தமிழ் நாட்டில் இன்றும் , தலித் ஓட்டு வங்கியை அதிகம் வைத்திருக்கும் கட்சி அதிமுக. அதற்காக அதிமுக தான் தலித்திற்கு அதிகம் செய்த கட்சியா என்றால் இல்லை. எல்லாம் எம்ஜிஆர் என்ற கவர்ச்சிதான்.
நரிக்குறவர் ஓட்டு வங்கியும் இரட்டை இலைக்குத்தான். எம்ஜிஆர் நரிக்குறவர்களுக்கு என்ன செய்தார்? “நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க “ என்று ஒரு பாட்டில் குறவர் போல ஆடி குறவர் பெருமையைச் சொன்னார். அவ்வளவுதான் , பரம்பரை பரம்பரையாக இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறது குறவர் சமூகம். எம்ஜிஆர் ,ஜெயலலிதா , இரட்டை இலை என தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொள்கிறது குறவர் சமூகம்.
அதிமுகவால் குறவர் சமூகத்தில் என்ன மாற்றம் கொண்டு வர முடிந்தது ? ஏன் குறவர்கள் அதிமுகவை கட்டிக்கொண்டு அலைகிறார்கள் ?
எல்லாம் வெறும் கவர்ச்சி கிளாமர் அரசியல்.இதை அரசியல் என்று கூட சொல்லக்கூடாது. இது சீட்டிங்க் !
அரசியல் ரீதியாக இல்லாமல், கவர்ச்சி ,உணர்ச்சி , செண்டிமெண்ட் போன்ற காரணங்களாலேயே ஆதி திராவிடர்கள் அதிமுகவை ஆதரித்து வந்தனர்.
அவர்களை அரசியல்மயப் படுத்த திருமா என்பவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் வீராவேசப் பேச்சுகள் , மற்ற சமூகத்தினரை முகம் சுளிக்க வைக்கும் பேச்சுக்கள் எல்லாம் திருமாவிடமும் இருந்தது.அது ஆதிதிராவிட இளைஞர்களை அவர் பக்கம் இழுத்தது.இதிலும் கொஞ்சம் கவர்ச்சியும் , எமோஷனலும் கலந்து இருப்பதை கவனிக்க வேண்டும்.
பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து திருமா பதமாக மாறினார். நல்ல மெச்சூரிட்டி காட்ட ஆரம்பித்தார். பாதிக்கபப்ட்ட நிலையிலும் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். பாமகவின் பழைய பகை, அவர்களின் வெறி தெரிந்தும் அவர்களோடு கை கோர்த்து சில காலம் அவர்களோடு ஓட்டினார்.பாமக வில் இருந்து பிரிந்த போது திருமாவின் பேச்சுக்கள் மிகவும் கண்ணியமானவை.
இப்படி பொறுப்பான தலைவராக மாறிய பிறகுதான் , அவரது கோட்டையான காட்டுமன்னார் குடி தொகுதியில் அதிமுகவிடம் அவரது வேட்பாளர் தோற்கிறார். போன தேர்தலுக்கும் முந்தின தேர்தல். இவ்வளவுக்கும் பிறகும் அதிமுக கவர்ச்சிதான் வெல்கிறது.
ஆக பொறுப்பான அரசியல் தலைவராக மாறுதல், தன் மக்களை அரசியல்மயப் படுத்துதல் ,அரசியல் உரிமையைப் பெறுதல், பொது சமூகத்தை பகைத்துக்கொள்ளாமல் ,வெறுப்பரசியலை வளர்க்காமல் ,அதே சமயம் தமக்கான உரிமைகளைப் பெற்று , அவர்களுடன் கலந்து சேர்ந்து வாழ்தல் போன்றவைகள் எவ்வளவு சிரமம்?
கவர்ச்சி , செண்டிமெண்ட் , வீராப்பு, ஆவேசம் , கிளாமர் இதெல்லாம் சுலபம்.இதன் மூலம் எளிதில் பயன் அடையலாம், அதாவது தன் மக்களை அடகு வைத்து தான் மட்டும் பயன் அடையலாம் என்றபோதும், திருமா நீண்ட கால நோக்கில் பலன் தரும் வண்ணம் பொறுப்பான ,மெச்சூர்டான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து மிகவும் பொறுமையாக பயணித்து வருகிறார். அவர் தன் நலனை விட தன் மக்களின் நலனை மிக மிக பூதாகாரமாக எடுத்துக்கொள்கிறார்.
வெட்டி வீராப்பு ,சவடால்கள் , பஞ்ச் டயலாக்குகளைத் தாண்டி அரசியல் மயப்படுத்துதல்தான் நல்ல விளைவைத் தரும்.
இந்த நேரத்தில் ரஞ்சித் தலித் அரசியல் என கூறிக்கொண்டு இரண்டு படங்களிலும் ரஜினியை “டான்” ஆக காட்டுகிறார். ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பும் தலித்களின் தலைவன் , மற்றவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் “டான்” .என்னதான் தன் மக்களுக்கு “நல்லது” செய்கிறேன் என்று மழிப்பினாலும் , “டானை” எதிர்த்து அந்த மக்களே பேச முடியுமா ? இங்கேயே சறுக்கியது தலித் அரசியல்.
அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அவரே சொன்ன பிறகு , அவரை வைத்து தலித் அரசியல் (அது அரை குறையாக இருந்தாலும்) பேசுவது , பஞ்ச் டயலாக அடிப்பது , தலித் களின் ஆபத்பாந்தவனாக காட்டுவது எல்லாம் மீண்டும் கவர்ச்சி அரசியலுக்குத்தான் வழி வகுக்கும். தலித் இளைஞர்கள் ரஜினியின் பால் ஈர்க்கப்படுவார்கள். ரஜினியை தங்கள் குறை தீர்க்க வந்த கோமானாக பார்ப்பார்கள். நம்ம உரிமையை பேசறார் ரஜினி , நமக்காக போராடறார் ரஜினி , என்றெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டு ,ரஜினிக்கு ஒரு தலித் ஓட்டு வங்கி உருவாகி விடும்.
இதுவரை அதிமுகவிடம் ஸ்டிராங்காக இருந்த இந்த தலித் ஓட்டு வங்கியை இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு , கொஞ்சம் கொஞ்சமாக விசிக விடம் திருமா கொண்டு வந்திருக்கும் வேளையில் ,இதை மீண்டு ரஜினிக்கு திருப்பி விடும் ஆபத்தான போக்கு.
ரஜினியை நாம் முட்டாள் என்றும் கமலை நாம் கோமாளி என்றும் நினைக்கிறோம். ஆனால் அப்படி அல்ல போலிருக்கிறது. ரஜினி தெளிவாக தனக்கான தலித் ஓட்டு வங்கியை கட்டமைக்கும் வேலையில் இருக்கிறார். அல்லது அவருக்கு யாரேனும் ஆலோசனை சொல்லி இருக்கலாம்.
ரஞ்சித் ,தன்னை ஒரு திரைப்பட இயக்குநர் என்பதை எல்லாம் தாண்டி ,தானே தலித் மக்களின் தலைவன் ,தானே அத்தாரிட்டி என்று உணர்வெழுச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
ரஞ்சித் தலித் அரசியலை முன் வைத்து படம் எடுக்கலாம்.அது கலா ரீதியாக மொக்கை படமாக கூட இருக்கலாம்,தப்பேயில்லை. தலித் அரசியலை பயன்படுத்தி ,தலித் பிம்பம் என்று ஒரு ஹீரோவை உருவாக்கக் கூடாது.அதுவும் அந்த ஹீரோ அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்.இப்படி செய்வது தன் இனத்துக்கே துரோகம் செய்வது. படத்தில் ரஜினியை வைத்து தலித் அரசியல் பேசிய செயல் ,நிஜத்தில் தலித் அரசியலை பின்னடைவு கொள்ள வைக்கும்.ரஞ்சித்துக்கு மைலேஜ் கிடைக்கும், புகழ் கிடைக்கும், எல்லாம் கிடைக்கும். நிஜத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கும் திருமாவுக்கும் , விசகவுக்கும் , தலித்களுக்கும் அரசியல் ரீதியான பெரும் பின்னடைவை விளைவிக்கும்.
எம்ஜிஆர் எப்படி புதுசா கட்டிகிட்ட ஜோடி பாட்டு பாடி காலகாலமாக ஓட்டுக்களை அள்ளினாரோ , அதே கவர்ச்சி அரசியல் மூலம் தலித்களின் ஓட்டுக்களை , கபாலியாக ஆடவிட்டு ,காலாவாக ஆட விட்டு ரஜினிக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறார் ரஞ்சித் !