கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…

https://tinyurl.com/y93rebv2

இலக்கியப் பரிச்சயம் இல்லாத சராசரி வாசகர்கள் எடுத்த எடுப்பில் என்னுடைய நாவல்களைப் படித்தால் அரண்டு போவார்கள். அப்படிப்பட்டவர்கள் அணுக வேண்டிய என் புத்தகம் கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங். இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். படிக்க வேண்டும். பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் படிக்க வேண்டும். இதை எல்லோரும் எல்லோருக்கும் பரிசாகவும் அளிக்கலாம். அதிலிருந்து ஒரு பகுதி கீழே:

வ.ரா. பாரதியின் நெருங்கிய நண்பர். அவர் எழுதிய பாரதியின் வரலாற்றில் ஒரு இடம். வ.ரா.வின் வார்த்தைகளிலேயே:

”ரௌலட் சட்டத்தை ரத்து செய்வதற்காக நடந்த கிளர்ச்சியை முன்னிட்டு 1919-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ராஜாஜி வீட்டில் தங்கினார். அப்போது ராஜாஜி சென்னை கதீட்ரல் ரோடு, இரண்டாம் நம்பர் பங்களாவில் வசித்தார்.

ஒருநாள் மதியம் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம் போல் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருக்க மகாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார். சேலம் பாரிஸ்டர் ஆதி நாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியோரும், அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்கள். நான் வாயில் காப்போன். யாரையும் உள்ளே விடக் கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.

அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்.

‘என்ன ஓய்!’ என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். என் காவல் கட்டுக் குலைந்து விட்டது.

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. பாரதியார் சொன்னார்:

’மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’
எழுத்தாளன் தான் சமூகத்தின் ஒளியாக விளங்குபவன். அதனால்தான் தாகூரை மகாத்மா குருதேவ் என்று அழைத்தார். தான் இந்த சமூகத்தின் ஒளியாக விளங்குகிறோம் என்பதை அந்தத் தமிழ்க் கவிஞன் உணர்ந்திருந்ததால்தான் மகாத்மாவின் மெத்தையிலே போய் அமர்ந்து கொண்டு மிஸ்டர் காந்தி என்று அழைத்தான். இதை உணராததால்தான் சத்தியமூர்த்தியும் ராஜாஜியும் அப்போது பாரதியின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறார்கள். ”நாங்களே மகாத்மாவின் முன்னே பணிவுடன் நின்று கொண்டிருக்கும் போது இந்த ஆள் ஏதோ கவிதைகள் எழுதுகிறோம் என்ற ஹோதாவில் மேதாவியைப் போல் மகாத்மாவின் மெத்தையிலேயே அமர்ந்து கொண்டு விட்டாரே?” இதை அவர்கள் வாய் விட்டுச் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் உடல்மொழி சொல்லி விட்டது; அதை மகாத்மாவும் கவனித்து விட்டார் என்பதை அந்தச் சம்பவத்தின் கடைசியில் அவர் சொன்னதிலிருந்து நாம் இப்போதும் புரிந்து கொள்ளலாம்.

நடந்ததை மேலே சொல்கிறார் வ.ரா.
தன்னுடைய காரியதரிசி மகாதேவபாயிடம் அன்றைய தினம் மாலையில் வேறொரு நிகழ்ச்சி இருப்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் மகாத்மா, பாரதியிடம் “தங்கள் கூட்டத்தை நாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?” என்று கேட்கிறார். அதற்கு பாரதி சொன்ன பதில்: “முடியாது; போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.”

கவனியுங்கள், மகாத்மாவை ஆசீர்வதிக்கிறார் பாரதி. தான் முன்பின் அறிந்திராத ஒரு ஆள், வாசலில் காவலுக்கு நின்று கொண்டிருந்தவரையும் மீறிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் அல்லாமல் தன் மெத்தையில் அமர்ந்து கொண்டு தன்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆசீர்வாதமும் செய்கிறார் என்றால் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும் என்பது மகாத்மாவுக்குப் புரிந்து விட்டது. ஆனால் அங்கே நின்று கொண்டிருந்தவர்களோ அவரைப் பற்றித் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பதையும் கவனித்தார். பிறகு அவர்களிடம் யார் இவர் என்று கேட்கிறார். யாருமே பதில் சொல்லாததால் ராஜாஜி, “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்கிறார்.

அப்போதுதான் மகாத்மா தமிழர்களாகிய நம் எல்லோருடைய கன்னத்திலும் அறைகிறாற்போல் “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்று கேட்டார். அதற்கும் அங்கிருந்த யாருமே பதில் சொல்லவில்லை. எல்லோரும் மௌனமாக இருந்தார்கள் என்று முடிக்கிறார் வ.ரா.
மகாத்மா கேட்ட கேள்வி பற்றி நான் இன்னமும் பல இரவுகளில் உறங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பாரதி வாழ்ந்த காலம் 1882 – 1921. மேலே சொன்ன சம்பவம் நடந்தது 1919. அப்போது பாரதியின் வயது 37. இன்னும் இரண்டு ஆண்டுகளே உயிரோடு இருக்கப் போகிறார். மகாத்மாவின் வயது 50.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து வெறும் நான்கு ஆண்டுகளே ஆகியிருந்தன. ஆனால் இதற்கு ஆறு ஆண்டுகள் முன்பே – அதாவது 1913-இலேயே தாகூருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டு விட்டது.

புத்தகத்தைப் பெற: