நிலவு தேயாத தேசம் – எதிர் பதிப்பகம் – அனுஷ்

எங்கள் புத்தக நிலையத்திற்கு விற்பனைக்கு வரும் பிற பதிப்பகங்களின் எல்லா புத்தகங்களையும் விரிவாகப் பார்க்க முடியாவிட்டாலும் ஏறக்குறைய பெரும்பாலான புத்தகங்கள் என்ன பிரிவை சேர்ந்தது, அதன் எழுத்தாளர், விலை, பதிப்பகம் என அவற்றைப் பற்றிய குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பேன்.

அப்படித்தான் இரு மாதங்களுக்கு முன் Zero Degree Publishing பதிப்பகத்திலிருந்து சில தலைப்புகளில் புத்தகங்கள் வந்திருந்தன. அவற்றை பார்த்துக்கொண்டிருந்தபோது சாரு நிவேதிதாவின் நிலவு தேயாத தேசம் என்னும் பயணக் கட்டுரை நூலை கவனித்தேன். நல்ல அட்டைப்படம், வடிவமைப்பு என 274 பக்கம் கொண்ட நூலாக இருந்தது. சரி, விலை என்னவென்று பார்த்தபொழுது ரூ 600 என்றிருந்தது. 274 பக்கம் கொண்ட நூல் 600 ரூபாய் என்பது தமிழ் பதிப்பகத்துறையில் ஏற்றுக்கொள்ள முடியாத விலை. அச்சுப்பிழையாக இருக்குமோ என்று பில்லில் சரிபார்த்தால் அதிலும் அதே விலை தான். நல்ல புத்தகம், விலை அதிகமாக வைத்துவிட்டார்கள். பொள்ளாச்சி போன்ற சிறுநகரத்தில் உள்ள எங்கள் கடையில் எப்படி விற்பனை ஆகுமோ என்று நினைத்துக்கொண்டேன்.

சம்பவம் – 1
—————————-
ஒரு மாதத்திற்குப் பிறகு வாசகர் ஒருவர் நிலவு தேயாத தேசம் புத்தகம் இருக்கிறதா என கேட்கிறார். இருப்பதாகச் சொல்லி அப்புத்தகத்தை எடுத்துக் கொடுத்தோம். அப்போதைக்கு அதுவே இறுதிப் பிரதி. மீண்டும் புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்கிறோம்.

சம்பவம் – 2
————————–
சில தினங்களுக்கு முன் ஒரு வாசகர் வந்து அதே புத்தகத்தைக் கேட்க, புத்தகம் இருப்பில் இல்லை; தீர்ந்து விட்டதாக கடையில் இருக்கும் விற்பனையாளர் சொல்கிறார். இரண்டு நாளில் வந்துவிடும், வந்தவுடன் தகவல் கொடுப்பதாகச் சொன்னோம். மீண்டும் புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்கிறோம்.

சம்பவம் – 3
————————-
கடந்த வாரம் ஒரு சுற்றுலா பயணி பொள்ளாச்சி வழியாக போனபோது எதேச்சையாக புத்தகக் கடையைப் பார்த்து வந்ததாகவும், நிலவு தேயாத தேசம் இருக்கிறதா எனவும் கேட்டார். எனக்கு நடப்பதெல்லாம் கொஞ்சம் அதிசியமாகவும் ஆச்சரியமாகவும்தான் இருந்தது. அவருக்குக் கொடுத்ததும் கடைசி பிரதி தான். பிறகு மீண்டும் புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்கிறோம்.
ஒவ்வொரு முறை ஆர்டர் கொடுக்கும் பிரதியின் எண்ணிக்கை ஐந்து. இரு மாதங்களில் மூன்று முறை ஆர்டர் கொடுத்துள்ளோம். இன்று அந்தப் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. இனி இது எப்படி விற்பனை ஆகிறது என பார்க்க வேண்டும்.

சம்பவம் – 4
——————————
இரு நாட்களுக்கு முன் கோவையில் உள்ள மிகப் பிரபலமான புத்தகக்கடை உரிமையாளருடன் பேசிக்கொண்டிருந்த போது கடந்த இரு மாதங்களில் புத்தக விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு புத்தக நிலையங்களில் இருந்து வரும் விற்பனை குறித்தான செய்திகளும் அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. மின் புத்தகங்களின் வருகை, புத்தக விலையேற்றம், மக்களிடம் வாங்கும் திறன் குறைந்தது, ஆன்லைன் ஷாப்பிங் என பல காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என கொள்ளலாம்.

ஆனாலும் மேலே கூறிய நிலவு தேயாத தேசம் புத்தகத்தைச் சுற்றி கடந்த இரு மாதங்களாக எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த மந்தமான புத்தக விற்பனையை மறக்கடித்து புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஒரு புத்தகத்தின் மதிப்பை அதன் விலையைக் கொண்டு தீர்மானித்து விட முடியாதுதான்.

***

மேலே உள்ள பதிவு எதிர் பதிப்பகத்தின் அனுஷ் எழுதியது.  பதிவு முழுவதுமே ஆச்சரியங்கள்தான்.  முதல் ஆச்சரியம், எந்தப் பதிப்பகத்தாரும் மற்ற பதிப்பகத்தின் நூலைப் பாராட்டிப் பேசத் தயங்குவார்கள்.  அதை அனுஷ் உடைத்து விட்டார்.  இன்னொரு ஆச்சரியம், ஒருத்தரோடு மனஸ்தாபம் என்றால் அதோடு அவரை ஜென்ம விரோதியாகக் கொள்வதுதான் தமிழ்ப் பண்பாடு.  அதையும் அனுஷ் உடைத்து விட்டார்.  அது ஒரு பழைய கதை.  எனக்குப் பிடித்த, பொதுவாக அதிகம் பிரபலம் இல்லாத நூல்களையே எதிர் பதிப்பகத்தில் மொழிபெயர்க்கிறார்களே என்று எனக்குக் கொள்ளை ஆச்சரியம்.  உதாரணமாக, யாருக்குமே தெரியாத The Blinding Absence of Light என்ற நாவல்.  தாஹர் பென் ஜெலோன் எழுதியது.  இது பற்றி நான் தொழுகையின் அரசியல் என்று ஒரு நீண்ட கட்டுரையை மலையாளப் பத்திரிகை மாத்யமம்-இல் எழுதியிருந்தேன்.  பிறகு அது தமிழிலும் வந்தது.  அந்த நாவலை அர்ஷியாவின் மொழிபெயர்ப்பில் எதிர் பதிப்பகத்தில் பார்த்த போது ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தேன்.  பிறகு அனுஷிடமும் கேட்டேன்.  என் கட்டுரைகளைப் படித்து நான் குறிப்பிடும் நூல்களை அவர் படிப்பதுண்டு என்று தெரிந்து கொண்டேன்.  பிறகு ஒரு பிரச்சினையால் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது.  ஆனாலும் அவரது செயல்பாடுகளின் மீது எனக்குப் பெரிய மரியாதை உண்டு.  கார்ல் மார்க்ஸின் நூல்களையும் அவரே வெளியிட்டார்.  (கார்ல், ஏதாவது புனைப்பெயர் வைத்துக் கொள்ளுமே ஐயா?)

நிலவு தேயாத தேசம் நூலின் விலை அதன் வண்ணப் படங்களால்தான் எகிறியது.  வேறு எந்தக் காரணமும் இல்லை.  இப்போது கூட ஊரின் மிக அழகான பெண் நூலை ஆகக் குறைந்த விலையில் வைக்கலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தார் ராம்ஜி.  நான் தான் அப்படிச் செய்தால் நான் கேட்ட அட்டை கிடைக்காதே என்று அவரை ப்ரெய்ன் வாஷ் பண்ண முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

அறந்தாங்கி என்ற சிறிய ஊரில் ஒரு மொபைல் போன் கடையின் திறப்பு விழாவில் நான் கலந்து கொண்ட போது நிலவு தேயாத தேசம் பத்து பிரதிகள் ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன.

இத்தனைக்குப் பிறகும் ஒரு வருத்தம் என்னவென்றால், நூல்களின் விற்பனை குறைந்து விட்டது.  யாரும் புத்தகங்களே வாங்குவதில்லை.  புத்தகம் வாங்குவதையே பாவ காரியம் என்று நினைக்கிறார்கள்.  ஆனால் மீன் வாங்க மட்டும் கூட்டம் அலை மோதுகிறது.  நேற்று என் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு மீன் விற்பனை நிலையத்தில் மீன் வாங்கப் போனேன்.  ஒரு சின்ன சால்மன் மீன் (காலா) வாங்கினேன்.  500 ரூ.  வறுப்பதற்கு ஒரு குட்டியூண்டு வெள்ளை வவ்வால்.  விலை 300.  ரொம்பக் குட்டியூண்டு.  மேலே போர்டில் ஒரு கிலோ வெள்ளை வவ்வால் ஆயிரம் ரூபாய் என்று போட்டிருந்தது.  ஆனால் துயரகரமான விஷயம் என்னவென்றால், அங்கே கூட்டம் அலை மோதியது.  செவ்வாய்க் கிழமை.  வேலை நாள்.  நான் போன நேரம் கடும் வெயில் நேரம் முன் மதியம் 11 மணி.  அந்த நேரத்தில் கடற்கரையில் நின்று வாங்கினால் பொசுங்கி விடுவோம் என்றுதான் அரசு விற்பனை நிலையத்துக்குப் போனேன்.  கடற்கரையில் 150 ரூபாய்க்குக் கிடைக்கும்.

மீனை வாங்கிக் கொண்டு குடியிருப்புக்குள் நுழையும் போது சின்ன வெங்காயம் இல்லை என்று ஞாபகம் வர wait rose super marketக்குள் போய் சி.வெங்காயத்தைப் பார்த்தேன்.  பாக்கெட்டில் சுமார் பனிரண்டு வெங்காயம் இருந்தது.  20 ரூபாய் என்று போட்டிருந்தது.  வீட்டில் நுழைந்து அவசர அவசரமாகக் கவரைக் கிழித்து வெங்காயத்தைக் கூடையில் போட்டேன்.  இது ஏன் ஒரே ஒரு வவ்வால் என்றாள் அவந்திகா.  வறுவல் நிறைய சாப்பிடக் கூடாது இல்லையா, அதுதான் என்றேன்.  எவ்வளவு என்றாள்.  நூறு ரூபாய் என்றேன்.  ”இப்டிப் போய் ஏமாந்து இருக்கியே?  இத்தினியூண்டு மீனைப் போய் நூறு ரூபாய் கொடுத்தா வாங்குவது?”  சரி, எவ்ளோ குடுக்கலாம், சொல் என்றேன்.  என்னா ஒரு அம்பது, இல்லேன்னா எழுவது ரூபா குடுக்கலாம் என்றாள்.

எதற்கு இந்த மீன் கதை என்றால், புத்தக விலை மட்டும்தான் கசக்கிறது.  சரி, சைவத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு குடும்பம் காலையில் போய் சிற்றுண்டி செய்து விட்டு வர (மூன்று பேர்) குறைந்த பட்சம் 500 ரூ.  ஆகிறது…

அனுஷுக்கு என் நன்றி.