ஒரு கேள்வியும் பதிலும்

டியர் சாரு,

ஓநாயும் ஆட்டுக் குட்டியும் பற்றி உங்கள் கருத்து என்ன?

செந்தில், திருப்பூர்.

டியர் செந்தில்,

ஒரு முகநூல் எழுத்தாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா?  சர்வதேச அளவில் ஒரு எழுத்தாளன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறானோ, ஒரு எழுத்தாளன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.  தயவு செய்து  பொருளாதார ரீதியாக இதை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களைப் பற்றியும் கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது.  கிருபானந்த வாரியார், சுகி சிவம், வைகோ, அப்துல் கலாம், மு. கருணாநிதி போன்றவர்கள் செய்த வேலைகளையெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளன் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது.  ஆன்மீகச் சொற்பொழிவு, கல்விச் சொற்பொழிவு,  சினிமாவுக்கு வசனம், சினிமா விமர்சனம், இலக்கியச் சொற்பொழிவு என்று எத்தனை வேலைகளை என் சக எழுத்தாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கமல்ஹாஸனின் தசாவதாரத்தையெல்லாம் தோற்கடித்து விடுவார்கள் போல் இருக்கிறது.   இல்லாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்களாம்.  மயிரே போச்சு என்கிறேன் நான்.  ஆனால் இந்த எழுத்தாளர்கள் இவ்வளவு வேலகளைச் செய்வதால் இலக்கியம் கடைக் கோடிக்குப் போய் விட்டது தான் கண்ட பலன்.

நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.  இப்போதும் தினமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி அழைப்புகள் வருகின்றன.  அரசியல் நிகழ்வுகள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி செய்திகளையும் விமர்சனங்களையும் 24 மணி நேரமும் மக்களுக்குத் தீனி போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன தொலைக்காட்சி சேனல்கள்.  ஒரு எழுத்தாளனின் வேலை அது அல்ல.

என் தொழில் எழுத்து.  அதை நான் செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன்.  சினிமா பார்த்து விட்டு கருத்துச் சொல்வதெல்லாம் என் வேலை அல்ல.  ஒன்று செய்யலாம்.  சினிமாக்காரர்கள் தான் சினிமா எடுத்து விட்டு அடுத்த சினிமா எடுக்கும் வரை ஓய்வாக இருக்கிறார்கள்.  அவர்களிடம் போய் எக்ஸைல் எப்படி இருந்தது, ராஸ லீலா எப்படி இருந்தது என்று கேட்டுப் பாருங்கள்…

மிக்க அன்புடன்,

சாரு

 

Comments are closed.