ஷார்ஜா – 1

ராம்ஜியும் காயத்ரியும் அவர்களுடைய ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக ஷார்ஜா புத்தக விழாவில் ஒரு அரங்கம் வைப்பதற்காகக் கிளம்புவார்கள் என்று நான் நினைத்தேன்.  அதைத் தொடர்ந்து நாமும் அங்கே போனால் என்ன என்று யோசித்தேன்.  சீலே பயணம் வேறு தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் கிட்டத்தட்ட மனநோயாளி போல் ஆகிக் கொண்டிருந்தேன்.  காரணம் இருக்கிறது.  சீலே, அர்ஹெந்த்தினா, ப்ரஸீல், பெரூ, பொலிவியா ஆகிய ஐந்து நாடுகளில் 62 தினங்கள் பயணம்.  பல இடங்களில் கூடாரங்களில் தங்குதல்; குதிரையில் பயணம்.  இப்படியான ஒரு திட்டம் அது.  கட்டணம் 5 லட்சம்.  இது மகா மகா மலிவு.  பயண ஏற்பாடெல்லாம் அமெரிக்கர்கள். ஐந்து லட்சம் இருந்தாலும் நான் போக முடியாது.  ஏனென்றால், ஒவ்வொரு பயணத் திட்டத்துக்கும் ஒவ்வொரு வயது வரம்பு உள்ளது.  இந்த 62 நாள் பயணத்தின் வயது வரம்பு 39.  நான் அவுட்.  எனக்கோ வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்துப் பழக்கமே இல்லை.  ஆனால் இந்த சீலே பயணமோ கடந்த 20 ஆண்டுகளாகப் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது.  அதனால் ஏற்பட்ட மனச்சோர்வில் ஷார்ஜா புத்தக விழாவுக்காகப் போகலாம் என்று நினைத்தேன்.

ஆனால் கடைசியில் ராம்ஜியும் காயத்ரியும் அடுத்த ஆண்டு போகலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  நான் கிளம்பி விட்டேன்.  என் வாழ்க்கையில் இதுவரை நான் பாலைவனத்தையே பார்த்ததில்லை.  ராஜஸ்தானில் இருக்கிறது.  ஆனால் போனதில்லை.  நான் பனி மனிதன்.  பனி தான் இஷ்டம்.  ஐஸ்லாந்திலேயே இருக்கச் சொன்னாலும் இருந்து விடுவேன்.  ஆனாலும் அப்துர்ரஹ்மான் முனிஃபின் (Abderrahman Munif) எழுத்துக்களைப் படித்த பிறகு பாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து விட்டது.  முனிஃப் எழுதிய பாலை நிலங்களின் காதை முடிந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன.  என்றாலும் அந்நிலங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டவர் முனிஃப்.  அவர் வாழ்ந்தது சவூதி அரேபியா. சவூதி அரேபியா ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பு.

அங்கிருந்து இப்போது நான் போகும் ஷார்ஜா இருக்கும் தூரம் அதிகம்.  சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதுக்கும் மெக்காவுக்கும் 1400 கி.மீ.  சென்னையிலிருந்து மும்பை தூரம்.  ஆனால் ரியாதுக்கும் ஷார்ஜாவுக்குமான தூரம் 1000 கி.மீ.தான்.  ஆக, ஒரு நாடு பெரிதாக இருக்கும் போது அந்த நாட்டுக்குள்ளேயே பல்வேறு கலாச்சார அடையாளங்களை நாம் காண நேர்கிறது.  இந்தியா என்ற தேசத்தில் வாழும் நம்மில் எத்தனை பேர் வட கிழக்கு மாநில வாழ்வை அறிந்திருக்கிறோம்?  அதை விடுங்கள்.  உத்தரப் பிரதேசம் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும்தான் எத்தனை வித்தியாசம்!

கத்தரில் வசிக்கும் என் நண்பர் நிர்மல் வளைகுடா நாடுகளின் பக்கம் வந்து விடாதீர்கள்; இங்கே உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கை இல்லை என்று அடிக்கடி சொல்வார்.  அப்துர்ரஹ்மான் முனிஃப் என்ற அந்த மாமேதை ஆயிரமாயிரம் பக்கங்களில் விவரித்த அந்த வாழ்க்கை இப்போது ஆதிவாசிகளிடம் கூடவா இல்லாமல் போயிருக்கும்?  எனக்கு அப்படித் தோன்றவில்லை.  நிச்சயமாக யேமன் கிராமங்களில் அந்த மக்களும் வாழ்க்கையும் இருக்கத்தான் செய்யும்.  பல மேற்கத்திய பயணிகள் அங்கெல்லாம் தங்கி அது பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கெல்லாம் ஒரு மாத காலமாவது அந்த கிராமங்களில் சென்று தங்க வேண்டும்.  யேமனில் அப்படித் தங்கலாம்.

அபுதாபி, ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட ஏழு நாடுகள்தான் ஐக்கிய அரபு நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்த நாடுகளில் இந்தியர்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.  இந்தியர்கள் வாழும் நாடுகளுக்குச் செல்வதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது.  ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் நான் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.  இந்தப் பயணங்கள் எதிலும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை இந்த ஷார்ஜா பயணத்தை ஆரம்பிக்கும்போதே அறிந்தேன்.

ஒரு வெளிநாட்டுப் பயணத்துக்குத் தேவை, பாஸ்போர்ட், வீஸா மற்றும் விமான டிக்கட்.  இது போதும்.  ஆனால் OK to Board-உம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார் சிவா.  பிரபு கங்காதரனிடம் விபரம் கேட்டேன்.  அப்படி நான் கேள்விப்பட்டதில்லையே என்றார்.  பிறகு நான் இது பற்றி ட்ராவல் ஏஜெண்டுகளிடம் விசாரித்த போது அரபு நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள், இலங்கைக்காரர்கள் வீசா வாங்கினாலும் அதற்குப் பிறகு OK to Board என்ற ஒன்றை வாங்க வேண்டும்; இல்லாவிட்டால் விமானத்தில் ஏற்ற மாட்டார்கள் என்பதை அறிந்தேன்.

காரணம்?

இந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேஷியர், இலங்கைவாசிகள் ஆகியோர் போலி வீசா கொடுத்துத் தகிடுதத்தம் செய்கிறார்களாம்.  இது அதிக அளவில் நடப்பதால் இப்படி ஒரு கட்டுப்பாடு.

இந்தியர்கள் கூலித் தொழிலாளிகளாக வாழும் நாடுகளுக்குச் செல்வதில் இதுதான் பிரச்சினை.  ஆக, இந்தியா ஒரு பிச்சைக்கார நாடாக இருப்பதால், ஏழைகளால் இங்கே கௌரவமாக வாழ முடியாத நிலை நிலவுவதால் அவர்கள் வளைகுடா நாடுகளுக்கு என்ன தகிடுதித்தமாவது செய்து போகப் பார்க்கிறார்கள்.  என்ன செய்வது?  இந்தியாவில் பிச்சை தான் எடுக்க வேண்டும்.  பன்றித் தொழுவத்தைப் போன்ற குடிசைகளில்தான் வாழ வேண்டும்.  இந்திய வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.  வறுமை மட்டும் காரணம் அல்ல.  இந்தியன் என்றாலே ஏமாற்றுக்காரன் என்று ஆகி விட்டது.  வேறு வழியில்லை.  இதையெல்லாம் நாம் சுமந்துதான் ஆக வேண்டும்.

OK to Board எடுத்தாயிற்று.  இதோ நாளை ஷார்ஜா கிளம்புகிறேன்.