michael769513@gmail.com
ஒன்றுமே தெரியாத மூடர்கள் பலர் முகநூலில் வந்து ஏதாவது பேண்டு விட்டுப் போவது வழக்கமாக இருக்கிறது. தமிழின் மூத்த கவிகளில் ஒருவரான கலாப்ரியாவைக் கூட அவர் யார் எவர் என்ற விபரமே தெரியாமல் சில மூடர்கள் முகநூலில் கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன். முழுமையானஎன்றே தமிழ்நாட்டு வாசிப்புச் சூழல் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியவில்லை. வாழ்க்கையில் ஒரு புத்தகத்தையாவது இந்த மூடக் கும்பல் படித்திருக்காது. குமுதம் விகடனே படித்திருப்பார்களா என்பது சந்தேகம். இப்படிப்பட்ட மடையர்கள்தான் கேலி கிண்டல் பேச வந்து விடுகிறார்கள். கீழே உள்ள கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் எனக்கு வந்தது. என் ஆங்கில அறிவு பற்றிப் பேசுகிறது இந்த முகநூல் குஞ்சு.
ஆங்கிலம் பேசுவோர் பற்றிப் பலமுறை எழுதி விட்டேன். ஆங்கிலப் பேராசிரியர்கள் பற்றியும் பலமுறை எழுதி விட்டேன். 99 சதவிகித ஆங்கிலப் பேராசிரியர்களுக்கு (தமிழ்ப் பேராசிரியர்களுக்கும்தான்) என் பேனாவுக்கு இங்க் போடுவதற்குக் கூடத் தகுதி இல்லை என்று எழுதியிருக்கிறேன். அதாவது, என் எழுத்தில் ஒரு வாக்கியத்தைக் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி இவர்களுக்குக் கிடையாது. சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையை ஒரு மிகப் புகழ்பெற்ற சென்னை கிறிஸ்டியன் காலேஜ் பேராசிரியர் தான் மொழிபெயர்த்தார். அவரது ஆங்கிலம் மிகப் பிரபலமானது. ஆனால் மொழிபெயர்ப்பதற்கு இலக்கியம் தெரிய வேண்டும். அது இந்தப் பேராசிரியர்களுக்கு வராது. புளிய மரத்தின் கதை முதல் பத்தியிலேயே புட்டுக் கொண்டு விட்டது. முதல் பத்தியே கேவலம். சு.ரா.வின் கவித்துவமான மொழியைப் பேராசிரியர் அப்படியே நீக்கி விட்டார். பாவம் புரியவில்லை. அடுத்து, ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலை மற்றொரு பேராசிரியர் மொழிபெயர்க்கிறேன் என்று சொல்லி ஜெர்ரி பிண்ட்டோவிடம் வாங்கிய மரண அடிகளை ஹிண்டுவில் நாம் பார்த்தோம்.
அட நிரட்சர குட்சிகளா, வெப்பேரியில் ரிக்ஷாக்காரர் கூட என்னை விட நன்றாக ஆங்கிலம் பேசுவார். ஏனென்றால் அவர் ஆங்கிலோ இந்தியர். அதற்காக? ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்னைப் பார்த்து, ஹிஹி உங்களை டீவியில் பார்த்திருக்கிறேன் என்று இளித்ததை எதில் கொண்டு போய் சேர்ப்பது? மற்றொரு பேராசிரியர் – ஆங்கிலப் பேராசிரியர் தான் – ஒரு மகத்தான தமிழ் எழுத்தாளரின் கிளாஸிக் நாவலை கைமா போட்டு பலரிடமும் காட்டி செருப்படி வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், இவர்களின் தன்னம்பிக்கைதான்.
சமீபத்தில் ஒரு இளம் எழுத்தாளர் தன் நாவலை ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடம் கொடுத்து மொழிபெயர்த்து என்னிடம் கொடுத்தார். குப்பை என்று சொல்வது கூட பெரிய வார்த்தை. குடித்து விட்டு வாந்தி எடுத்தது போல் இருந்தது. திரும்பவும் இந்த மூடர்களின் தன்னம்பிக்கை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் இந்த முகநூல் குஞ்சு சொல்கிறது, ஆங்கிலப் பேராசிரியர்களுக்கே புரியவில்லையாம். நான் யுலிஸஸுக்கு விளக்கமே எழுதியிருக்கிறேன், பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில். மூன்றாம் தொகுதியில் வரும். ஆங்கிலப் பேராசிரியர்களுக்கே புரியாத யுலிஸஸ் எனக்கு எப்படிப் புரிகிறது என்றால், நானே ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ்தான். என் எழுத்தை ஆங்கில விமர்சகர்கள் ஜேம்ஸ் ஜாய்ஸுடனும் நபகோவுடனும் ஒப்பிடுகிறார்கள். எனக்கு எப்படி ஜேம்ஸ் ஜாய்ஸ் வாய்த்தார் என்றால் நான் நகுலனின் மாணவன். நகுலனின் வாரிசு. நகுலன் தமிழின் ஜேம்ஸ் ஜாய்ஸ். இதுதான் அந்த உறவுப் பாலம்.
மேலும், ஆங்கிலம் ஒரு மொழி. நான் தமிழில் சிந்தித்து தமிழில் எழுதுபவன். எனக்கு என்ன மயிருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்? மார்க்கேஸுக்கும் யோசாவுக்கும் பாவ்லோ கொய்லோவுக்கும் ஆங்கிலம் தெரியுமா மிஸ்டர் குஞ்சு?