பூனைக்குட்டிகள்… (2)

டியர் சாரு…
பூனைக்குட்டிக்கு உணவு போடக்கூடாது பற்றிய உங்களது கட்டுரையை படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் சாரு சில வருடங்களாக நீங்கள் சொல்லி வருகிறீர் உங்களது ஜாதகத்தையோ கைரேகையோ பார்த்த 2,3ஜோதிடர்கள் நீங்கள் நிச்சயம் —–வயது வரை இருப்பீர்கள் என சொன்னதாகவும் அதை நீங்கள் நம்புவதாகவும் எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஜோசியர் சொன்னதை நம்பியதும் அவர்கள் பூனை குறுக்கே செல்வதை  அபசகுனம் என நம்புவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று வேறு வேறு அல்ல. உங்களைத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு இந்த முரண் புரிய மறுக்கிறது.

எனறும் அன்புடன்,
ஜக்கரியா
மதுரை
15.08.2018

டியர் ஜக்கரியா,

மனதில் தோன்றியதை உடனே என்னிடம் கேட்டதற்காக நன்றி.  நீங்கள் முரண் என்று சொல்வதில் எனக்கு எந்த முரணும் தெரியவில்லை.  நான் ஜாதகத்தை நம்புவதும் அவர்கள் பூனை குறுக்கே போவதை அபசகுனம் என்று நம்புவதும் ஒன்று அல்ல.  ஜாதகம் ஒரு விஞ்ஞானம்.  எப்படி என்று நேரில்தான் சொல்லி விளக்க முடியும்.  ஜாதகம் நம்பிக்கை அல்ல.  அப்படிப் பார்த்தால் ஒரு கடவுளை நம்புவதைக் கூட பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்று நம்பும் அசடர்களோடு சேர்க்கலாம்.  கடவுள் மறுப்பாளர்களுக்குத்தான் விஞ்ஞானம் கை கொடுக்கும்.  கடவுள் என்பது வெறும் நம்பிக்கையே.

சரி, கடவுள் பற்றியெல்லாம் விவாதித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  பூனை குறுக்கே போவதும் நான் ஜாதகத்தை நம்புவதும் ஒன்று என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.  அவர்கள் பூனை குறுக்கே போவதை அபசகுனம் என்றே நம்பட்டும்.  தப்பில்லை.  ஆனால் அதற்காக பூனைக்கு உணவு போடுவதைத் தடுப்பது பற்றித்தான் என் ஆட்சேபணை.  இந்தக் குடியிருப்பில் உள்ள ஒரு குடும்பம் மிக வித்தியாசமான, நூதனமான வழிபாட்டு முறை ஒன்றைப் பின்பற்றுகிறது.  அதன்படி வாரம் ஒருமுறை ஒரு மணி நேரத்துக்குப் பெரும் கூச்சல் போடுகிறார்கள். அல்லெலூயா அல்ல; இவர்கள் இஸ்லாமியர்கள்.  இஸ்லாமிய வழிபாட்டு முறை பற்றி ஓரளவுக்கு அறிந்த எனக்கே அது புதுமையாக இருந்தது.  அது பற்றி குடியிருப்பில் பெரும் புகார்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.  எனக்கு அது புகாராக இல்லை.  வாரத்துக்கு ஒருநாள்தானே?  அதிலும் பகல் நேரம்.  மேலும், அவர்கள் யார் வம்புக்கும் போவதில்லை.  யாரைப் பார்த்தாலும் புன்னகைக்கும் வழக்கம் உள்ளவர்கள்.  மற்ற குடும்பத்தினர் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு செல்வார்கள்; ஜெயின் குடும்பமும் இந்த இஸ்லாமியக் குடும்பமும் மட்டும்தான் நாகரீகமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – கலெக்டர்களும் டாக்டர்களும் வசிக்கும் குடியிருப்பு இது.

மீண்டும் நம் பிரச்சினைக்கு வருகிறேன்.  ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே வசிக்கும்  புறாக்களுக்கு தானியம் போட்டு வந்தனர்.  புறா எச்சம் போடுகிறது என்று ஆட்சேபணை எழுப்பி அதைத் தடுத்து விட்டார்கள் மற்ற சில குடும்பத்தினர்.  இப்போது பூனைக்கு வந்திருக்கிறார்கள்.  ஜக்கரியா, நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்பி விட்டுப் போங்கள்.  அதனால் யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது.  அவ்வளவுதான் என் கட்சி.  சில கணவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?  இன்ன மாதிரி ஜோசியர் எனக்கு இன்னமாதிரி ஆயுள் என்று சொல்லியிருக்கிறார்.  ஆயுளை விருத்தி செய்ய காலையில் ஐந்து மணிக்கு மணி அடித்துப் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  நீ தினமும் காலையில் எனக்கு உதவி செய் என்று மனைவியின் தலையை உருட்டுவார்கள்.  அது மட்டும் அல்ல; காலையில் மணி அடித்தால் இங்கே வசிக்கும் எல்லாக் குடும்பத்தினருக்கும் பிரச்சினை.

என் ஜாதகத்தை நான் நம்புவதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?  ஒரு பேச்சுக்கு நான் கமல்ஹாசனைப் போல ஒரு கடவுள் மறுப்பாளன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இமயமலைப் பகுதிகளில் நீங்கள் பயணம் செய்தால் அங்கே உள்ள டிரைவர்கள் நாலை கருங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து அதைக் கும்பிட்ட பிறகுதான் வண்டியை எடுப்பதை கவனித்திருக்கலாம்.  மேலும், கார் போகும் வழியிலும் கூட அம்மாதிரி கற்களைப் பார்த்தால் வண்டியை நிறுத்திக் கும்பிடு போட்டு விட்டுத்தான் காரை எடுப்பார்கள்.  ஏனென்றால், கார் ஒரு இஞ்ச் தப்பாக நகர்ந்தால் கூட நம் எலும்பு மிஞ்சாது.  கீழே அதலபாதாளம்.  கமல்ஹாசனாக இருந்தால் அவர்களெல்லாம் முட்டாள்கள் என்று சொல்வார்.  அப்படிச் சொல்பவன் தான் முட்டாள்.

எனவே நம்பிக்கையால் பிரச்சினை அல்ல; நம் நம்பிக்கை மற்றவர்களுக்குப் பிரச்சினை ஆகி விடக் கூடாது.  மேலும், இந்த எல்லா விஷயத்தையும் மறந்து விடுங்கள்.  வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாடு போடுவதைத் தடுக்கச் சொல்லி சொல்கிறார்களே அவர்களையெல்லாம் நீங்கள் மனிதர்கள் என்றா நினைக்கிறீர்கள்?  எனக்கு வந்த கோபத்துக்கு அப்படிச் சொன்னவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.

நான் பூனை உணவை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்குத் திரும்பும் போது என்ன சொல்லி விட்டு வந்தேன் தெரியுமா?  ”காரியம் கெட்டு விடும் என்று பூனைக்குச் சாப்பாடு போடக் கூடாதா, ஓஹோ, இந்த அபார்ட்மெண்ட்டுல இடிதான் விழும்” என்று சொன்னேன்.  இதுவே பாரதியாக இருந்திருந்தால் சொன்னவர்களின் தோலை உரித்திருப்பார்.  எனக்கு அறச் சீற்றம் குறைந்து விட்டது.

சாரு