Day 75

CHE

அன்புள்ள சாரு,

உங்களின் வாழ்வை மாற்றியதாகவும் மேலும் சே குவேராவை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியவருமாகிய நீங்கள் இன்று ஒரு பதிவு செய்தால் நான் மிகவும் மகிழ்வேன். Bolivian Diary புத்தகத்தை நீங்கள் Delhi defence -ல் வேலை செய்த பொழுது படித்ததையும், அந்த புத்தகம் தற்போது கிடைப்பதில்லை என்பதையும் எக்ஸைலில் படித்து அறிந்த பின்னர், நான் உங்களிடம் தானே ஏதாவது அறிய செய்தியை கேட்க முடியும் டாக்டர்.அயெந்தேவின் பதிவினைப் போன்று. Battle of chile பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களைப் படிக்க நேரவில்லையெனில் இது போன்ற எத்தனை அறிய விடயங்களையும் பண்பை வளர்ப்பதிலும் தேக்கமேற்ப்பட்டு, வேடிக்கை மனிதரைப் போல் வாழ்ந்திருப்பேன்.

நன்றி,
வினித் குமார்

வினித் குமாரின் மேற்கண்ட கடிதத்தைப் படித்த போதுதான் இன்று சே குவேராவின் பிறந்த நாள் என்று அறிந்து கொண்டேன். வினித் சொல்வது உண்மைதான். என்னை தென்னமெரிக்க நாடுகளின் மீது ஈடுபாடு கொள்ள வைத்தது பொலிவியன் டயரிதான். எழுபதுகளின் இறுதி அது. நான் டிஃபென்ஸ் மினிஸ்ட்ரியில் வேலை செய்யவில்லை. அங்கே வேலை செய்த என் நண்பர் ஒருவர் மூலம் பொலிவியன் டயரியை வாங்கிப் படித்தேன். உலகெங்கிலும் ராணுவ நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வாசிக்கப்படும் நூல் பொலிவியன் டயரி. கெரில்லாப் போராளிகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்கள் இந்த நூலின் வழியே தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

பொலிவியன் டயரி மூலமாகத்தான் நான் மார்க்சீயத்தின் மீதும் ஈர்க்கப்பட்டேன். இன்று மார்க்சீய/கம்யூனிச சித்தாந்தத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த சித்தாந்தம் முடிவில் சர்வாதிகாரமாக இறுகி, மனித விரோதமாக ஆகி விடுகிறது என்பதே வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் படிப்பினை. ஆனால் சே குவேரா மனித குலத்தின் மீது கொண்ட அன்பினால் அதிகாரத்தைத் துறந்தார். ஃபிதெல் காஸ்த்ரோவின் மந்திரி சபையில் ஃபிதலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அதைத் துறந்து பொலிவியாவின் காடுகளில் கெரில்லாப் போராளியாகத் திரிந்தது எதற்காக? பதவியில் இருக்க வேண்டியவர் அமெரிக்க சிஐஏவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மரணத்தை அவர் ஏன் விரும்பி ஏற்றார்? மானுட அன்பு. இயேசு அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்தார். சே ஆயுதத்தை எடுத்தார். இரண்டு பேருக்கும் அடிப்படையாக இருந்தது மானுட அன்புதான். சே குவேராவை கடவுளின் தூதன் போல் வழிபடும் லட்சக் கணக்கான பேரில் அடியேனும் ஒருவன்.

ஞாபகப்படுத்திய வினித் குமாருக்கு என் நன்றி.