தீபாவளி

தீபாவளிகள் எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. வெடிச்சத்தம். அதோடு, காலையில் பட்டினி வேறு கிடக்க வேண்டும். தீபாவளியும் அதுவுமாக ஓட்டலில் சாப்பிட மனம் இஷ்டப்படாது. மனம் தானே துன்பத்தை உருவாக்கும் கேணி? நண்பர்களின் வீடுகள் உறவுக் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.

தீபாவளி அன்று வயிறு காயும் போதெல்லாம் எனக்கு மலையாளக் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சிதம்பர நினைவுகள் ஞாபகம் வரும். பாலச்சந்திரன் இளைஞனாக இருக்கும் போது – அப்போதே அவர் பிரபலமான கவி – வீட்டிலிருந்து வெளியேறி பராரியாக எங்கெங்கோ சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார். ஒரு ஓணம் பண்டிகை அன்று ஒரு வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்கிறார். இளைஞர். சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆனது என்றே தெரியாத நிலை. தோற்றம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். மண்ணையும் கல்லையும் தின்னும் பசி.

வெளியே வந்து பார்த்த பெண்மணிக்கு மனசு கேட்கவில்லை. ஐயோ, யார் பெற்ற பிள்ளையோ, இப்படி ஓணத்தன்னிக்கு வந்து இத்தனை பசியோடு பிச்சை கேட்குதே, உள்ளே வா தம்பி என்று அழைத்து இலை போட்டு சாப்பாடு போடுகிறார்கள். பாலச்சந்திரனுக்குக் கண்ணீர் வந்து விடுகிறது. அப்போது அந்தப் பெண்மணியின் மகள் – அவள் கல்லூரி மாணவி – சார் நீங்கள் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தானே, உங்கள் கவிதைகளை எங்களுக்குப் பாடமாக வைத்திருக்கிறார்கள் என்றாளாம்.

கலங்க அடித்த பகுதி அது. ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு. வம்சி வெளியீடு.

அந்தச் சம்பவம்தான் தீபாவளி அன்று எனக்குக் கொலைபசி ஏற்படும் போதெல்லாம் ஞாபகம் வரும். 364 தினங்களும் எனக்கு உணவிடும் நண்பர்கள் உண்டு. தீபாவளிகள் நண்பர்களின் கைகளில் இல்லை. அது உறவுக்காரர்களுடையது; குழந்தைகளுடையது. கவிகள் அன்றைய தினத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நல்ல காலம்; இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் ஷார்ஜாவில் இருப்பேன். நினைக்கும் போதே இனிக்கிறது – தீபாவளித் துன்பத்திலிருந்து விடுதலை என்று எண்ணி!