பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்தை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டாம் பாகம் மகா பெரிய வெற்றி. 450 பேருக்கு நான் கையெழுத்துப் போட்டு விட்டேன். ஆனால் அதைப் பார்சல் கட்டுவதற்குள் காயத்ரியும் ராம்ஜியும் படாத பாடு பட்டு விட்டார்கள். அவர்களேதான் ஆபீஸ் பாய் ஆபீஸ் கேர்ள், க்ரியேட்டிவ் எடிட்டர்ஸ், சேல்ஸ்மென், சேல்ஸ்வுமன் எல்லாமே என்று எழுதியிருக்கிறேன். வரும் காலத்தில் ZDP ஒரு கார்ப்பொரேட் அலுவலகத்தைப் போல் மாற வேண்டும் என்பது என் ஆசீர்வாதம். நிச்சயம் நடக்கும், விரைவில். அத்தனை உழைப்பைப் போடுகிறார்கள் இருவரும். வெளியூர் பார்சல் ஒவ்வொன்றுக்கும் 45 ரூபாய் குரியர் செலவு. பார்சல் கவர் 25 ரூ. ஆக, இதற்கே 70 ரூ. ஆகி விட்டது. லாபம் மிக மிக மிகக் கம்மியான ஒரு துறை இது. தெய்வ காரியம் போல் தான் செய்ய வேண்டும். இதுகாறும் செய்திருக்கிறார்கள். இதையே ஒரு பேப்பர் கவரில் போட்டு புக் போஸ்டில் அனுப்பினால் பத்தே ரூபாய்தான் செலவு. ஆனால் அது தர்மம் அல்ல என்று சொல்லி விட்டார்கள் இருவரும்.
இப்போதும் ராம்ஜி சொன்னார், ஒரு அட்டையைப் பார்த்தாராம். ஒரு அட்டை 20 ரூ. அதைப் பயன்படுத்தினால் இப்போது 350 ரூ. விலை வைத்திருப்பதை 450 ரூ. என்று வைக்க வேண்டி வரும். ம்ஹும். கூடவே கூடாது என்று சொல்லி விட்டார் ராம்ஜி. ஆனாலும் – இது ஒரு பெரிய ஆனால் – ஒரு புத்தகம் 2000 பிரதிகள் விற்றால் என்ன அட்டை வேண்டுமானாலும் இதே விலையில் போடலாம். ஒரு பத்து இருபது ரூபாய்தான் கூடும். அவ்வளவுதான்.
பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டின் தரம் ஈடு இணையற்றது என்கிறார்கள் வாசகர்கள். எனக்கும் அப்படியே தோன்றியது. அதிலும் 1400 பிரதிகள் அச்சடித்திருக்கிறார்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் தமிழ்ப் பிரிவான எழுத்து பிரசுரம். எழுத்து பிரசுரத்தின் முதல் புத்தகம் இது. 1400 பிரதிகள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் நம்ப முடியாத எண்ணிக்கை. நிச்சயம் விற்கும். முன்பதிவே 460 பிரதிகள் என்பதால் அது நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புத்தகம் கிடைக்கும் இடம்