புவெர்த்தோ ரீக்கோ

ஊரின் மிக அழகான பெண் தொகுப்பில் என் அம்மா ஒரு விபச்சாரி என்று ஒரு கதை உள்ளது.  கரீபிய நாடான புவெர்த்தோ ரீக்கோவின் கதை.  புனைவு அல்ல; பேட்டி.  எழுதியவர் லா பீதா எழுதிய ஆஸ்கார் லூயிஸ்.  அந்தக் கதைக்கு நான் எழுதிய ஒரு அறிமுகம் இது:

புவெர்த்தோ ரீக்கோ என் தாய்நாடுகளுள் ஒன்று. காரணம் – என் வாழ்வை மாற்றியமைத்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான ‘லா பிதா’ புவெர்த்தோ ரீக்கோ மக்களைப் பற்றியது. (மற்றொன்று சே குவேராவின் பொலிவிய நாட்குறிப்புகள்.)

மனித வாழ்வைக் குறித்து என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்த புத்தகம் லா பிதா. மிகச் சிறிய எழுத்துக்களில் 670 பக்கங்கள் நீளும் இந்தப் புத்தகத்தைப் படித்த போது புவெர்த்தோ ரீக்கோவிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது. இதை எழுதிய – தவறு, அப்படிச் சொல்ல முடியாது. புவெர்த்தோ ரீக்கோவின் ஸான் ஹூவான் நகரிலுள்ள லா எஸ்மரால்தா என்ற சேரியில் வசித்த ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களைப் பேட்டி கண்டு அதை அப்படியே டேப்பில் பதிவு செய்து – பிறகு பிரதி எடுத்து புத்தக வடிவமாக்கியிருக்கிறார் ஆஸ்கார் லூயிஸ்.

புவெர்த்தோ ரீக்கோ 1893-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிகாரத்தின் கீழ் இருந்தது. பின்னர் 1952-இல் சுதந்திரம் பெற்றது.

அறுபதுகளில் இதன் ஜனத்தொகை முப்பத்தைந்து லட்சம். (இப்போது 40 லட்சம்.) இதில் பத்து லட்சம் பேர் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். இந்தப் பத்து லட்சத்தில் நியூயார்க் நகரத்தில் மட்டுமே ஆறு லட்சம் பேர்.

நியூயார்க் நகரத்தில் வாழும் இந்தப் புவெர்த்தோ ரீக்கோ மக்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இவர்கள் தங்களின் தனி அடையாளத்தை இழந்து விட வில்லை என்று தெரிகிறது. காரணம் ஸான் ஹூவானின் தொடர்பை இவர்களை துண்டிக்கவேயில்லை என்பதுதான். மட்டுமல்லாமல் நியூயார்க் நகரத்துக்கும் ஸான் ஹூவானுக்கும் இடையிலான விமானச் செலவு மிகவும் குறைவு.

புவொர்த்தோ ரிக்கோவின் ஏழ்மை எல்லா விதத்திலும் இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் ஏழ்மையோடு ஒப்பிடக் கூடியது. “குரூரமும் வன்முறையும் நிரம்பிய இவர்களது வாழ்வில் கல்வி, மருத்துவம் போன்ற எந்த வசதிகளும் இல்லை” என்கிறார் ஆஸ்கார் லூயிஸ். மிருக வாழ்க்கையை விடக் கேவலமாக இருக்கும் இவர்களின் வாழ்வுச் சூழல் ‘ஏழ்மையின் கலாச்சாரம்’ என்று அழைக்கப்படுகிறது.

கூபாவைப் போலவும் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவும் புவெர்த்தோ ரீக்கோவில் ஏன் புரட்சிகர இயக்கங்கள் தோன்றவில்லை? 19-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினின் ஆதிக்கத்தை மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்த்துக் கிளர்ச்சி செய்த போதும் கூட இந்த மத்திய அமெரிக்கத் தீவிலிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லையே, ஏன்?

காரணம், கூபாவைப் போல் கெரில்லா இயக்கத்தினர் ஒளிந்து கொள்வதற்கான நில அமைப்பு இந்தச் சிறிய தீவில் கிடையாது. ஆனால் புவெர்த்தோ ரீக்கோவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரெனே மார்க்கேஸ் இதை மறுக்கிறார். ‘புவெர்த்தோ ரீக்கோவினரின் குணாம்சத்திலேயே ஒரு பணிவுத் தன்மை உள்ளது’ என்கிறார் அவர்.

ஸான் ஹூவான் சேரி மக்களிடையே தான் கவனித்த ஒரு முக்கியமான அம்சம் என ஆஸ்கார் லூயிஸ் குறிப்பிடுவது – அவர்களது பாலியல் வெளிப்பாடு.

“இவர்கள் வாழ்வின் மீது தீராத காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது காமமாக வெளிப்படுகிறது. அதாவது, அவர்களின் மொழியே உடலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்தரங்க உறுப்பு, காமம் சம்பந்தப்பட்ட பல அந்தகரங்கமான காட்சிகள் மிகவும் சகஜமாக இந்தச் சேரிகளில் விவரிக்கப்படுகின்றன. இந்த சகஜத்தன்மையின் காரணமாகவே அது ஆபாசம் என்ற நிலையிலிருந்து விலகி வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாக மாறிவிடுகிறது.

வாழ்க்கையின் மீது இவர்கள் கொண்டுள்ள வெறித்தனமான ஆர்வம் காமமாகவும், புதுப் புது அனுபவங்களையும் சாகசங்களையும் நோக்கிய தேடலாகவும் வெளிப்படுகிறது. இவர்களின் வாழ்க்கை மிக வெளிப்படையாக இருக்கிறது. ஸ்தூல வெளிப்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. யோசிப்பதை விட செயல்படுவதை இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அடக்கத்தை விட ஆடம்பரத்தையும், சேர்த்து வைப்பதைவிட செலவு செய்வதையும், கடின உழைப்பில் ஈடுபடுவதைவிட சந்தோஷத்தை நாடிச் செல்வதையும், எல்லோருக்கும் பொதுவான நீதி என்பதைவிட தனிப்பட்ட உறவுகளையும் விரும்புகிறார்கள். வேடிக்கை, விளையாட்டு, விருந்து, குடி, நடனம், இசை – இவையே இவர்களது வாழ்க்கை.” (புவெர்த்தோ ரீக்கோவை என் தாய்நாடு என்று நான் சொல்வதன் காரணம் இப்போது புரிகிறதா?)

இவர்களுக்குப் பிடிக்காத மற்றொரு விஷயம்: தனிமை. சுருக்கமாகச் சொல்வதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நாம் காணக்கூடிய தனிமையும், துக்கமும் இவர்களிடம் அறவே காண முடியாதது. “இவர்கள் காமத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் போதாமைகளையும் தேவைகளையும் காமமே இட்டு நிரப்புகிறது. குழந்தைக்காகவும், இன்பத்துக்காகவும், பணத்துக்காகவும், பழிவாங்குவதற்காகவும், காதலுக்காகவும், இப்படி எல்லாவற்றுக்காகவும், காமமே இவர்களின் பிரதான வாழ்வு மையமாக இயங்குகிறது. ஒரே வாக்கியத்தில் சொல்வதானால், இவர்களது வாழ்வின் துயரத்தை காமமே ஈடு செய்கிறது.

குடும்பத்தை அடிப்படையாக் கொண்ட இந்தச் சமூகத்தில் சமயங்களில் குடும்பத்தையும் சிதைத்து விடுவதாக காமம் பிரதானமாகி விடுகிறது. உதாரணமாக, மாற்றுத் தந்தையரால் பாலியல் ரீதியாக வசப்படுத்தப்படும் பெண் குழந்தைகள்.

செக்ஸைப் பொறுத்தவரை ஆச்சரியப்படும் விதத்தில் இவர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள். குழந்தைகளிடமிருந்து கூட மறைப்பதில்லை. ஆண் குழந்தைகள் தங்கள் அம்மாவிடமிருந்து காமத்தூண்டுதலைப் பெறுகிறார்கள். குழந்தைகளின் ஆண் குறி விறைப்பு machismo-வின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

பணத்தைப் பற்றி இவர்கள் கவலையே படுவதில்லை. கேட்டால் ‘த்தோமா லா பீதா ஈஸி, முச்சாச்சா’ என்கிறார்கள். ‘வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்கொள், பெண்ணே’ என்று பொருள். ஆனால், அன்புக்காக எதையுமே செய்யக்கூடியவர்கள் இவர்கள்.”