பூனைக் குட்டிகள்

இதைத் தட்டச்சு செய்யும் போது என் கைகள் கோபத்தால் நடுங்குகின்றன. இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன கவியின் கோபத்தில் எழுதுகிறேன். நாங்கள் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறோம். இந்த அபார்ட்மெண்ட்டில் பெரிய விஐபிகள் தான் குடியிருக்கிறார்கள். ஒரே ஒரு வட இந்தியக் குடும்பமும் உண்டு. சற்று நேரத்துக்கு முன்பு, அவந்திகா நான் இன்னும் சாப்பிடவில்லை; பசிக்கிறது; கீழே உள்ள பூனைக் குட்டிகள் பசியில் கத்துகின்றன; போய் உணவு கொடுத்து விட்டு வா என்றாள். நிறைய பூனைக்குட்டிகள் இருந்தன. இப்போது நான்குதான் உள்ளன. ஒரு தாய்ப் பூனை. தகப்பன் பூனை. இரண்டு குட்டிகள். தாயும் தகப்பனும் எப்போதாவதுதான் வரும். கீழே போனபோது வாட்ச்மேன் “தப்பா நினைச்சிக்காதீங்க சார். இனிமே பூனைக்கு சாப்பாடு போடாதீங்க. எல்லோரும் ஆட்சேபிக்கிறார்கள்” என்றார். அவர்கள் அதற்கு சொன்ன காரணம், அவர்கள் முக்கியக் காரியமாக வெளியே போகும் போது பூனைகள் அபசகுனமாக குறுக்கே போகின்றனவாம். இவர்கள் எல்லாம் ஐஏஎஸ் அதிகாரிகள்; மருத்துவர்கள்; எஞ்ஜினியர்கள் என்பதை கவனிக்கவும். மற்றபடி அந்தப் பூனைகள் வேறு எந்தப் பிரச்சினையும் தருவதில்லை. குறுக்கே போவது கூட எதனால் என்றால் அடிப்பார்களோ என்ற அச்சத்தினால்தான். நான் போகும் போது அவைகள் எதுவுமே செய்யாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட மக்களுக்கு எடப்பாடியும் தினகரனும் சசிகலாவும்தானே தலைவர்களாக இருப்பார்கள்? கமலும் ரஜினியும்தானே பாதுகாவலர்களாக இருப்பார்கள்? மலத்தில் நெளியும் புழுவை விடக் கேவலமான இந்த மனிதர்களை நான் வெறுக்கிறேன். இப்படிப்பட்ட மனிதர்களால்தான் நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். அந்த வாட்ச்மேனிடம் சரி, எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் மிச்சம் என்று சொல்லி விட்டு cat food-ஐத் திரும்ப எடுத்துக் கொண்டு வந்தேன். அவந்திகா எவன் சொன்னது, என்னிடம் சொல்லச் சொல் என்று சொல்லி அந்தப் பூனைகளுக்கு உணவைக் கொடுத்து விட்டு வந்தாள்.