.

இல்லை, தயவுசெஞ்சு சொல்லுங்க.

அப்போன்னா ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த எல்லா புத்தகங்களையும் படிச்சுடுங்க… (இலக்கணப்படி எல்லாவுக்குப் பிறகு “ப்” வர வேண்டும்.  ஆனால் எனக்கு இலக்கணத்தை விட மொழியின் இசை/லயம் முக்கியம்.)

இந்த உரையாடல் முடிந்ததா, நேற்று மாலையே ஜி. குப்புசாமியிடமிருந்து போன்.  குப்புசாமி போன் என்றால் கொஞ்சம் அதிக நேரம் பேசுவேன்.  அவர் அழைத்த போது ஏதோ கைவேலையாக இருந்ததால் அரை மணி நேரம் கழித்து அழைத்தேன்.  அவர் சொன்னதன் சுருக்கம்: அவர் வசிக்கும் ஆரணியில் ஒரு புத்தக விழா நடக்கிறது.  அங்கே ஒரு இளைஞர் என் புத்தகங்களைத் தேடியிருக்கிறார்.  விழா நடத்திய நண்பர் என் புத்தகங்களில் இரண்டு பிரதிகள் மட்டுமே வாங்கி வைத்திருக்கிறார்.  (அதுவே அதிகம்!  ஆரணியில் யார் சாருவைப் படிக்கப் போகிறார்கள்?)  என் நூல்கள் அனைத்தும் ஏற்கனவே விற்று விட்டபடியால் வாங்க வந்த நண்பருக்கு ஒரே ஏமாற்றம்.  ரொம்பவும் வருத்தப்பட்டிருக்கிறார்.  உடனே குப்புசாமி, சாரு என் நண்பர்தான்; அவருடன் பேசுகிறீர்களா என்று கேட்க, இளைஞர் “ஐயோ, அவரோடு போனில் பேசுவதா?” என்று பயந்து நடுங்கிப் போயிருக்கிறார். அது மட்டும் அல்லாமல், குப்புசாமி சொன்னது, ”அடடா, அந்த இளைஞரின் உணர்வு வெளிப்பாட்டை நான் எப்படிச் சொல்வேன்!  ஒரு எழுத்தாளனுக்கு இதை விடப் பாராட்டு வேறு என்ன வேண்டும்?  அப்படியே அந்த இளைஞர் உணர்ச்சிப் பரவசத்தில் இருந்தார்.  அப்போதுதான் போனில் அழைத்தேன். இப்போது அவர் போய் விட்டாரே…”

அவர் நம்பர் இருந்தால் கொடுங்கள், நானே அழைத்துப் பேசுகிறேன் என்றேன்.  நல்லவேளையாக நம்பர் இருந்தது.  இன்று காலை அழைத்தேன்.  எடுக்கவில்லை.  பிறகு அதே நம்பரிலிருந்து அழைப்பு வந்தது.  நான் எடுக்கவில்லை.  பழிக்குப் பழி.  பிறகு ஒரு அரை மணி கழித்து அழைத்தேன்.  எடுத்தார்.  எடுத்த எடுப்பில் நான் யார்னு தெரியுதா, கண்டு பிடிங்க பார்க்கலாம் என்றேன்.  ஒருசில நொடிகளே தயங்கியவர் ஆ சாரு என்று அலறினார்.  அவரால் பேசவே முடியவில்லை.  ஐயோ, சாருவா.  ஐயோ இப்படி ஆகிப் போச்சே.  அம்மா.  ஐயோ.  சாரு.  ம்… முடியல.  சாரு…  ஐயோ.  இப்படிப் பேச முடியாம ஆகிப் போச்சே.

அட, relax man.  Cool cool…

அம்மாடி… அம்மாடி… ஐயோ…  சாரு ஒன்னு பண்றேன்.  ஒரு பதினைஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிட்டா எடுப்பீங்களா?  இப்போ எனக்கு வார்த்தையே வர மாட்டேங்குது.

அவர் திணறிய திணறலை, அவர் அடைந்த அதிர்ச்சியை என்னால் வார்த்தைப்படுத்த முடியவில்லை.

அரை மணி கழித்து அழைத்தார்.  தெளிவாகப் பேசினார்.  பெயர் தாரகராமன்.

இவ்வளவு பெரிய பெயரை என்னால் சுலபமாக அழைக்க முடியாதே, கூப்பிடுகிற பெயர் என்ன?

விஷ்வா.  ஐயோ இப்டி ஆகிப் போச்சே.  ஐயோ அம்மா…பேச முடிலியே.

என் நூல்கள் பலவற்றைப் படித்திருக்கிறார்.  விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து ஒரு மாதம் ஆகிறது.  காலையில் என்ன சாப்டீங்க என்று கேட்டேன். தோசை என்றார்.  தொட்டுக்க?  மறுபடியும், “ஐயோ, இப்டி ஆகிப் போச்சே, அம்மா, அம்மா…” என்றுதான் பதில் வந்ததே தவிர தொட்டுக்க என்ன என்று சொல்லவில்லை.

சரி, என்னா தொட்டுக்கிட்டீங்க?

கடைசியாக அது சாம்பார் என்று தெரிந்தது.  பிறகு அவரும் அதே கேள்வியை என்னிடம் கேட்டார்.  நான் தோசையும் ஹில்ஸா மீன் குழம்பும் என்றேன்.

மனிதர்களின் உறவு இல்லாமல் தனியனாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளனின் வாழ்வில் இது போன்ற அற்புதத் தருணங்கள் அவ்வப்போது வந்து போகின்றன.