ராஸ லீலா – ஒரு மதிப்புரை

புதிய நண்பர் ராம் ராஸ லீலா பற்றி எழுதிய கடிதம்

பெருமதிப்பிற்குரிய சாரு அவர்களுக்கு ,

ராஸ லீலா நான் படித்த உங்களின் முதல் புத்தகம்.சில சமயங்களில் நல்ல உணவகங்கள் பொது வழிகளில் இருப்பதில்லை. நம்முடைய ருசிக்கான தேடலைப் பொறுத்தே அவற்றைக்கண்டடைய முடியம்.உணவகங்கள் விஷயத்தில் நாம் தேர்வு செய்யவதற்கு நமக்கு நண்பர்கள்,அலை பேசி செயலிகள் போன்றவை உதவுகின்றன.ஆனால் இலக்கியத்தில் அப்படி விலாசங்கள் எளிதில் கிடைப்பதில்லை.பல இடங்கள் சுற்றிய பின்னேரே நான் இங்கு வர நேர்ந்தது. வெகு தாமதம் தான், ஆனால் பாதகம் இல்லை,முன்பே வந்திருந்தாலும் எனக்கு இவ்வுளவு பாதிப்பை இந்த நாவல் கொடுத்திருக்காது, என் மனம் இதைத்தாங்கும் அளவிற்குப் பண்பட்டிருக்காது. 

அதனால் நான் தாமதமாய் வந்ததும் என்னளவில் நலம் என்றே கருதுகிறேன்.

இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை இப்படி கீழ்க்கண்டவாறு தொகுத்து இருக்கிறேன். இதை நான் review எழுதும் மன நிலையில் எழுதவில்லை,நான் விமர்சகன் அல்ல, இங்கு நான் ரசிகனாக கண்ணாயிரம் பெருமாளுடன் சுற்றிய நாட்களை மட்டும் தொகுத்து பதிவு செய்ய நினைக்கிறன்.

நாவல் அமைப்பு 

முதல் பாகம் கண்ணாயிரம் பெருமாளும் நாற்பது கதைகளும், சில பின்குறிப்புகளும். இரண்டாவது பாகம் ராஸலீலா.

பெரும்பாலும் நாவல்கள் அமைப்பு என்பது ஒரு பொதுவான தளத்தில் பங்குகொள்ளும் வெவ்வேறு மனிதர்களின் கதைகளாக அல்லது அனுபவங்களாக இருக்கும். அதாவது, கதை மாந்தர்கள் அனைவரும் கதையின் மையச்சரடில் இணைக்கப்பட்டிருப்பார்கள். நாம் அது போன்ற நாவல்களில் பெருநதிகளில் பயணம் செய்யும் அனுபவத்தை அடையலாம். அது ஒரு வகையான பயணம்,அது எல்லோரும் செய்ய கூடியது.

ஆனால் அதே நதி,கிளை நதிகளாகப் பிரிந்து பல ஊர்களுக்குள் சென்று அங்கிருந்து கால்வாய்களாகப் பிரிந்து குளத்தில் சென்றடைவது வரை பின்தொடர்வதென்பது இயலாத காரியம்.எத்தனை கிளை நதிகளில் செல்வது? கிளை நதிகளில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் எதைத் தேர்வு செய்து பின்தொடர்வது? இப்படி செய்து கொண்டே இருந்தால் அந்த ஆட்டத்திற்கு முடிவும் உண்டோ? அப்படி ஒரு ஆட்டமே ராஸலீலா. அந்த நதி தான்  கண்ணாயிரம் பெருமாள்.

நதியின் கிளைகளாக நான் தொகுத்துக் கொண்டவை 

கண்ணாயிரம் பெருமாளும் அஞ்சல் அலுவலகமும்

கண்ணாயிரம் பெருமாளும் மலச்சிக்கலும் 

கண்ணாயிரம் பெருமாளும் காமஇச்சைகளும் 

கண்ணாயிரம் பெருமாளும் பயணங்களும் 

கண்ணாயிரம் பெருமாளும் காதல் கடிதங்களும் 

கண்ணாயிரம் பெருமாளும் உலக வங்கியும்

கண்ணாயிரம் பெருமாளும் இந்த நாவலில் வரும் பின்குறிப்புகளும், புத்தகங்களும், இசைக் கோர்வைகளும்,சினிமாக்களும். 

இவற்றில் நான் நிச்சயம் பலவற்றை விட்டுவிட்டேன். என்னை மன்னியுங்கள்.

கண்ணாயிரம் பெருமாளும் அஞ்சல் அலுவலகமும்

சென்னை அண்ணா நகரில் இருந்து வேலூரில் உள்ள அலுவலகத்திற்கு தினமும் ரயிலில் பயணம் செய்து,காலை உணவை ரயில் டாய்லெட் அருகே அமர்ந்து விண்டு முழுங்கி பத்தரை மணிக்கு அலுவலகத்தில் நுழைந்து உயரதிகாரிகளால் பந்தாடப்பட்டு, இரவு மீண்டும் ரயில் பிடித்து சென்னை வந்து சேருகிறான் பெருமாள்.பெருமாளின் இந்த அலுவலக உலகத்தில் நாம் வெகு சாதாரணமாக உலாவ முடிகிறது. அலுவலகத்தில் டாய்லெட்டுக்குக் கதவு இல்லாததால் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள் அனைவரின் ஆண்குறிகளையும் பார்த்திருக்கிறேன் என்று ஒரு இடத்தில வரும். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், கதையில் அந்த  இடம் வரை நான் கற்பனை செய்து வைத்திருந்தது பெருமாளின் அலுவலக சகாக்களின் முகம் மற்றும் அவர்களின் பாவனைகள் மட்டும் அல்ல, அவர்களின் ஆண்குறிகளையும்தான். அதை நான் உணர்ந்த இடம் இது. நாவலில் எவ்வுளோவோ இடம் இருந்தும் இதை ஏன் வியக்கிறேன் என்றால் கற்பனையே sub consciousnessஇல் செய்வது தான்; ஆனால் அந்தக் கற்பனையின் உள்ளும் ஒரு sub consciousness இருந்து கற்பனையில் நாம் உருவாக்கிய விஷயங்களில் நாம் உணராத சிலவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.  இதை முதன் முதலாக அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இந்த அலுவலக பகுதிகள் அனைத்தும் நான் வாசிக்கும் பொழுது எதோ நானே போஸ்ட் ஆபிஸில் பல வருடங்கள் வேலை பார்த்தது போலவும் கண்ணாயிரம் பெருமாளின் கோபங்கள், உயர் அதிகாரிகள் குறித்த அங்கதங்கள், சண்டைகள்  அனைத்தையும் மிக நெருக்கமாகவும் உணர்ந்தேன். வாசிப்பை வாழ் நிகர் அனுபவமாக்குகிறது ராஸலீலா.

கண்ணாயிரம் பெருமாளும் மலச்சிக்கலும் 

இந்தியர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் நார்ச்சத்து அதிகம் இல்லை என்பதால் மலம் எளிதில் வருவதில்லை என்பதில் ஆரம்பித்து பெருமாள் பாரிஸில் படும் அவஸ்தைகள், பன்றிக்கறி தின்னும் படலங்கள், ஆபரேஷன் முடிந்த பின்னர் நெஞ்சு எலும்பு உடைந்து விடுமோ என்று பயப்படும் பொழுது, மலச்சிக்கலுக்குப் பரிந்துரை செய்யப்படும் உணவுகள் மற்றும் மருந்துகள் என்று இந்த சிக்கல் பெருமாள் உடன் எப்பொழுதும் இருக்கிறது. பல கதைகள் மற்றும் கதை மாந்தர்கள் என்று வந்து கொண்டு இருக்கும் பொழுது இந்த உடல் உபாதையே  கதைக்குத் தொடர்புத்தன்மையைத் தருகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றால்  எனக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் (டச் வுட்!) நான் காலை எனது அலுவலக சகாக்களுடன் ஒரு restaurant போகிறேன்,அங்கே எனது வெளிப்படையான செயல்கள் ஒருவித பாவனையோடு இருக்கும்,பின்பு நான் எனது உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன் அங்கே எனது பாவனைகள் வேறு மாதிரி இருக்கும்,வரும் வழியில் நான் எனது கல்லூரி நண்பன் ஒருவனைச் சந்திக்கிறேன் -அப்பொழுது எனது பேச்சும் தோரணையும் மாறும். ஆனால் எனக்குள் இருக்கும் உடல் உபாதை மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு வகையான இயல்பற்ற தன்மை மனதில் இருக்கும்-ஆனால் வெளியே காட்டிக்கொள்ள முடியாது. பொதுவாக  கதாபாத்திரங்களின் உருவாக்கங்கள் – வர்ணனைகள் அல்லது தீவிரமான கதைச் சூழல்,அல்லது தீவிரமான உள்  உரையடல்கள் மூலமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் .ஆனால் இங்கு இந்த மலச்சிக்கல் பிரச்சனையை பெருமாள் ஒருவகை சுய அங்கதத்துடன் எதிர்கொண்டு வேறு வேறு கதைத்தளங்களுக்குச் செல்கிறான்.  பெருமாள் என்ற பாத்திரம் பல உள்ளடுக்குகளுடன்  ரத்தமும் சதையுமாக நம் அகத்தில் நிகழ்கிறான். 

கண்ணாயிரம் பெருமாளும் காமஇச்சைகளும் 

Transgressive – a violation of moral or social boundaries.

சமூக வரையறைகளை ஒழுக்கங்களை மீறுவது என்று இதை என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். உயர்வானவை மட்டுமே சமூகத்தின் விழுமியம், அது நாம் ஒன்றாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்ட வரையறை. மகாபாரத்தில்  பாஞ்சாலியை அர்ஜுனன் வென்றான், குந்தி இந்தப் பரிசை   ஐவரும் பகிர்க என்று சொல்லும் முன்பே தருமன் அவள் மேல் மோகமுற்றிருந்தான். நியாயங்கள் தெரிந்த அவனுக்குத் தெரியும் அவன் தம்பி வென்று வந்த அவள் மேல் தனக்கு உரிமை இல்லை என்று. ஆனாலும் மனம் தர்க்கத்தை மீறுகிறது. அப்படியானால் மஹாபாரதமே முதல் transgressive படைப்பு ஆகிறது. அப்படி இருந்தும் மஹாபாரதம் புனித நூலாக கருத்தப்படவில்லையா? வியாசன்  வானத்தைப் போன்றவன்.  அதனால்தான் அவனால் அனைத்து மானுட உணர்வுகளையும் தன் காவியத்தில் அடக்கிக் கொள்ளமுடிகிறது.

எல்லா காலங்களிலும் மனித இச்சைகள் மீண்டும் மீண்டும் தர்க்கங்களை மீறியே செல்கிறது. அதனால்தான் விழுமியங்களுக்கு அனைவரும் உரத்த குரல் கொடுத்து விட்டு, pornography-ஐ சத்தம் இல்லாமல் பார்க்கிறார்கள். எனது அலுவலக நண்பன் ஒருவன், பக்தி சிரத்தைகளில் அவனை மிஞ்ச முடியாது. ஒருநாள் அவன் கைபேசியில் youtubeஇல் டைப் செய்யப் போகும் பொழுது ஒரு பிரபல நடிகை பேரைப் போட்டு பக்கத்தில் hot என்று டைப் செய்து இருந்தான். இது அவனது அந்தரங்கம், நான் நுழைய இடமில்லை. ஆனால் இந்த மனிதர்கள்தான் பொதுத்தளத்தில் transgressive என்ற வார்த்தைக்கு எதிர்வினையாற்றுபவர்கள். தங்களிடம் ஒரு குற்ற உணர்வு இருப்பதாலேயே அவர்கள் இதை மறுக்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு நீங்கி உங்களிடம் நீங்கள் சகஜமாக இருக்க வேண்டும் என்றால் பெருமாளின் அந்தரங்கங்களுக்குள் நுழைய வேண்டும். அவனது அந்தரங்கம் ஒரு கடல். இறுதி வரை அவன் புணர நினைக்கும் ம்யூஸ்,பாரிஸில் தனது எதிர்ப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் பெண்ணின் முலைக் காம்புகள் குளிரில் விரைத்ததைக் கண்டு கண்ணை எடுக்க முடியாத தவிப்பு,தாய்லாந்தின் அழகிகள், யோனி பற்றிய குறிப்புகள், காமத்தின் உச்சத்தை அடைய தினம் துடிக்கும் மனம், இதய அடைப்பிற்கும் முக்கிய காரணமாக காம இச்சைகள் பூர்த்தி அடையாமல் தினம் சுய போகம் செய்ததினால் உண்டான மனஅழுத்தம், நாற்பது ஆயிரத்திற்கு மெத்தை வாங்கி அதன் மேல் கலவி கொள்ளவேண்டும் என்ற ஆசை , அலைபேசியில் காமப் பேச்சுக்கள் –  பேசுவதற்கு மட்டுமேயான தோழிகள்  என்று பெருமாளின் வாழ்க்கையில் பல வகைகள் உள்ளன . இது போன்ற நாவல்களை வெறும் morality அடிப்படையில் நிராகரித்தால் இழப்பு நமக்கே.

இது சமகால வாழ்வின் ஒரு அப்பட்டமான உண்மையைப் பேசுகிறது. இலக்கியம் சமூகத்தின் மனசாட்சி,இது நாம் எவ்வுளவு sexually deprived -ஆக இருக்கிறோம் என்று நமக்கு உணர்த்தும். இன்று காமம் ஒரு commodity. இதனை வலைத்தளங்கள் நம்மால் நம்ப முடியாத வகையில் புணரும் காட்சிகள், பல நூறு வகைகளில் புணர்ச்சி, இப்படி காமம் தினமும் நமக்கு உற்பத்தி செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நுகர்வுத்தன்மையில் இருந்து நம்மை எப்படிக் காப்பது என்பதை நீங்கள் பெருமாள் பாதையில் சென்று பார்த்தால்தான் தெரியும். பெருமாளும் கோடானுகோடி இந்தியர்களைப் போல sexually deprived, அவனும் எத்தனையோ வழிகளில் முயற்சித்தாலும் இச்சை மட்டுமே எஞ்சுகிறது. ஆனால் அவனுடைய அத்துமீறல்  எதுவும் ஆபாசமாகத் தெரியவில்லை. நாம் இன்று பின்பற்றிக் கொண்டு இருக்கும் விக்டோரிய ஒழுக்கவியலும் நமது நுகர்வு மனப்பான்மையும் நம்மை ஒரு மன அழுத்தத்திற்குள்ளாக்குகிறது என்பதை பெருமாளின் ராஸலீலைகள் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.

கண்ணாயிரம் பெருமாளும் பயணங்களும்

பெருமாள் பாரிசுக்கும் தாய்லாந்துக்கும்  சென்று வருகிறான். கிட்டத்தட்ட தனியாக ஒரு பயண நாவலாக வரும் அளவிற்கு விஷயங்கள் உள்ளன. 

சாதாரணமாக பயண நாவலில் பயணி தனது அறிவார்ந்த மற்றும் அந்தச் சமூகம் சார்ந்த தனது அவதானிப்புகளை வைத்து கட்டுரைகளாக எழுதுவார்கள். ஒரு புனைவாக பயண நாவல் எழுதியது அசோகமித்திரன்(ஒற்றன்). பெருமாளின் பயண அனுபவங்கள் வேலூர் சென்னை டில்லி, பீச் நண்பர்கள், காதலிகள் என்று சுழன்று கொண்டிருக்கும் கதைக்கு நடுவில் வருகிறது. பாரிஸில் “இந்த மூத்திர ஆறு அல்லவா சுதந்திரத்தின் நதி, இதை முத்தமிடப் போகிறேன் என்று பொங்கும் போதும்”, தாய்லாந்தில் காலையில் இரவு விடுதி பெண்கள் இரும்பில் வேலை பார்ப்பது, அவர்கள் நிர்வாணமாய் இருந்த போது என்னனுள்  வராத எழுச்சி இப்பொழுது வருகிறது என்று பரவசம் அடையும் போதும்  அந்த ஊர்களின் அடி நாதம் தெரிகிறது. பாரிஸ் என்றால் கலை என்பது அனைவருக்கும் தெரியும்; ஆனால் கலைக்கு அடிநாதம் சுதந்திரம் அல்லவா? தாய்லாந்து என்றால் பெண்கள், பாலியல் தொழிலாளிகள். ஆனால் இரவில் சுகந்தம் மணப்பதற்கு அவர்கள் பகலில் சிந்தும் வியர்வை அந்த மண்ணின் அடிநாதம்.

கண்ணாயிரம் பெருமாளும் காதல் கடிதங்களும் 

yahoo chat box  மக்களைப் பிடிக்க வைத்த பித்து நிலைமையை இன்னும் முகநூல் தொடவில்லை என்றே நினைக்கிறேன். பெருமாளுக்கு வரும் காதல் கடிதங்களில் வரும் பெண்கள் அனைவரும் தனிமையில் இருப்பவர்கள். ஹைதராபாத்,கனடா,நியூ யார்க் என்று தனிமையில் இருப்பவர்கள். யாரும் நேரில் வரும் பொழுது பெருமாளப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள் 

ஆனால் செய்வதில்லை. இந்த பகுதி என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஆய்வுக்குரிய பகுதி. ஏன் என்றால் போன தலைமுறையில் ஆண் பெண் உறவுகளுக்கும் இந்தத் தலைமுறையில் உள்ள உறவுகளுக்கும் தலைகிழ் வித்தியாசங்கள். இதற்கு காலம் மாறிப் போச்சு என்று ஒற்றை வரி வாதத்தை முன்வைக்க முடியாது. தொழில் நுட்பத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் சமூகத்தின் உரையாடல்களில் பலமாற்றங்கள் ஏற்படுத்தியது.

இந்தியாவின் பெரு நகரங்களில் ஆண் பெண் இருவரும் சகஜமாய்ப் பேசுவது இயல்பான ஒன்று. ஆனால் மற்ற அனைத்து ஊர்களிலும் பொது இடங்களில் பேசினாலே அப்பன் காதுக்கு விஷயம் போய் விடும். முதலில் அடி ,அப்புறம் தான் விசாரணை. இது போன்ற பல அடக்கு முறைகளில் சிக்கித் தவித்த ஒரு தலைமுறைக்கு கட்டற்ற ஒரு சுதந்திர வெளியாக, நோட்டமிட எந்தக் கண்களும் இல்லாத, சமூகத்தின் எந்த வரையறையாலும் ஒழுங்கு செய்யப்படாத ஒரு தளமாக இணையம் அமைகிறது. ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை பேருடன் வேண்டுமானாலும் பேசலாம். அதிலும் சொந்தமாக கணிணி வைத்திருக்கும் வீட்டில் எவ்வுளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இங்கு உரையாடும் ஆண்களும் பெண்களும் பொது இடங்களில் கண்ணியமாகப் பேசினாலும் அவர்களின் அந்தரங்கக் கனவுகள் இணையத்தில் நிறைவேற்றப்பட்டன. சமூகத்தில் இணையத்திற்குப் பின்பு ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி சமூகவியாளர்கள் ஆராய நாவலின் இந்தப் பகுதி ஒரு தொடக்கப் புள்ளி. (இது குறித்த ஆய்வுகள் வந்துஇருக்கின்றனவா என்று தெரியவில்லை) இது போன்ற விவாதங்களைத் துவக்கத்தான் நமக்கு transgressive நாவல்கள் தேவை. சமூகத்தின் விழுமியங்களை ஒரு தலைமுறை முழுவதும் மீறத் தூண்டிய கட்டாயம் எது என்ற கேள்வியை எழுப்புகிறது நாவலின் இந்தப் பகுதி. 

கண்ணாயிரம் பெருமாளும் உலக வங்கியும்

சமகாலத்தின் அபத்ததில் இதுவும் ஒன்று. கமிசன் கமிசன் என்றே ஒரு கும்பல் திரிகிறது. வாழ்வில் அனைத்தையும் பார்த்த பெருமாள் இதையும் பார்க்க முடிவெடுக்கிறான். எந்த மூலதனமும் இல்லாமல் கமிசன் மூலமே வாழத் துடிக்கும் சமூகத்தின் மீதான அங்கத வெளிப்பாடு.

கண்ணாயிரம் பெருமாளும் இந்த நாவலில் வரும் பின்குறிப்புகளும், புத்தகங்களும், இசைக் கோர்வைகளும், சினிமாக்களும். 

இந்த நூலில் வரும் பின்குறிப்புகள் – மேற்கோள்கள் இவற்றை வைத்து சுஜாதா போல் கற்றதும் பெற்றதும் என்று எழுதித் தள்ளலாம். அதே போல ஒரு பத்து  பதினைந்து பேர்களை மனப்பாடம் செய்து நண்பர்கள் மத்தியில்  பெருமை பீற்றி கொள்ளலாம். இந்த நாவலில் வரும் கதை சொல்லி ஒரு எழுத்தாளர், தனது வாழ்வின் நிகழ்ச்சிகளையெல்லாம் தான் படித்த கவிதை மற்றும் கதைகளின் மூலம் மோதிப் பார்க்கிறது அவனது அகம்.

அவனை பாதித்த சம்பவங்களையும் அதற்கு அவன் அகம் சொல்லும் பதில்களாய் இந்தப்  பின்குறிப்புகள் வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வையும் அதன் மேற்கோளாக கொடுக்கப்படும்  வரிகளுக்கும், பட்டினத்தார் பாடல்களுக்கும் ,வேத மந்திரங்களுக்கும்  உள்ள தொடர்பை ஒரு தனிப் புத்தகமாக எழுதலாம். இந்த கதையில் பாவாரியா பற்றிய குறிப்புகளைப் பார்க்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த நாவலில் வரும் ஒரு வரி அப்படியே தீரன் படத்தில் வருகிறது. “MLA வீட்டில் கை வரிசை காட்டிய பின்னரே அரசாங்கம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது.”

மலையளவு புற்கள் இருந்தாலும் ஒரு ஆடு அதன் வயிற்றளவே உண்ணும். என்னால் முடிந்த வரை தொகுத்து உள்ளேன். இந்த வாதங்கள் அனைத்தும் நான் உங்கள் எழுத்துடன் நடந்த சம்போகத்தில் உருவாக்கி கொண்டேன்.  நீங்கள் தானே நாவலில் எழுத்திருந்தீர்கள்,எழுத்து என்பது சம்போகம் மாதிரி அதில் நான் மட்டுமல்ல நீயும் வேண்டும் என்று. இந்தப் புரிதல்கள் சரியா தவறா என்று தெரியவில்லை. அதைவிட இந்த நாவலைப் படிப்பதற்கு எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டன. இந்த வருடத்தின் மிகத் தீவிரமான நாட்கள் என்று சொல்லுவேன். அதை கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

பி.கு : வெறும் 300 பிரதிகள் விற்பதற்காகவும் தமிழில் நாவல் எழுதுவது வீண் என்று உங்கள் பிளாகில் குறிப்பிட்டுஇருந்தீர்கள். வருந்துகிறேன்.

பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தா உங்கள் ஜனனத்தை பிரான்சில் நிகழ்த்தி இருந்தால் உங்கள் முகம் போட்ட டீ ஷர்டுகள் அதிகம் விற்றுஇருக்கும் இந்த ஊரில்.

நன்றி

ராம் .