பூமியும் மணலும் எரிந்து கொண்டிருக்கின்றன
நேசத்தால் காயப்பட்டவர்கள் அனைவருக்கும்
முகத்தில்
அதன் தடயங்கள் இருப்பது போல் –
தணல் உமிழும் மணலில் கடக்கும் சாலையின் மீது
உன் முகத்தை வை,
அந்த வடு
எல்லோருக்கும் தெரியும் வகையில்
இருக்க வேண்டும்
இதயத்தின் அந்த வடு
அனைவராலும் பார்க்கப்பட வேண்டும்
நேசத்தின் பாதையில் செல்கின்ற
அந்த மனிதர்கள்
அவர்களது தழும்பால்
அறியபட வேண்டும்…
இது யார் எழுதிய கவிதை தெரிகிறதா? நபிகள் நாயகம். கவிதையாக எழுதினதில்லை. அவரது வாசகங்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன. உலகில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்களில் அவர்தான் முதல் என்று சொல்ல வேண்டும். அவர் எப்படி வாழ்ந்தார்; அவர் என்ன சொன்னார் என்று எதுவுமே தெரியாமல் அவரைப் பற்றிய எத்தனையோ பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். மேற்கண்ட வாசகங்களை இன்றைய தி இந்து நாளிதழில் பார்த்தேன்.
அந்த வகையில் இன்று ஒரு மறக்க முடியாத நாள். அதைத் தொடர்ந்து என்னுடைய ஒருநாள் ஒரு புத்தக அட்டை பட்டியலில் இன்று முகமது அஸதின் Road to Mecca என்ற நூலின் அட்டையைப் பதிவு செய்தேன். அதற்கு Lafees Shaheed என்ற நண்பர் பின்வரும் பின்னூட்டத்தை இட்டிருந்தார். அது தொடர்பான ஒரு சிறிய உரையாடல்:
Lafees Shaheed: சமகால அரபுலக பிரச்சனைகளை விளங்கிக் கொள்ள, அதன் வேர்களைப் புரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.
சாரு: அது மட்டும் அல்ல; இஸ்லாம் பற்றியும் பொதுவாக முஸ்லீம்கள் பற்றியும் மேற்குலக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு, நம்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களையும் மாற்றி அமைக்கும் நூல் இது.
Lafees Shaheed: இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த மேற்குலக ஆதிக்க ஊடகங்களின் பிம்பங்களைக் கலைத்துப் போட வேண்டுமெனில் முஸ்லிம் உலகினுள் விரிவாகப் பயணம் செய்ய வேண்டும். உங்களது ‘நிலவு தேயாத தேசம்’ நூலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இது குறித்து பேசி இருக்கிறீர்கள். முஹம்மத் அஸத் செய்ததும் அதனைத்தான் முஸ்லிம் நாடுகளுக்குள் விரிவாக பயணம் செய்ததன் விளைவு தான் Road to Makkah. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் ஜெர்மன் இயக்குநர் F. W முரானோவிடம் உதவி இயக்குநராக வேலை செய்தவர் தான் முஹம்மத் அஸத். நூலொன்றில் உங்களுக்கு பிடித்தமான Horror திரைப்படம் என்று வெர்னார் ஹெர்ஸாக்கின் நொஸ்பராடுவை குறிப்பிட்டு இருந்தீர்கள். ஹெர்ஸாக்கின் திரைப்படம் முரானோவின் நொஸ்பராடுவின் Remake தான். Road to Makkah வின் முன் பின்னாக Narration நகரும் உத்தி அஸதின் கலைத்துறை அனுபவத்தின் பாதிப்பு தான்.
முஹம்மத் அஸதின் Unromantic Orient இனையும் கிடைத்தால் வாசித்து விடுங்கள் சாரு.
சாரு: நிச்சயம் படிக்கிறேன் Lafees. தமிழில் உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியாததால் ஆங்கிலத்திலேயே எழுதி விட்டேன். இந்தப் பக்கத்தில் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. எனக்குப் பிடித்த பள்ளியில் பயின்றிருக்கிறீர்கள். அக்குரணையில் எப்படி நிலவு தேயாத தேசம் கிடைக்கிறது? நிலவு தேயாத தேசத்தைப் போன்ற இன்னொரு முக்கியமான புத்தகம் தப்புத் தாளங்கள். சமகால அரபி இலக்கியம் பற்றி மாத்யமம் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இலங்கையில் என் புத்தகங்கள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாக இருக்கிறது.
எனக்கு மொராக்கோ போன்ற மக்ரீப் நாடுகளில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. துனீஷியா என்ற நாட்டின் இஸ்லாமியர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். இப்படி…
Lafees Shaheed: எனது பெயர் லஃபீஸ். ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு வருடங்களாக உங்கள் வாசகர் வட்ட முகநூல் பக்கத்தில் இருக்கிறேன். இதற்கு முன்பு விரிவாக பின்னூட்டம் இட்டது கிடையாது. அதனால் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். பிரான்ஸில் பயின்றது என்று குறிப்பிட்டு இருப்பது முகநூல் கணக்கு ஆரம்பித்த பொழுது ஒரு மோஸ்தருக்காக போட்டுக் கொண்டது. காரணம் எனக்கு பிரெஞ்சு பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் மீது ஈர்ப்பு அதிகம். மற்றபடி நான் பள்ளிப் படிப்பை தாண்டவில்லை.
உங்களது நிலவு தேயாத தேசத்தை நான் இணையத்தில் ஆர்டர் செய்து தான் பெற்றுக் கொண்டேன். கொழும்பு பூபாலசிங்கம் புத்தக கடையில் நிலவு தேயாத தேசம் வந்த சூட்டிலேயே விற்றுத் தீர்ந்து விட்டது. மற்றபடி உங்கள் அனைத்து நூல்களையும் கொழும்பில் தான் பெற்றுக் கொண்டேன்.
தப்புத் தாளங்கள் மூலமாகவே எனக்கு அப்துர் ரஹ்மான் முனீப், கத்தா ஸம்மான், நஜ்வா பரக்கத் போன்ற அரபிலக்கிய வாதிகள் அறிமுகம். உங்கள் தாய் நாடு லத்தீன் அமெரிக்க மட்டுமல்ல, மக்ரீப் நாடுகளும் தான். கலகம், காதல், இசையில் அல்ஜீரிய ராய் இசை குறித்து நீங்கள் எழுதியதை வாசித்த பொழுது அப்படித்தான் எனக்குத் தோன்றியது.
நீங்கள் பாரசீக மகா கவி ஹாபிஸ் ஷீராஸியின் கவிதை ஒன்றை மொழி பெயர்த்து இருந்தீர்கள் அல்லவா? லஃபீஸ் என்பதும் பாரசீகப் பெயர் தான். ஒளியின் காதலன் என்று அர்த்தம்.
***
என்னுடைய தப்புத் தாளங்கள் என்ற நூலைப் பற்றி யோசிக்கும் போது அந்தப் புத்தகத்தையெல்லாம் யார் படித்திருப்பார்கள் என்று வருத்தப்படுவது வழக்கம். அதில் உள்ள கட்டுரைகளைப் போல் ஆங்கிலத்தில் கூட எழுதப்படுவதில்லை. வாஸ்தவத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல் அது. இல்லாவிட்டால் இன்று யார் அப்துர்ரஹ்மான் முனீஃப் பற்றிப் பேசுகிறார்கள்? நான் சொல்வது ஆங்கில இலக்கிய உலகில். எகிப்தின் நகிப் மெஹ்ஃபூஸைத் தெரியும். ஆனால் சவூதி அரேபியாவின் அப்துர்ரஹ்மான் முனீஃபைத் தெரியாது. ஏனென்றால், முனீஃப் நோபல் பரிசு வாங்கவில்லை.
இந்த நிலையில் லஃபீஸின் பின்னூட்டங்கள் மூலம் நான் தெளிவடைந்தேன். உலகில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு வாசகர் நான் எழுதுவதைப் படிக்கிறார்.
தப்புத் தாளங்கள் என்ற அந்தச் சிறிய நூலுக்காக நான் 20 ஆண்டுகள் சமகால அரபி இலக்கியத்தை அல்லும் பகலும் வாசித்திருக்கிறேன். இப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த மெக்ரீப் எழுத்தாளர்களோடு தொடர்பிலும் இருக்கிறேன். நான் குறிப்பிடும் சில நாவல்களை அவர்களே படித்ததில்லை என்று சொல்லும் போது ஆச்சரியப்படுவேன்.