சூழல்

அடிக்கடி எனக்கு யாராவது நீ வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் என்று ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. நான் ஃப்ரான்ஸ் என்றே நினைத்துக் கொண்டு விடுகிறேன். பாரிஸில் வசித்த மிஷல் வெல்பெக்கை (Michel Houellebecq) ஒருமுறை பேட்டி காண்பதற்காக பிபிசி நிறுவனத்திலிருந்து வந்து பார்த்தார் ஒரு இளம் பெண். என்னுடன் படுப்பதாக இருந்தால் பேட்டி அளிக்கிறேன் என்றார் வெல்பெக். ஒரு நாகரீகமான சமூகத்திலிருந்து வந்த அந்தப் பெண் மிரண்டு போய் ஓடி விட்டார். அது பெரிய செய்தியாகவும் வந்தது. வெல்பெக்கை சமூகம் ஒன்றும் கழுதையில் ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தவில்லை. வெல்பெக் நிதானமாகச் சொன்னார். ”நான் கேட்டேன் தான். அதில் என்ன தப்பு? நான் கேட்ட போது என் மனைவியும்தான் கூட இருந்தாள். நாம் மூன்று பேரும் ஈடுபடலாம் என்றுதான் சொன்னேன்.” அடப் போய்யா லூசு என்று விட்டு விட்டது ஃப்ரெஞ்ச் சமூகம்.

தான் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களில் மேடையின் ஓரம் ஒரு மண் கலயம் வைக்கச் சொல்லுவார் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. குடிபோதையில் வாந்தி எடுப்பதற்காக அந்தக் கலயம்.

இப்படி ஒரு ஆயிரம் சம்பவங்களை எழுதிக் கொண்டு போகலாம். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் நான் முகநூலில் ஒரு கருத்துக்கு ஆட்டின் ஸ்மைலி போட்டாலே பெண்களிடம் சாரு வம்பு என்று தலைப்புச் செய்தி போடும் நிலை இருக்கிறது. என் நிலை மிகவும் vulnerable ஆக இருக்கிறது. என்னால் இந்த சமூகத்தில் உண்மை பேச முடியாது. நான் உண்மை பேசினால் என்ன ஆகும் என்பதை நீங்கள் கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். அவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் யாவுமே உண்மை பேசுபவை. அதில் பிரதான பாத்திரமாக வருபவர் கோபி. என் பெயர் கோபி கிருஷ்ணன், நான் ஒரு எழுத்தாளன் என்றுதான் கதையையே தொடங்குவார். அடுத்த பத்தி, எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காம உணர்வு ஏற்படுகிறது என்று அடுத்த பத்தி ஆரம்பமாகும். கோபி எல்லோருக்கும் செல்லக் குழந்தை. நான் அப்படி அல்ல. என் எழுத்தால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நானே ஆயுதத்தை வழங்கக் கூடாது.