ந. முத்துசாமி அஞ்சலிக் கூட்டம் – அடியேனின் உரை

பழுப்பு நிறப் பக்கங்களைப் படித்தவர்களுக்குத் தெரியும், ந. முத்துசாமி என் இலக்கியத்தின் தகப்பன் என்று. அறிதலை (perception) எனக்குக் கற்பித்தவர் அசோகமித்திரன். அறிந்து கொண்டதைச் சொல்வது எப்படி என்று கற்பித்தவர் ந. முத்துசாமி. அவரது நினைவஞ்சலிக் கூட்டம் இன்று லயோலா கல்லூரியில் நடந்தது. மொத்தம் 50 பேர் பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடம். அந்தக் குறைந்த கால அளவில் நான் என் தகப்பனைப் பற்றிப் பேசினேன். இன்று பூராவும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, பேச முடியுமா, அல்லது பேசும் போதே உடைந்து அழுது விடுவேனா என்று. ஏனென்றால், அவரது சிறுகதைகளைப் படிக்க முனைந்த போது என்னால் படிக்கவே முடியாமல் கட்டுக்கடங்காத அழுகை வந்தது. அதனால்தான் பேச முடியுமா என்று அஞ்சினேன். நல்லவேளை, பேசி விட்டேன்.