tango and salsa

 

எக்ஸைல் editing வேலையில் 900-ஆவது பக்கத்தில் இருக்கிறேன்.  அதில் Bandoneon என்ற வாத்தியத்தைப் பற்றி ஒரு குறிப்பு வந்தது.  உடனே எக்ஸைலை விட்டு விட்டு இதை எழுத ஆரம்பித்து விட்டேன்.  எக்ஸைலை முடிக்கும் வரை வேறு எதுவுமே செய்யக் கூடாது என்று இருந்தும் இதை என்னால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.  என்னை பல நண்பர்கள் எழுதுங்கள் எழுந்துங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; ஏதோ நான் எழுதியதையெல்லாம் இவர்கள் படித்து விட்டது போல. என்னுடைய எழுத்து எப்போதுமே வெறும் வாசிப்பு என்ற ஒரே செயல்பாட்டுக்கானது மட்டும் அல்ல.  உதாரணமாக, நான் பந்தோனியோன் என்ற வாத்தியத்தைப் பற்றி எழுதினால் அது எப்படி இருக்கும் என்றாவது யூட்யூபில் பார்க்க வேண்டும்.  பந்தோனியோன் என்று படித்து விட்டு, சரி சாரு ஏதோ நமக்குத் தெரியாத விஷயத்தை எழுதியிருக்கிறார்; அவர் எப்போதுமே இப்படித்தானே என்று கடந்து சென்று விடக் கூடாது. கோணல் பக்கங்களில் நான் த்தாங்கோ மற்றும் ஸால்ஸா பற்றி எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறேன்.  இரண்டு வகைகளிலும் இருபது முப்பது பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.  13 ஆண்டுகளுக்கு முன்பு கணினி என் கையில் இல்லாத காலத்தில் எழுதியவை இவை.  அமெரிக்காவிலிருந்து என் நண்பர்கள் கொண்டு வந்து கொடுக்கும் குறுந்தகடுகள் மூலம் அந்த இசையைக் கேட்பேன்.  அல்லது, தில்லியில் நான் நேரடியாகக் கேட்டதை நினைவுபடுத்தி எழுதுவேன்.  பந்தோனியோன் கருவி எப்படி இருக்கும் என்று தெரியாது.  அமெரிக்க, பிரிட்டிஷ் நூலகங்கள் சென்றுதான் பார்க்க முடியும்.  இப்போது உங்கள் விரல் நுனியில் அத்தனையும் இருந்தும் எதையுமே படிக்காமல் இன்னும் எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள் என்கிறீர்கள்.  நான் இங்கே நீங்கள் என்று விளிப்பது என்னுடைய நெருங்கிய, என் எழுத்தை நேசிக்கும் வாசகர்களை.  கிட்டத்தட்ட என் குழந்தைகளோடு பேசுவது போல் இதை எழுதுகிறேன். 

த்தாங்கோ பற்றியும் ஸால்ஸா பற்றியும் (Tango and Salsa) நான் இங்கே தமிழில் எழுதிய போது இப்போது போல் ஸால்ஸா இங்கே பிரபலம் ஆகவில்லை.  இப்போது சென்னையில் ஸால்ஸா பள்ளிகள் எல்லாம் உண்டு.  தயவுசெய்து கோணல் பக்கங்களில் நான் குறிப்பிட்டுள்ள ஸால்ஸா, த்தாங்கோ இசைக் கலைஞர்களை யூட்யூபில் கேட்டுப் பாருங்கள்.  அந்த நடனங்களைப் பாருங்கள். 

பந்தோனியோன் என்பது ஒரு சிறிய அக்கார்டியன்.  Il Postino என்ற படத்தில் பந்தோனியோன் இசை வருகிறது.  த்தாங்கோ இசையில் பந்தோனியோன் பிரதான இடத்தை வகிக்கிறது.

நான் அப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்க இசை, லத்தீன் அமெரிக்க இலக்கியம், அதன் நடனம் பற்றியெல்லாம் நிறைய எழுதுவது வழக்கம்.  ஆனால் பிறகு அதை நிறுத்தி விட்டேன்.  ஏனென்றால், அதெல்லாம் ஏதோ என் நாட்குறிப்பில் எழுதுவது போல் உணர ஆரம்பித்து விட்டேன்.  யாருமே அதையெல்லாம் படிப்பது போல் தெரியவில்லை. இன்னொரு காரணம், என்னால் இந்த வயதிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை.  இது ஏதோ ஒரு வெளிநாட்டுப் பயணம் செல்வது போல் அல்ல. என் 25-ஆவது வயதில் லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலை எழுதினேன்.  பெரிய பெரிய சினிமா ஜாம்பவான்களே இன்னும் பார்த்திராத Glauber Rocha, Ruy Guerra ஆகியோரின் படங்களைப் பற்றி அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.  தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியே ஏற்பட்டிருக்கும் 2013-இல் கூட இன்னும் க்ளாபர் ரோச்சா பற்றி யாரும் விவாதிக்கவில்லை.  தமிழில் அல்ல; இந்தியாவிலேயே.  ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியிருக்கிறேன்.  க்ளாபர் ரோச்சா ப்ரஸீலின் மிக முக்கியமான இயக்குனர். 

நான் சொல்ல வந்தது என்னவென்றால், தென்னமெரிக்க நாடுகளின் கலாச்சாரம் என் உணர்வோடு கலந்திருக்கிறது.  உங்களுக்கு இளையராஜாவின் இசை எப்படியோ அப்படியே எனக்கு அர்ஹெந்த்தினாவின் த்தாங்கோ. புவனோஸ் அய்ரஸ் நகரில் தெருக்களில் த்தாங்கோ எப்படி ஆடுகிறார்கள் என்று இந்த இணைப்பில் பாருங்கள்.  இங்கே 40 வயது ஆனவுடனேயே எல்லோரும் தொண்டு கிழத்தைப் போல் பேச ஆரம்பித்து விடுகிறார்களே, இந்த அர்ஹெந்த்தீனியக் கிழவர் தெருவில் ஒரு இளம்பெண்ணோடு எப்படி த்தாங்கோ ஆடுகிறார் என்று பாருங்கள்.  நான் ஏன் இப்போதெல்லாம் தென்னமெரிக்கா பற்றி எழுதுவது இல்லை என்றால் இதை என்னால் நேரில் காண முடியவில்லையே என்ற ஆதங்கத்தினால்தான். 

http://www.youtube.com/watch?v=jZ7pcCCf000

கிதார் இசை நமக்குப் பழக்கமானது.  அதேபோல் பந்தோனியோனின் இசையும் நமக்குப் பழக்கமாக வேண்டும். பந்தோனியோனின் மிகச் சிறந்த கலைஞரான Carel Kraayenhof –உம் ஹுவான் பாப்லோவின் பியானோவும் இணைந்த டூயட் இது.  தனிமை என்ற வெகு அற்புதமான டூயட்.   

http://www.youtube.com/watch?v=ls_LfpKu6T4

பின்வரும் இணைப்பில் த்தாங்கோ நடனத்தின் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் ஜோடியின் (மிரியம் & லியனார்தோ) மிக அற்புதமான நிகழ்ச்சி உள்ளது.  முக்கியமாக கால்களை கவனியுங்கள். 

http://www.youtube.com/watch?v=JIyBGermRTM

பின்வரும் இணைப்பில் த்தாங்கோவை படு செக்ஸியாக ஆடுகிறார்கள் சில ஜோடிகள்.  இதில் வாசிக்கப்படுவதுதான் பந்தோனியோன்.

http://www.youtube.com/watch?v=6ENo-FHL1t0

கோணல் பக்கங்கள் ஒரு புதையல்.  தேடிப் பாருங்கள்.  கிடைக்கும். 

கார்லோஸ் சாரா (Carlos Saura) எனக்குப் பிடித்த அர்ஜெண்டீனிய இயக்குனர்களில் ஒருவர்.  அவர் இயக்கிய த்தாங்கோ (Tango) என்ற படத்தையும் உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.  அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி இது:

http://www.youtube.com/watch?v=2t6UgC9jzD0

Comments are closed.