பிறந்த நாள்…

இன்று முதல்முதலாக போனை வீட்டில் வைத்து விட்டுப் போய் விட்டேன்.  வந்து பார்த்த போது ஏகப்பட்ட அழைப்புகள்.  அதில் ஒன்று கோவை நண்பர்.  அழைத்தேன்.  என்ன சார், பேசவே முடில, போனையே எடுக்க மாட்டேங்கிறீங்க என்றார்.  என் நெருங்கிய நண்பர்கள் யாரும் கேட்காத கேள்வி.  கேட்கவும் கூடாத கேள்வி.  நண்பர்கள் ஒவ்வொருவரின் அழைப்பையும் ஏற்று நான் பேசிக் கொண்டிருந்தால் அப்புறம் நான் எழுதவே முடியாது ஐயா.  இந்த எழுத்துக்காக நான் என் கொண்டாட்டங்கள் அனைத்தையும் தியாகம் செய்து கொண்டிருக்கிறேன்.  என்னை விட அவந்திகா செய்யும் தியாகம் அதிகம்.  நேற்று காலை ஏதோ என்னிடம் பேச வந்தாள்.  மாலை வரை என்னிடம் பேசாதே என்றேன்.  ஏனென்றால், உயிர்மைக்கு எழுதிக் கொண்டிருந்தேன்.  இரவு பத்தரை மணிக்குத்தான் முடிந்தது.  என்னுடைய எல்லா நேரத்தையும் எழுத்துக்கும் படிப்புக்கும் மட்டுமே செலவு செய்து கொண்டிருக்கிறேன்.  என் ஊருக்கு வாருங்கள் சாரு என்றார் நண்பர்.  நெருங்கிய நண்பர்.  போய் என்ன செய்வது?  அவர் ஊர் மலையடிவாரம்.  நல்ல நெருக்கமான காடு உண்டு.  ஆனால் அங்கே போய் என்ன செய்வது?  குடியையும் விட்டாயிற்று.  அதே ஊரில் ஓர் இலக்கியச் சந்திப்பு என்றால் போய் இலக்கியம் பேசலாம்.  மற்றபடி போய் ஒரு ஆணும் மற்றொரு ஆணும் சேர்ந்து என்னதான் பேச முடியும்?  ஆறு ஏழு பேர் இருந்தால் இலக்கியம் இசை சினிமா என்று நாள் கணக்கில் பேசலாம்.  எதற்குச் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு கேளிக்கையும் இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  தவறு.  எழுதிக் கொண்டிருக்கிறேன்; படித்துக் கொண்டிருக்கிறேன்.  எழுத்தும் வாசிப்பும்தான் வாழ்க்கை.  கேளிக்கை எதுவும் கிடையாது.

மேலும், எனக்கு வரும் எல்லா தொலைபேசி அழைப்புகளையும் நான் எடுத்து விடுவேன்.  வேலையில் ஈடுபட்டிருந்தால் வேலை முடிந்ததும் எடுத்து விடுவேன்.  ஆனால் என்ன சார் சௌக்கியமா, பேசி ரொம்ப நாள் ஆச்சு, அதான் கூப்பிட்டேன் என்றால் கடுப்பாகி விடுவேன்.  ஏதாவது சமாச்சாரம் இருக்க வேண்டும்.  இருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.  அல்லது, இருக்கவே இருக்கிறது மெஸேஜ், வாட்ஸ் அப்.  அதில் செய்தி அனுப்பினால் நானே அழைத்துப் பேசுவேன்.   கோவை நண்பர் ஒரு செய்தியும் சொன்னார்.  அராத்துவுக்கு இன்று பிறந்த நாள்.  போனில் பேசினீர்களா என்று கேட்டார்.  ஓ, தெரியாதே என்றேன்.   இந்தச் செய்தியையும் கோவை நண்பர் மெஸேஜாக அனுப்பியிருக்கலாம்.  இதற்கு ஒரு போனா?

நண்பரே, இப்படியெல்லாம் நான் போன் பேசிக் கொண்டிருந்திருந்தால் இப்போது நான் எழுதியிருக்கும் 100 புத்தகங்களை எழுதியிருக்க முடியாது.  தந்தையின் மரணச் செய்தி கேட்ட போதே, நான் ஒரு முக்கியமான கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன், நான் வர நேரமானால் பாடியை எடுத்து விடுங்கள் என்று சொன்ன ஆளிடம் நீங்கள் எப்படி இப்படியெல்லாம் கேட்கிறீர்கள்?  (என்ன சார் போனையே எடுக்க மாட்டேங்கிறீங்க?)

பிறகு சீனிக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினேன்.  ”இன்று உங்கள் பிறந்த நாள் என்று நேற்றே  தெரிந்திருந்தால் ’பறந்து’ வந்திருப்பேனே?”  அதற்கு அவர், நாம் சந்திக்கும் நாளையே என் பிறந்த நாளாகக் கொண்டாடி விடலாம்.  இன்று நான் பிறந்த நாள்; அவ்வளவுதான் என்று பதில் மெஸேஜ் அனுப்பினார்.

கூடிய சீக்கிரத்தில் அவர் கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புக்கர் கிக்கர் என்று வாங்க வாழ்த்துகிறேன்.