மாபெரும் நாடகம்

Peter Paul Rubens

Peter Paul Rubens

நானொரு மாபெரும் நாடகத்தை

நடத்தத் திட்டமிட்டேன்

நடிகர்களை உருவாக்கினேன்

கலை இயக்குனரை அழைத்து

செட் பற்றி விளக்கினேன்

எல்லாம் நிஜத்தைப் போலவே

இருக்க வேண்டும் என்றேன்

மரம் செடி கொடி நிலா நட்சத்திரம்

கோட்டை கொத்தளம் குளம் கடல் மீன் பறவை

யானை குதிரை கழுதை

புழு பூச்சி

ஏரி காடு எரிமலை பாலை

பாறை மண் கல் வயல்

நதி நீர்வீழ்ச்சி

காற்று புயல் மழை அக்கினி

போலீஸ் ஸ்டேஷன் பாராளுமன்றம் பள்ளிக்கூடம்

வழிபாட்டுத்தலம் சிறைச்சாலை சித்ரவதைக் கூடம்

மருத்துவமனை

எல்லாம் எல்லாம் உருவாக்கப்பட்டன

நிஜத்தைப் போலவே

நடிகர்களை அழைத்து

பாத்திரங்களைப் பிரித்துக் கொடுத்தேன்

நல்லவன் கெட்டவன் அரசியல்வாதி திருடன்

கொள்ளைக்காரன் கொலைகாரன் ஆன்மீகவாதி ஞானி கடவுள் தீர்க்கதரிசி

எழுத்தாளன் பணியாள் மந்திரி தொழிலாளி அடிமை

தீண்டத்தகாதவன் நோயாளி பைத்தியம் கற்புக்கரசி

வேசி துரோகி வன்கலவி செய்பவன் தியாகி

மகாத்மா கவிஞன் கோமாளி பூசாரி சோதிடன்

கூனன் முடவன் குருடன்

***

நாடகம் தொடங்கியது

நவீன நாடகம் என்பதால் பார்வையாளர்களும்

பங்கேற்பாளர்களே என்பதை சொல்லத் தேவையில்லை

நன்றாகவே இருந்தது நாடகம்

போர்க்காட்சிகளெல்லாம் தத்ரூபம்

குண்டுவெடிப்புகளில் நகரங்கள் அழிந்தன

மனிதர்கள் பதுங்கு குழிகளில் நாட்கணக்கில்

பதுங்கிக் கிடந்தார்கள்

விஷவாயுக் கூடங்களில் மனிதக் கூட்டம்

எறும்புச் சாரிகளைப் போல்

சென்று கொண்டிருந்தது

குண்டுவெடிப்பில் ஒரு சிறுமி

உடம்பெல்லாம் தீப்பற்றியெரிய

ஓடி வந்ததைப் பார்த்தபோது எனக்கே

பதற்றம் தொற்றிக் கொண்டது பிறகுதான்

நாடகம் நாடகம் என்று சமாதானம் செய்துகொண்டேன்

பள்ளிக்கூட மாணவிகளோடு பஸ்கள் எரிந்தன

சிறார் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த வெடிகுண்டு மனிதன்

தன் உடலை வெடிக்கச் செய்தான்

நாலாபக்கமும் வெடித்துச் சிதறிய உடல்களிலிருந்து

என் முகத்தில் தெறித்து விழுந்த

சின்னஞ்சிறிய சுண்டு விரலைப் பார்த்தபோதும்

நாடகம் நாடகம் என முனகிக் கொண்டேன்

பூங்காக்களில் காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்

அரசியல்வாதிகள் போர் முழக்கம் செய்து கொண்டிருந்தார்கள்

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது

கடவுளை வணங்குபவர்கள் அனைவரும்

தங்கள் கடவுளே உசந்த கடவுள் என்று சொல்லி

அடுத்த மனிதனைக் கொன்று கொண்டிருந்தார்கள்

நான் உருவாக்கிக் கொடுத்த நாடகத்தை மறந்து போன நடிகர்கள்

தாங்கள் நடிகர்கள் என்பதையும் மறந்து நாடகத்தில் ஒன்றினார்கள்

எங்கு பார்த்தாலும் அமளிதுமளி ரத்தக்களரி

நலிந்த உடல்கொண்ட ஒருவன் ஓடிவந்து என்னிடம்

காப்பாற்று காப்பாற்று என்னைக் கொல்ல வருகிறார்கள்

என்று கதறினான்

நான் இருக்கிறேன் பயப்படாதே உன் பாத்திரத்தின் பெயரென்ன

என்று கேட்டேன்

இயேசு கிறிஸ்து என்றான்

அப்படியானால் கவலையில்லை உன்னைக் கொன்றாலும் நீ உயிர்த்தெழுவாய்

என்றேன்

அதற்குள் சேவகர்கள் ஓடி வந்து அவனைத் தூக்கிக் கொண்டு போனார்கள்

ஏன் என்னைக் கை விட்டாய் என்ற அவன் குரல் தூரத்திலிருந்து கேட்டது

அப்போது என்னருகே வந்த ஒரு மீசைக்காரன்

கடவுள் செத்து விட்டார் என்றான்

சலித்துப் போன நான் மேடையின் குறுக்கே போய் நின்று கொண்டு

நடிகர்களே இது நாடகம் என்பதை மறந்து போனீர்களா

என உரக்கக் கூச்சலிட்டேன்

ஒதுங்கிப் போ என்றது நடிகர் கூட்டம்

நான்தான் உங்களை இயக்குபவன்

நாடகம் என் கை மீறிப் போய் விட்டது

அதனால் நாடகத்தை நிறுத்துகிறேன்

என்று அறிவித்தேன்

உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தோம்

என்று சொல்லி

என்னைக் கொன்று போட்டுவிட்டு

எழுத்தாளன் செத்து விட்டான்

என்று அறிவித்தது

நடிகர் கூட்டம்

***

இனி சாருஆன்லைன் இணைய தளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006