ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்ளலாம். நாம் எல்லாரும் 1930களில் ஜெர்மனியில் வாழ்கிறோம். நமது தலைவராக ஹிட்லர் இருக்கிறார். ஜெர்மனியிலும் ஹிட்லரை எதிர்க்கும் சிறுபான்மை கும்பல் ஒன்று இருக்கிறது. பெரும்பான்மையான ஜெர்மன் மக்களுக்கு ஹிட்லர் என்பவர் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திறன் வாய்ந்தவர் என்பது ஹிட்லரின் பிரச்சாரக் குழுவால் நன்றாக பிரச்சாரம் செய்யப்பட்டு எல்லாரின் மூளையிலும் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சிறுபான்மை கும்பல் மட்டும் விடாமல் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு பற்றி கூவிக்கொண்டே இருக்கிறது. இதற்கு நியாயம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஹிட்லருக்கு இதெல்லாம் கவலை இல்லை. நாட்டு மக்களான பெரும்பான்மையினரும், ‘நாட்டுக்கு ஒரு சர்வாதிகாரி கிடைத்துவிட்டார்; இனி bus சரியான நேரத்துக்கு வரும்; லஞ்சம் இருக்காது; பால் பாக்கெட் லேட்டாகப் போடுபவர்களை ஜெயிலில் தள்ளிவிடலாம்; கேபிள் டிவியில் புதிய படம் வராவிட்டால் ஹிட்லரிடம் புகார் கொடுத்துவிடலாம்’ என்றெல்லாம் அவர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஹிட்லர் செய்த genocides போலவே பக்கத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு தலைவர் செய்திருக்கிறார். அவரை இதுவரை ஹிட்லர் எதிர்க்கவில்லை. ஹிட்லருடன் கூட்டணி சேர்ந்த கட்சித் தலைவர்கள், ‘ஹிட்லர் பதவிக்கு வந்ததும் இதைப்பற்றி யோசித்து நல்ல முடிவு எடுப்பார்’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஹிட்லர் ஒரு வேலையைச் செய்கிறார். பதவிக்கு வந்ததும், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அந்தத் தலைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். இதுவரை பக்கத்து நாட்டின் இன அழித்தொழிப்பு பற்றிப்
பொங்கிக்கொண்டிருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இப்போது கப்சிப். ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்த பெரும்பான்மை மக்களோ, ‘இதெல்லாம் எனக்கெதுக்கு? ஆனா பால் பாக்கெட் மட்டும் சரியான நேரத்துக்கு வராட்டி … கபர்த்தார்.. தலீவர் ஹிட்லர் கிட்ட புகார் கொடுத்துருவேன்’ என்று அவர்களின் வேலையில் குறியாக இருக்கிறார்கள்.
ஹிட்லருக்கு எதிரான சிறுபான்மை கும்பலுக்கு, ஹிட்லருக்கு ஓட்டுப்போட்ட மக்கள் மீதும், ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்த கட்சித் தலைவர்கள் மீதும் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. ‘இதெல்லாம் ஒரு ஆரம்பம் பிரதர்ஸ்.. இன்னும் ஹிட்லர் என்னல்லாம் செய்யப்போறாரோ’ என்ற கவலை அவர்களுக்கு.
அப் கீ பார்…. . . . . .