சிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது.  ஒரு சிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம் நுழைகிறது.  அனைவரின் தலையிலும் கவசம்.  கையில் கற்களைத் தடுக்கப் பயன்படுத்தும் கட்டைக் கவசம்.  போலீஸ் மாதிரி தெரியவில்லை.  ரிஸர்வ்ட் போலீஸ் அல்லது ராணுவம் மாதிரி தெரிகிறது.  காணொளி எடுத்தவர்கள் மிக ரகசியமாக எடுத்திருப்பதை அந்தக் காணொளியின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.  உள்ளேயிருந்து ஒரு 12 – 15 வயது சிறுவனை இழுத்து வந்து அந்த இருபது முப்பது போலீஸும் அடிக்கிறார்கள்.  அந்தச் சிறுவனின் அம்மா அவர்களின் பின்னாலேயே தலையில் தலையில் அடித்துக் கதறிக் கொண்டு ஓடுகிறார்.  இது எங்கே நடந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் அடுத்த ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் தமிழ்நாட்டின் விளிம்பு நிலை மக்களிடையே நிலவும் உயிர்த் துடிப்பான கலாச்சார வாழ்க்கை பற்றி எழுதப் போகிறேன் என்று என் மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான காயத்ரியிடம் சொல்லியிருந்தேன்.  ஆனால் என் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை.  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் இன்று நேற்று போராடவில்லை.  நூறு நாட்களாகப் போராடுகிறார்கள்.  எதற்கு?  சுற்றுச்சூழல் மாசு ஆகி விடக் கூடாது என்பதற்காக.  அந்தத் தொழிற்சாலையை மஹாராஷ்ட்ர மாநில மக்கள் அங்கிருந்து அடித்துத் துரத்தியிருக்கிறார்கள்.  சுற்றுச் சூழல் பற்றிக் கவலைப்பட வேண்டியது யார்?  அரசாங்கம் அல்லவா?  இங்கே மக்கள் கவலைப்படுகிறார்கள்.  அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால் போராட்டத்தில் இறங்கினார்கள்.  நூறு நாட்களாகத் தொடர்கிறது.  கடைசியில் துப்பாக்கிச் சூடு.  ஸ்னைப்பர்கள் மூலம் குறி பார்த்துச் சுட்டார்கள்.  இது வேட்டை.  மனித வேட்டை.  வேட்டையாடுபவர்கள் சீருடையில் இல்லை; கலர் சட்டை அணிந்திருக்கிறார்கள்.   குறி பார்த்துச் சுடுகிறார்கள்.  அதாவது, பட்டப்பகலில் ஊடகங்களின் முன்னே என்கௌண்ட்டர்.  ஆனால் என்னால் இன்னமும் நம்ப முடியாத விஷயம் என்னவென்றால், இந்த மனித வேட்டை மறுநாளும் தொடர்கிறது என்பதுதான்.  அப்படியானால் என்ன ஒரு தடித்தனம் இருக்க வேண்டும்?  தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கிறது.  இப்போது நீங்கள் என்ன புடுங்கவா முடியும் என்ற தெனாவெட்டும் திமிரும்தானே காரணம்?  ஜாலியன்வாலா பாக் கூட ஒரே தடவை தானே நடந்தது?  மறுநாளும் அதே இடத்தில் மீண்டுமா படுகொலை நடந்தது?  இங்கே தூத்துக்குடியில் மறுநாளும் மனித வேட்டை தொடர்கிறதே?

ஆர்ட் ரெவ்யூ ஏஷியா பலராலும் வாசிக்கப்படும் ஐரோப்பிய இதழ்.  இந்தச் செய்தி உலகம் பூராவும் போக வேண்டும்.  இந்தியாவுக்கு வரும் ஐரோப்பியர்கள் இனிமேலும் இங்கே உள்ள கோவில்களை மட்டும் சுற்றிப் பார்க்க வரக் கூடாது.  வந்தால் இந்த நாடு எந்த ஸ்திதியில் இருக்கிறது என்ற பிரக்ஞையோடு வர வேண்டும் என்பது என் கட்சி.  சும்மாவேனும் வாயைப் பிளந்து கொண்டு இங்கேயுள்ள சிற்பங்களை வேடிக்கை பார்ப்பதற்கு நாம் என்ன மிருகக்காட்சி சாலையில் அடைந்து கிடக்கும் மிருகங்களா?