புத்தக விநியோகம்…

நீங்கள் ஏன் புதிய புத்தகங்களில் கவனம் செலுத்தாமல் பழைய புத்தகங்களையே பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்.  அப்போது அவருக்கு நான் கூறிய பதில் இது:

சமீபத்தில் சென்னை புத்தக விழாவுக்குச் சென்று கொண்டிருந்த போது 3000 ரூ விலையுள்ள ஒரு புத்தகத் தொகுப்பைப் பார்த்து நீண்ட நேரம் யோசித்து விட்டு வாங்காமல் வந்து விட்டேன்.  இது பற்றி முகநூலில் எழுதியிருந்ததைப் பார்த்து என் நெருங்கிய நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார்.  ஒரு aristocrat போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஏன் இப்படி இடையிடையே பஞ்சப்பாட்டும் பாடுகிறீர்கள், மனதுக்கு வருத்தமாக இருந்தது என்றார்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.  100 புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கும் நான் இது போன்ற சில்லறை விஷயங்களுக்கு ஏன் அல்லலுற வேண்டும், கவலைப்பட வேண்டும்?  வருமானம் இல்லாததுதான்.  ஏன் வருமானம் இல்லை? என் புத்தகங்கள் அதிக பட்சம் 1000 பிரதிகளே விற்கின்றன.  இதில்தான் பிரச்சினை.  என் புத்தகங்கள் குறைந்த பட்சம் 5000 பிரதிகள் போகும் – ஒரு வருட காலத்தில் என்பதை இந்தப் புத்தக விழாவில் கண்டு பிடித்து விட்டேன்.  ஆனால் ஒரு நிபந்தனை.  புத்தகங்கள் தஞ்சாவூரில், திருச்சியில், மதுரையில், திருவண்ணாமலையில், கோயம்பத்தூரில், கடலூரில், விழுப்புரத்தில், சேலத்தில், திருப்பூரில் என்று எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ள முக்கியமான புத்தகக் கடைகளில் கிடைக்க வேண்டும்.  என் 40 ஆண்டு எழுத்து வாழ்வில் இது ஒருமுறை கூட நடந்ததில்லை.  புத்தக விழாக்களில் கூட என் புத்தகங்கள் அரிதாகவே கிடைத்தன.  விகடனில் வெளிவந்த ஜனரஞ்சகமான பத்தியான மனம் கொத்திப் பறவை தொகுப்பை விகடன் புத்தகமாக வெளியிட்டது.  எவ்வளவு பிரதிகள் தெரியுமா?  மூன்று ஆண்டுகளில் 3000.  உயிர்மையிலும் இதே எண்ணிக்கைதான்.  இதை மனுஷ்ய புத்திரன் நான் உயிர்மையிலிருந்து பிரியும் போதே சொன்னார்.  விகடனில் மனம் கொத்திப் பறவை குறைந்த பட்சம் 20000 பிரதிகள் விற்றிருக்க வேண்டுமே?  ஏன் விற்கவில்லை?  விநியோகம் இல்லை.  விகடனுக்கே இந்த நிலை.  மனம் கொத்திப் பறவை தொடர் நின்று, அது புத்தகமாக வெளிவந்திருந்த நேரம்.  கோவை புத்தக விழாவில் பல வாசகர்கள் அது புத்தகமாக வந்திருக்கிறதா என்று கேட்டார்கள்.  விகடன் அரங்கில் கிடைக்குமே என்றேன்.  ம்ஹும்.  பிரதிகள் இல்லை.  40 ஆண்டுகளாக என் நிலைமை இதுதான்.  இப்படி இருந்தால் ஏன் பஞ்சப்பாட்டு பாட மாட்டேன்?

எல்லா ஊர்களிலும் புத்தகங்கள் கிடைத்தால் நான் பணம் பற்றியே யோசிக்க மாட்டேன்.  ஒன்றா இரண்டா, நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  இந்தப் புத்தகங்கள் அனைத்தும் எல்லா ஊர்களிலும் கிடைத்தால் இனி எப்போதும் பஞ்சப்பாட்டு பாட வேண்டியிருக்காது.  என் புத்தகங்கள் மட்டும் அல்ல; தங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் எல்லா நூல்களுமே எல்லா ஊர்களிலும் கிடைக்க முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ராம்ஜி.  இன்னும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களில் என் புத்தகங்கள் கிடைக்கும்.  என்னதான் அமேஸான் மூலமாகவும், ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் வாங்கலாம் என்றாலும் நம் ஊரில் உள்ள கடையில் கிடைத்தால் வாங்குவோம் என்ற மனநிலையிலிருந்து மக்கள் மாறவில்லை.  அதுவரை எல்லா ஊர்களிலும் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வதே எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் நல்லது.