நான் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெய்ட் ரோஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாடியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன். இங்கே ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வசிக்கிறார். இங்கே தினமும் ஆறு மணி நேரம் மின் வெட்டு உள்ளது. நேற்று பதிமூன்று முறை மின்சாரம் போய் போய் வந்தது. மொத்தம் ஏழு மணி நேரம் மின்சாரம் இல்லை. அப்புறம் நேற்று பெரிய மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொண்டு காலில் விழுகிறேன் கையில் விழுகிறேன் என்று கெஞ்சியதால் இன்று அப்படி இல்லை. மின்வெட்டு இல்லை என்று ஆசுவாசமாக இருந்த போது மாலை நாலு மணிக்கு மீண்டும் மின்சாரம் போய் விட்டது. இந்த விஷயம் (இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்ற விஷயம்) என் வீட்டு ஓனருக்குத் தெரியுமா இல்லையா தெரிந்தே ஏமாற்றி விட்டாரா (பார்க்க அப்படித் தெரியவில்லை; நல்ல மனிதராகவே இருந்தார்) அல்லது இங்கே உள்ள இன்சார்ஜ் மனிதர் வீட்டுக்காரரையும் என்னையும் சேர்த்து ஏமாற்றி விட்டாரா ஒரு எழவ்உம் புரியவில்லை.
இதை முகநூலில் எழுதினால் ஒவ்வொரு ஆளாக இன்வெர்ட்டர் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று ஆளுக்கு ஆள் ஆலோசனை அளித்தார்கள். ஆலோசனை அளித்தவர்கள் அத்தனை பேரையும் ப்ளாக் செய்து விட்டேன்.
அதற்காக இதை எழுதவில்லை. ஒரு ஆசாமி ” What was the last time you ever paid Tax? I mean Tax on your income? The effing country you’re referring to works to those who pay taxes” என்று எழுதியிருந்தார். இவரையும் ப்ளாக் பண்ணி விட்டு இதைக் கடந்து போயிருக்கலாம். மனம் வரவில்லை. சாலையில் நாம் யார் மூஞ்சியிலும் காறித் துப்ப முடியாது. செருப்படி விழும். கை கால் முறியும் அளவுக்கு தர்ம அடியும் விழும். ஏண்டா சும்மா போறவர் மூஞ்சில துப்புனேன்னு கேட்டு எலும்பை எண்ணி விடுவார்கள். ஆனால் முகநூல் பொதுக்கக்கூஸ். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேண்டு வைக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நான் வருமான வரி கட்டவில்லை என்றால் என் ஏரியாவுக்கே மின்வெட்டு ஆக வேண்டுமா? யாரிடம் பேசுகிறோம், யாரை அவமானப்படுத்துகிறோம் என்ற சுரணை கூட இல்லை பாருங்கள். நான் கடந்த 45 ஆண்டுகளாக என் மொழிக்கும் பண்பாட்டுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறேன். மூன்று இலக்கியப் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன். எல்லாம் என் வருமானத்தில். என் புத்தகங்களை நானே தான் பதிப்பித்திருக்கிறேன். உயிர்மையில் வரும் வரை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை இலவசமாகவே எழுதியிருக்கிறேன். சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் வேசியிடம் கூட ஒருத்தர் இலவசமாகப் போக முடியாது. தமூள் எழுத்தாளன் அதை விட மோசம். இப்போதும் கூட தமிழ் எழுத்தாளனின் வருமானம் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் சம்பளத்தை விட கம்மிதான்.
இதுவரை சுமார் நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். காலம் உள்ள வரை அழியாத நூல்களை எழுதி என் மொழிக்கு சேவை செய்திருக்கும் என்னைப் பார்த்து ஒருவர் வரி கட்டியிருக்கிறாயா என்று கேட்கிறார். வரி ஏய்ப்பு செய்பவன் இந்த நாட்டில் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் வெளிநாடு செல்ல வீசா தர மாட்டார்கள். என்னைக் கேள்வி கேட்ட அன்பர் இந்த நாட்டுக்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்க மாட்டார். ஆனால் கேள்வி புஷ்பம் மட்டும் கேட்பார்கள். பொதுவாக சாலையைக் கடக்கும் போது ஆளோ வாகனமோ இல்லாவிட்டால் கூட பச்சை விளக்கு எரிந்தால் தான் கடப்பேன். அந்த மாதிரி ஆள் நான். என்னைப் பார்த்து இவர் வரி கட்டினாயா, எப்போது கட்டினாய் என்கிறார். ஒரு ஃபாஸிஸ மனம் இப்படித்தான் வேலை செய்யும். இவர் நிச்சயமாக பிஜேபியாகத்தான் இருப்பார். எனக்கு அதில் சந்தேகமே இல்லை.