மனிதர் வாழ லாயக்கில்லாத நாடு…

மனிதர்கள் வாழவே லாயக்கில்லாத நாடாகப் போய் விட்டது இந்த தேசம்.  வேறு தேசங்களில் வாழ வழியில்லாத என்னைப் போன்றவர்கள் இங்கே இருந்தால் ரத்தம் கக்கிச் சாக வேண்டியதுதான் போல.  இல்லாவிட்டால் பணக்காரர்களாக இருக்க வேண்டும். இருந்தால் மற்றவர்கள் நம் காலணியை நக்குவார்கள்.  ஜாலியாக வாழலாம்.  இன்று பாலகுமாரனுக்கு சிராத்தாஞ்சலி என்று அழைத்திருந்தார்கள்.  இப்போதெல்லாம் நான் வூபரில்தான் சவாரி.  சுலபமாக இருக்கிறது.  ஆனால் இன்று வீட்டில் அவந்திகாவுக்கு ஆன்மீகச் சந்திப்பு இருப்பதால் 15 பேர் வருவார்கள்.  அவர்களுக்கு இனிப்பு காரம் வாங்கி வைத்து விட்டுக் கிளம்ப வேண்டும்.  இப்படி இரண்டு வேலைக்கு வூபர் சரி வராது.  அதனால் ஆட்டோ பிடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.  சாந்தோம் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடந்து எதிர்ப் பக்கம் போனால் நல்லவர்களின் ஆட்டோ கிடைக்கும்.  நியாயமான கூலி கேட்பார்கள்.  சாலையைக் கடக்காமல் என் வீட்டுக்குக் கீழேயே உள்ள ஆட்டோக்களில் அப்படியே டபுள் விலை.  நூறு ரூபாய் தூரத்துக்கு இருநூறு.  அதனால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலையையே கடந்து விடுவது வழக்கம்.  உண்மையில் அது ஹராகிரி செய்வதற்குச் சமமான ஒன்றாகும்.

எதிரே உள்ள ஆட்டோக்காரர்கள் என்னைப் பார்த்து விட்டால் அப்படி நான் ஹராகிரி செய்து கொள்ள அவசியம் இல்லாமல் அவர்களே வந்து விடுவார்கள்.  இன்று எதிரே என்னைப் பார்த்து வருகிறேன் என்று கை அசைத்தார் ஆட்டோ தம்பி.  உடனே என் வீட்டுக்குக் கீழே இருந்த ஒரே ஆட்டோவில் இருந்த ஆள் வாங்க சார், குடுக்கிறதைக் குடுங்க என்று வற்புறுத்தலாக அழைத்தார்.  நான் மறுத்து ரெண்டு மூணு எடம் போணுங்க, சரி வராது என்றேன்.  அவர் திரும்பவும் அட வாங்க சார், குடுக்கிறதைக் குடுங்க என்றார்.  ஏறினேன்.

கபாலி கோவில் அருகே இனிப்பை வாங்கிக் கொண்டு வந்து வாட்ச்மேனிடம் கொடுத்து வீட்டில் கொடுக்கச் சொல்லி விட்டு, அடுத்த தெருவில் நின்று கொண்டிருந்த ராகவனை அழைத்துக் கொண்டு பர்கிட் ரோடு போனேன்.  இறங்கி 200 ரூ கொடுத்தேன்.  150 தான் கொடுக்க வேண்டும்.  இருந்தாலும் பிரச்சினை வேண்டாம் என்று 200 கொடுத்தேன்.  உடனே ஆட்டோக்காரர் பெருங்குரலில் என்ன நீ, குடுக்கிறதைக் குடுன்னு சொன்னதுக்காக என் பாக்கெட்லேர்ந்து காசை உருவுறே.  250 குடு என்று கத்தினார்.  25 வயது இருக்கும்.    ஏதாவது பேசினால் அடித்து விடுவார் போல் இருந்தது.  உண்மையிலேயே அவர் பாக்கெட்டில் கை விட்டு உருவி விட்டது போல் கத்தினார்.  ராகவன் வாயைத் திறந்ததும் நீ யாரு, மூடு வாயை என்று இருநூறு ரூபாயையும் என் மீது விட்டெறிந்து விட்டு இதை நீயே வச்சுக்க என்று ஆட்டோவைக் கிளப்பினார்.  நான் 250 கொடுத்தேன்.  மீண்டும் குடுக்கிறதைக் குடுன்னா என் பாக்கெட்லேர்ந்து உருவப் பாக்கிறே நீ என்று கத்தியபடி வண்டியை எடுத்தார்.  இத்தனைக்கும் தினந்தோறும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் நபர் அவர்.

அரவிந்த் அடிகாவின் ஒயிட் டைகர் ரொம்ப சராசரி நாவல்தான்.  ஆனால் அதில் ஒரு இடம் எனக்குப் பிடிக்கும்.  அதன் நாயகன் ஒரு உயரமான இடத்தில் நின்று கொண்டு ஏ கேவலமான தேசமே என்று சொல்லிக் காறித் துப்புவான்.  நானும் ராகவனும் அதைக் கூட செய்யக் கூச்சப்பட்டுக் கொண்டு கடவுள், அஹிம்சை, கம்யூனிசம் என்று எல்லா மயிர் மட்டையின் மீதும் நம்பிக்கை இழந்தவர்களாக அரங்கத்தை நோக்கி நடந்தோம்.