குடியும் ஃபாஸிஸமும் – அராத்து

குடி – கார்ல் மார்க்ஸுடன் ஒரு உரையாடல் 🙂

அராத்து

குடி நோயாளிகள் என்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். தூக்கி வாரிப் போட்டது அவர் கட்டுரையில் நான் கண்ட ஒரே ஒரு உண்மை,இப்போது பலரும் இளம் வயதில் குடிப்பதனால் இறந்து போகிறார்கள். இதற்கு காரணம் குடி அல்ல. இங்கே தமிழ் நாட்டில் கிடைக்கும் மது மதுவே அல்ல , விஷ சாராயம். நாம் பேச வேண்டியது அதைப் பற்றித்தான்.இதோ பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் யாரையும் யாரும் குடி நோயாளிகள் என்று சொல்வதில்லை. அங்கு இப்படி யாரும் இளம் வயதில் சாவதில்லை.

உலகம் முழுக்க குடிப்பதனால் மட்டுமே இளம் வயதில் யாரும் சாவதில்லை. அப்படி இருக்கும் போது எதைப் பற்றி பேச வேண்டும் ?

தமிழ் நாட்டில் சாக்கடை கலந்த தண்ணீரை அரசு தருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதைக் குடித்து பலரும் இறந்தால் , தண்ணீர் நோயாளி என்று சொல்வோமா ?

அந்தக் காலங்களில் காபி கிளப் என்று இருக்கும். காப்பிக் கடையைத்தான் அப்படி சொல்வார்கள். அங்கே அமர்ந்து வெட்டிக் கதை பேசிக்கொண்டே ஒரு நாளைக்கு பத்துப்பதினைந்து காபி குடீப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை காபி நோயாளி என்று சொல்வோமா ?

மது என்பது ,நீண்ட கால பாரம்பரியம் கொண்டது.சிலருக்கு அது வாழ்வியலோடு கலந்த ஒன்று .அதற்கு ஒரு லைஃப் சைக்கிள் இருக்கிறது. ஆரம்பத்தில் கொண்டாட்டங்களுக்கு மட்டும் குடிப்பார்கள். பிறகு வார இறுதி என அதிகரித்து , ஒரு கட்டத்தில் தினமும் குடி என்றாகி ,மீண்டும் அதைக் குறைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது தினமும் 2 பெக் என்று அளவாக குடித்து 100 வயது வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

குஷ்வந்த் சிங்க் ஒரு நல்ல உதாரணம்.

மது குடிப்பதும்,அதை குறைத்துக்கொள்வதும் , அதை ஒழுங்கு படுத்திக்கொள்வதும் அல்லது நிறுத்தி விடுவதும் ஒவ்வொரு தனி மனிதனின் தேர்வு.

குடிக்காதவர்கள் எப்போதும், குடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி வந்தார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு நிறுத்தி விட்டதும், தற்காலிகமாக குடியை விட்டவர்கள் , அல்லது தான் குடிப்பது தனக்கு குற்றவுணர்ச்சியை தூண்டும் போது , தன்னை முன் வைத்து மற்றவர்களுக்கு மறைமுக அறிவுரை கூறுவது போல மற்றவர்களின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி விட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதை நான் சில காலமாக கவனித்து வந்தேன். இதில் கார்ல் மார்க்ஸும் சேர்ந்து கொண்டதுதான் அதிர்ச்சி அளித்தது.ஒரு மதத்தில் பிறந்தவர்களை விட ,மதம் மாறியவர்கள் அந்த மதத்தை ஓவராக பின்பற்றுவார்கள்,பிரச்சாரம் செய்வார்கள். அதே போலத்தான் நன்கு குடித்து எஞ்சாய் செய்து நிறுத்தலாம் என்று யோசிப்பவர்களும் !

ஒருவனின் குற்றவுணர்ச்சியை கிளறி விடுவதுதான் இந்த உலகத்தில் ஆக எளிதான காரியம் . மதம் ,மதவாதிகள் , சாமியார்கள் எல்லாம் இந்த வேலையைப் பார்த்துதான் கல்லா கட்டுகிறார்கள். ஒருவனை குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிப்பதற்குத்தான் ஆள் இல்லை. ஏன் குறைப்பதற்கு கூட ஆளில்லை.

அடிமை பட்ட சமுதாயமாகவும், வறுமையான சமுதாயமாகவும் நாம் இருந்து வந்ததால் , நமக்கு எது செய்தாலும் இயற்கையாகவே குற்றவுணர்ச்சி வரும். தொடர்ந்து தியேட்டரில் போய் நாலு சினிமா பார்த்தால் குற்றவுணர்ச்சி , சுற்றுலா சென்றால் குற்றவுணர்ச்சி , ஷாப்பிங்க் போனால் குற்றவுணர்ச்சி , அவ்வளவு ஏன் கையடித்து விட்டு குற்றவுணர்ச்சியில் உழலும் சமூகம் நாமாகத்தான் இருப்போம்.இந்தப் பின்னணியில் குடிக்கும் பலரும் குற்றவுணர்ச்சியோடே குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் , நீ குடி நோயாளி என்று ஜம்பமாக சொன்னால் , அவன் இன்னும் குற்றவுணர்ச்சியில் உழன்று இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாக ஊற்றிக்கொண்டு மல்லாறுவான்.

கேளிக்கையாக குடிக்கலாம் , கொண்டாட்டமாக குடிக்கலாம் , என்றெல்லாம் அனுமதி வழங்க நாம் யார் ? குடிப்பவன் ,அவனுடைய ஏதோ ஒரு தேவைக்கோ , எதையோ தாண்டவோ அவன் குடிக்கிறான். நாம் குடிப்பது போலவே எப்படி அடுத்தவனையும் குடிக்கச் சொல்ல முடியும் ?

நாம் அதிக பட்சம் செய்யக்கூடியது என்னவெனில் , டாஸ்மாக்கில் நல்ல தரமான கம்பனிகளின் மதுவகைகளை , நியாயமான விலையில் வழங்க போராடுவதுதான். மிலிட்டரி சரக்கு குடிப்பவன் எவனாவது சின்ன வயதில் செத்து பார்த்து இருக்கிறோமா ? பல ரிட்டையர்ட் ராணுவ வீரர்கள் தினமும் குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் தான்.

உடல் நலனைத் தாண்டி ,கார்ல் மார்க்ஸ் அடுத்த குற்றவுணர்ச்ச்சியை கிளப்புகிறார். அதாவது வீட்டில் உள்ள குடிக்காதவர்களின் பதட்டத்தை நாம் தூண்டுகிறோம். முக்கியமாக மனைவி !

மனைவி ஏன் குடிப்பதில்லை ?ஏனென்றால் பெரும்பாலான கணவர்கள் குடிக்கிறியா என்று மனைவியிடம் கேட்டதே இல்லை. புருஷன் பொண்டாட்டி ஒண்ணா வீட்லயே ஒக்காந்து , நல்ல சரக்கை ஜாலியா குடிச்சிட்டு ஆட்டம் போட வேண்டியதுதானே ?

இதைச் செய்யாமல் , மனைவி பயத்துடன் காத்திருக்கிறாள் என்ற பாவனையான கவலை எதற்கு ?

பழைய காலத்தை விடுங்கள். இப்போதுள்ள இளம் ஜோடிகள் இருவரும் சேர்ந்து ஜாலியாக குடிக்கிறார்கள். இன்னும் கேட்டால், ரொமான்ஸில் மது முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. கணவ்னே குடிக்க வேண்டாம் என்று சும்மா அமர்ந்து இருந்தாலும் , கணவன் “டல்லா ” இருக்கிறான் என்பதை உணர்ந்த மனைவி ,போய் மது வாங்கிட்டு வாடா , நல்ல ஃபுட் ஆர்டர் பண்ணி எஞ்சாய் செய்யலாம் என அவனை கிளப்புகிறாள். அன்றிரவு ஒரு கொண்டாட்டமான இரவாக மாறுகிறது. இந்தக் காலத்தில், எனக்கு குடிக்கணும் போல இருக்கு , போய் சரக்கு வாங்கிட்டு வாடா என்று சொல்லும் ஸ்பேஸ் பெண்ணுக்கு இருக்கிறது. அதைக் கொடுக்காத கணவன் மார்கள்தான் மனைவி காத்திருப்பதை எண்ணி குற்றவுணர்ச்சியுடன் குடிக்க வேண்டும்.

மனம் நமக்கு இறுக்கமாகத்தான் இருக்கும். நம் சமூகம் அப்படி.குடித்தால்தான் மனைவிக்கு சிலர் ஐ லவ் யூ வே சொல்வார்கள். மது மனதை இளக்கி ,நெகிழ்த்தி மனம் விட்டு பேச வைத்து ,தம்பதியருக்குள் உறவை இன்னும் நெருக்கமாக்கும்.

கார் மாட்டிக்கொண்டதைப் பற்றியும் , அது மாட்டிக்கொண்டிருக்காவிட்டால், இன்னொரு பேரபாயம் நிகழ்ந்திருக்கும் என்று சொல்கிறார் கார்ல். இதில் என்ன சிக்கல் என்றால் ,

குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்று சொல்ல வேண்டியதை குடிக்கக் கூடாது என்று சொல்கிறார். வெளிநாடுகளில் குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி உள்ளது. இங்கும் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. கார் பைக் வைத்திருக்கும் நண்பர்களே , ஓலா ஊபர் மூலம் வருவதைப் பார்க்கிறேன். பைக்கை பாரில் விட்டு விட்டு காலையில் வந்து எடுத்துச் செல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள்.நாம் வளர்க்க வேண்டியது இந்த விழிப்புணர்ச்சியைத் தானே !

முன்னெப்போதையும் விட இப்போது எல்லோரும் குடிக்க முண்டியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் , உண்மைதான். அதற்கு சமூக ரீதியான காரணம் என்ன வென்று ஆராய வேண்டும். என்ன பதட்டம் ? என்ன உளவியல் சிக்கல் ? என்ன உறவுச் சிக்கல் ? மொத்த சமூகமே கூட்டாக ஏன் பாதிப்படைகிறது ? சமூகத்தில் விளைந்த என்ன திடீர் மாற்றத்தை இந்தச் சமுதாயத்தால் கையாளத் தெரியாமல் தவித்து குடியை நோக்கி ஓடி , தற்காலிகமாக தப்புத்துக்கொள்ளப் பார்க்கிறது என்று ஒரு அரசுதான் ஆராய வேண்டும். ஆனால் நம் அரசு , மொத்தமாக முடித்து விடுகிறோம் என்று சொல்லி விஷ சாராயத்தை மக்களுக்கு கொள்ளை விலையில் அளித்துக்கொண்டு இருக்கிறது.

பத்தாயிரம் ரூபாய் , பதினைந்தாயிரம் ரூபாய் மாதம் சம்பாதிப்பவன் இந்த சமுதாயத்தில் குடிக்காமல் 100 வயது வாழ்ந்து என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறான்.

கொசுக்கடி , நல்ல தண்ணீர் இல்லை , ஒண்டுக்குடித்தன வீடு , நாள் முழுக்க 14 – 18 மணி நேர வேலை பார்ப்பவன் குடிக்காமல் என்ன சுகம் காணுவான் ? அவனுக்கு இருக்கும் ஒரே லக்ஸூரி ,ஒரே விடுதலை குடி மட்டும்தான்.

குடித்தால் ,ஒரு போலியான மிதப்பு வரும்தான்.நாம் வித்தியாசமானவர்கள் என்ற நினைப்பு வரும் தான். அது கூட வரவில்லை என்றால் , அமைதிப் படையில் சத்யாரஜ் சொல்வது போல , இந்த எழவை என்னத்துக்குதான் குடிச்சிகிட்டு 🙂 அதனால் ஒன்றும் தவறில்லை. போதை தெளிந்ததும் , நிஜமாகவே அதை நோக்கி போகலாம் என்று போக வேண்டியதுதான்.

ஒரு தனிமனிதனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ,அல்லது ஒரு சிறு குழுவுக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்தோ , நம்முடைய வீக்நெஸை வைத்தோ ,மொத்தமாக ஒரு பிரச்சனையை அணுகக் கூடாது.

இவ்வளவு நாள் கொண்டாட்டமாக குடித்து , இப்போது தொடர்ந்து குடிப்பது குற்றவுணர்ச்சியாக இருந்தால் , குடியை நிறுத்தி விட்டேன் என போஸ்ட் போட்டு விட்டு போய் விட வேண்டும் . நாம் எல்லாத்தையும் அனுபவித்து விட்டு ,ஓவராக போகிறது என நிறுத்தப் போகும் சமயத்தில் ,இப்போதுதான் ஒரு பியர் அடிக்க ஆரம்பித்து எஞ்சாய் செய்து கொண்டிருப்பவனையும் பயமுறுத்தி ,குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தினால் எப்படி ?

கார்ல் மார்க்ஸ் இரண்டு மாதமாக சிகரட்டை நிறுத்தி விட்டதாக கட்டுரையில் சொல்கிறார். சிகரட்டை விட்டால் , மனம் விரக்தியாகத்தான் இருக்கும். இதைப்போல குற்றவுணர்ச்சியை தூண்டும் கட்டுரைகளை எழுத வைக்கும் தான்.

ஒருநாள் ஓவராக சரக்கடித்து , மறுநாள் கேராக இருக்கும்போதும் இப்படித்தான் எழுதத் தோன்றும். ஆனால் தலைவலியோடு எழுதும் ஆர்வதத்தை அடக்கிக் கொண்டு இருந்து விட்டால் , மறுநாள் சரியாகி விடும் !

கார்ல் மார்க்ஸின் அந்த நீளமான கட்டுரையை , அஜீத் குமார் அவர்கள் மங்காத்தா படத்தில் ஒருவரி வசனத்தில் சொல்லி இருப்பார்.

“சத்தியமா இனிமே குடிக்கவே கூடாது “