சர்க்கார் – 2

எனக்கு கமர்ஷியல் சினிமா மீது எந்த வெறுப்பும் இல்லை.  ஒரு சமூகத்துக்கு இம்மாதிரி பொழுதுபோக்குகள் தேவைதான்.  எல்லோருமே பெர்க்மன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  ஆனால் சர்க்கார் பொழுதுபோக்குப் படம் மட்டும் அல்ல.  அது ஒரு அரசியல் படம்.  அதாவது, பல தமிழ் சினிமா நடிகர்களையும் போலவே விஜய்யும் முதல்வராக ஆசைப்படுகிறார்.  எதார்த்தம் என்னவென்றால் அவர் அப்பா சந்திரசேகர் ஆசைப்படுகிறார்.  அந்த விபரீத ஆசையின் பலனை தமிழர்களாகிய நாம் அனுபவிக்கிறோம்.

மன்னராட்சியை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளைப் பற்றி மோசமாக நினைத்திருக்கிறேன்.  ம்ஹும்    வந்து பார்த்தால்தான் தெரிகிறது.  நாம்தான் மன்னராட்சியில் இருக்கிறோம். இங்கே மன்னர் வந்தால் நம் நாட்டைப் போல்

அத்தனைப் போக்குவரத்தையும் நிறுத்தி ஸ்தம்பிக்கச் செய்வதில்லை.  இந்தியர்கள் தங்கள் பொதுவாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிக்கும் பொறுப்பை சில தனிமனிதர்களிடம் விட்டு விட்டார்கள்.  பொதுவாழ்வை மட்டும் அல்ல; ஓரளவு தங்களின் அந்தரங்க வாழ்வையும் என்று கூட சொல்லலாம்.  இப்போது நம் பொதுவாழ்வைத் தீர்மானிக்கும் பொறுப்பு கமல், ரஜினி, சந்திரசேகர் போன்றவர்களிடம் உள்ளது.  

சந்திரசேகர் என்ற தகப்பன் தன் செல்லப் புதல்வனான விஜய் என்பவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கத் துடிக்கிறார்.  அதன் விளைவே சர்க்கார்.   நீங்கள் ஏன் சினிமாவுக்கு வசனம் எழுதுவதில்லை என்ற கேள்வியை நான் எதிர்கொள்ளாத நாள் இல்லை.  எழுதினால் சர்க்கார் போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபட வேண்டும்.  வசனம் எழுதுவது என்பது குமுதத்துக்குக் கதை எழுதுவது போல் அல்ல.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  30 ஆண்டுகளுக்கு முன்பு நான் பட்டினி கிடந்த கால கட்டத்தில் – பட்டினி என்றால் நாள் கணக்கில் பட்டினி, நான்கு நாட்கள் எல்லாம் தொடர் பட்டினி கிடந்திருக்கிறேன், அதற்குப் பிறகுதான் பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பித்தேன்… இப்போது நான் சொல்வது பிக்பாகெட்டுக்கு சற்று முன்னால் – செக்ஸ் கதை எழுதி சாப்பிடுவோம் என்று முடிவு செய்தேன்.   மைலாப்பூரில் ஒரு பெரிய பங்களா போன்ற வீட்டுக்கு அழைத்துச் சென்றார் ஏஜெண்ட்.  ஒரு நடுத்தர வயது காமி அமர்ந்திருந்தார்.   ஆங்கிலம் பேசினார்.  எழுதிக் கொடுத்துவிட்டுக் காசு வாங்கிக் கொண்டு போய் விட முடியாது.   அது ஒரு பெரிய பிராத்தல் கூடம்.  அதில் நீங்களும் ஒரு களப்பணியாளராக மாற வேண்டும்.  அந்த அமைப்பின் உறுப்பினர்.   துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்து விட்டேன்.  

புரிகிறதா?   கமல்ஹாசன் முதல்வராக அவரைப் புகழ்ந்து பிட் நோட்டீஸுக்கு புகழ்ச்சிப்பாடல் எழுதித்தர வேண்டும்.  விஜய் முதல்வராக வருவதற்கு நீங்கள் ப்ளூ ப்ரிண்ட் போட்டுத் தர வேண்டும்.  “எத்தனை ஏழைகள் இங்கே பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள்; இவர்களுக்கு நான் மற்வாழ்வு அளிக்கப் போகிறேன்; இவர்களுக்கு நான் சொர்க்கத்தைக் காட்டப் போகிறேன்” என்று பொய் சொல்ல வேண்டும்.  அதுதான் என் அறம், நான் நம்பும் தர்மம், என் வாழ்நாள் பூராவும் நான் கற்ற இலக்கியத்தின் பலன் என்று என்னை நம்பும் வாசகர்களை மேலும் நம்ப வைக்க வேண்டும்.  சக எழுத்தாளன் உங்களைத் திட்டுகிறானே என்று என் மகன் சொன்னால் “கிடக்கிறார்கள் விடு தம்பி.   பொறாமையால் திட்டுகிறார்கள்.  என்னைப் போல் வசனம் எழுத அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அல்லவா? வயிற்றெரிச்சல்” என்று ப்ளாகில் எழுத வேண்டும்.  

கடவுளே.   இப்படியெல்லாம் பணத்துக்கும் புகழுக்கும் ஆடைப்பட்டு என்னை சமூக விரோதிகளிடம் விற்றுக் கொள்ளத் துணியாத நேர்மையான மனதையும் துணிவையும் கொடுத்த உனக்கு என் நன்றி. 

சர்க்கார் தமிழ்நாடு அரசு எடுக்கும் பிரச்சாரப் படத்தைப் போல் இருந்தது.  அதனால்தான் பார்வையாளர்கள் படம் ஓடும் போது தூங்குகிறார்கள்.  முருகதாஸ்… சந்திரசேகர்.. தியேட்டருக்குப் போய்ப் பார்த்தீர்களா? போனால் அந்தத் துயரமான காட்சியை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம்.  துப்பாக்கி படத்தை நான் விரும்பிப் பார்த்தேன்.  கில்லி என்ற படத்தையும் ரசித்துப் பார்த்தேன்.  த்ரிஷாவின் கழுத்தில் விஜய் கத்தி வைக்கும் காட்சி எத்தனை ரசமான ஒன்று.  அப்படி இதில் ஒரு காட்சி இல்லையே!   ஏனென்றால் இது ஒரு பிரச்சாரப் படம்.  சந்திரசேகரின் பிரச்சாரப் படம்.  அதனால்தான் இத்தனை மொக்கையாக உள்ளது.   ஏனய்யா.  இந்தக் காலத்தில் இப்படியா பக்கம் பக்கமாக வசனம் பேசுவது? ஜெயமோகன் அப்படித்தான் எழுதிக் கொடுப்பார். ஆமாம்.  நோபல் பரிசு வாங்க வேண்டிய ஆளைப் போய் இப்படி ஒரு மொக்கைப் படத்துக்கு வசனம் எழுது என்றால் அவர் உங்களை எப்படிப் பழி வாங்குவார்?   இப்படித்தான்.  ஏன் ஐயா.  படம் ஆரம்பிக்கும் போது விலங்குகளையும் பறவைகளையும் துன்புறுத்தவில்லை என்று போடுகிறீர்களே, எழுத்தாளனைத் துன்புறுத்தலாமா?  45 நாள் அந்த ஆளை அறையில் அடைத்து ஒரே ஒரு வரியைக் கொடுத்து மூணு மணி நேரத்து வசனம் கொடு என்றால் அவர் என்னய்யா பண்ணுவார்?  3000 பக்கத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டார்.  “கொசுவினால் டெங்கு.  இது பொதுப்பணித்துறை” என்கிறார் ஹீரோ விஜய்.  அது சுகாதாரத் துறை என்று ஜெயமோகனுக்குத் தெரியாதா என்ன?  எழுத்தாளனை வன்கொடுமை செய்யும் உங்களை வேறு எப்படிப் பழி வாங்குவது? 

படத்தைப் பற்றி எவ்வளவோ எழுதலாம்.  ஒரு மணி நேரமாக என் மொபைல் மூலம் என் ஆள்காட்டி விரலால் தட்டிக் கொண்டிருக்கிறேன்.  சகாயம் ஐஏஎஸ் மாதிரி சற்குணம் ஐஏஏஸ் முதல்வர் ஆகிறார்.  லஞ்சம் வாங்காதது தான் முதல்வராகும்  தகுதி என்றால் லஞ்சம் வாங்காத ஒரு traffic Constable ஐ முதல்வராக்கலாமா? சகாயம் சுடுகாட்டிலிருந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாரே, அதுவே ஐஏஎஸ் விதிகளுக்குப் புறம்பானது என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?   ஒரு ஐஏஎஸ் அதிகாரி தன்னை அரசியல்வாதியைப் போல் முன்னிறுத்துவதே நன்னடத்தை விதிகளுக்குப் புறம்பானது. மில்ட்டிரி ஆட்சி வந்தா நல்லா இருக்கும் சார் என்று சொல்லும் ஆட்டோ டிரைவர்களின் அரசியல் புரிதல்களோடுதான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.   சினிமா ஹீரோக்கள் தமிழ் சமூகத்தின் நோய்க்கூறுகள்.  இவர்களை நம்பும் வரை தமிழ்ச் சமூகம் உருப்படாது. 

கார்ப்பொரேட் கிரிமினல் என்று சொல்லிக் கொள்ளும் விஜய்யின் பெயர் சுந்தர ராமசாமி.  இதற்காக சுராவின் வாரிசுகள் முருகதாஸ் மீது கேஸ் போட்டிருக்க வேண்டும்.  மகா மகா அயோக்கியத்தனமான வேலை இது.  அடுத்து சாரு வசனம் எழுதும் படத்தில் சீரியல் கில்லர் வில்லனின் பெயர் மனுஷ்ய புத்திரன் என்று வைப்பார் என்று எழுதியிருக்கிறார்.  ம்ஹும்.  இளம் பெண்கள் பலரை மயக்கித் தன் வசப்படுத்தி தன் அடிமைகளாக வைத்திருக்கும் பாத்திரத்துக்குத்தான் அவர் பெயரை வைத்திருக்கிறேன்.  நானே படத்தை இயக்கப் போவதால் அவரையே நடிக்க வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அந்த அடிமைகள் கூட்டத்தை வில்லனிடமிருந்து காப்பாற்றும் வயதான பத்திரிகையாளன் தான் ஹீரோ