ஹௌல் மற்றும் சில கவிதைகள்…

தமிழில் நவீன கவிதைக்கு ஒரு மிகச் சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது.  பாரதியின் வசன கவிதைகளிருந்தே துவங்கலாம்.  பிறகு ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, ஞானக்கூத்தன் என்று தொடங்கி தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், சுகுமாரன் என்று தொடர்ந்து இன்றைய சங்கர ராமசுப்ரமணியன் வரை வந்திருக்கிறது.  ஒரு தூரத்து வாசகனாக இந்தப் பின்னணியும் நெருங்கிய வாசகனாக Rainer Maria Rilke, Stéphane Mallarmé, ஆர்த்தர் ரேம்போ போன்ற ஐரோப்பியக் கவிகளின் பின்னணியும் கொண்டே என் கவிதைகளை எழுதி வருகிறேன்.  இந்தக் கவிகளின் கூட்டத்தில் எப்போதும் என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் ஆலன் கின்ஸ்பர்க்.  Beat Generation எழுத்தாளர்கள் மூவர்.  ஆலன் கின்ஸ்பர்க், ஜாக் கெரோவாக், வில்லியம் பர்ரோஸ்.  என் படைப்பு உலகத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இந்த மூவருமே ஆவர்.  வில்லியம் பர்ரோஸ் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன்.  ஒரு கல்லூரியில் பேச அழைக்கப்பட்ட போது பர்ரோஸைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம்.  அவர்களின் அதிர்ச்சியைப் பார்த்து ஆச்சரியமடைந்த பர்ரோஸ் ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்க, நீங்கள் நிர்வாணமாகவோ அல்லது குறைந்த ஆடையுடனோ வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம் என்றார்கள் மாணவர்கள்.  அவர்கள் முன்னே பர்ரோஸ் கோட் சூட் டை சகிதமாக ஒரு பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ் போல் நின்று கொண்டிருந்தார்.  அந்த மாணவர்கள் அப்படிக் கேட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன.  ஆலன் கின்ஸ்பர்க் தன் கவிதைத் தொகுதியின் அட்டையில் தன்னுடைய நிர்வாணமான புகைப்படத்தைப் போட்டிருந்தார்.

மேற்கூறிய மூன்று பேரின் தத்துவப் பார்வையும் ஒன்றாகவே இருந்தாலும் மூவரும் மூன்று திசைகளை நோக்கிக் கிளம்பினார்கள்.  பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க வாழ்க்கையை அவர்கள் வெறுத்தார்கள்.  நம்முடைய சித்தர்களோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  பர்ரோஸ் அரபி மொழி கற்றுக் கொண்டு மொராக்கோ போனார்.  ஜாக் கெரோவாக் திபெத் சென்றார்.  கின்ஸ்பர்க் காவித் துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு இந்திய சந்நியாசிகளோடு கஞ்சா புகைத்தபடி அலைந்தார்.  பிறகு கடைசியில் கல்கத்தா வந்து சேர்ந்தார்.

காலையில் ஒரு நண்பரோடு ஆலன் கின்ஸ்பர்கின் ஹௌல் கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.  அந்தக் கவிதை புரியவில்லையே என்றார் நண்பர்.  1955-ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் இந்தக் கவிதை முதல்முதலாக வாசிக்கப்பட்ட போது இது பற்றி ஒரு கடும் சர்ச்சை எழுந்தது.  இந்தக் கவிதைதான் ஜாக் கெரோவாக்கையும், வில்லியம் பர்ரோஸையும் அமெரிக்கர்களின் லௌகீக வாழ்க்கையைப் புறக்கணிக்கத் தூண்டியது.  பர்ரோஸ் ட்ரக் அடிக்ட் ஆனார்.  ஏன் ஆனார்?  சமூகமே போர் போர் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.  ஆனால் பர்ரோஸ் என்ற கலைஞனோ தன் உடம்பில் போதை ஊசியைக் குத்திக் கொண்டிருந்தான்.  வியட்நாமில் அமெரிக்கா போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிராகவே என் உடம்பில் இந்த போதை ஊசியைக் குத்திக் கொண்டிருக்கிறேன் என்றான் அவன்.  பர்ரோஸின் Naked Lunch என்ற நாவல் அது பற்றியதுதான்.

1956-இல் ஹௌல் புத்தகமாக வந்த போது அதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  கலிஃபோர்னியாவில் 1957-ஆம் ஆண்டு வழக்கு நடந்தது.  ஒன்பது இலக்கியவாதிகள் அந்த நூலைப் படித்து அதில் தடை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால் தடை செய்யும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஹௌல் பற்றி ஏராளமான விளக்கங்களும் விரிவுரைகளும் இணையதளங்களில் கிடைக்கின்றன.  படித்துப் பாருங்கள்.  I saw the best minds of my generation destroyed by madness, starving hysterical naked, dragging themselves through the negro streets at dawn looking for an angry fix… ஹௌல் கவிதையின் முதல் வரி இது.  சமரசம் செய்து கொள்ளுங்கள், சமரசம் செய்து கொள்ளுங்கள், யாரையும் விமர்சிக்காதீர்கள், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு புத்திமதிகள் கிடைக்கும் போதெல்லாம் இந்த முதல் வரிதான் ஞாபகம் வருகிறது.  தொடர்ந்து அணுவைப் பிளந்து அணுகுண்டு தயாரிக்கும் விஞ்ஞானிகள் பற்றியும் பேசுகிறார் கின்ஸ்பர்க்.  இயக்குனர் ஷங்கரை லியனார்டோ டாவின்ஸி என்று என் சக எழுத்தாளர்கள் புகழும் போதும் எனக்கு ஹௌல்தான் ஞாபகம் வருகிறது.  இப்படி இந்தக் கவிதை பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.  பின்வரும் இணைப்பில் நீங்கள் ஹௌல் கவிதையைப் படிக்கலாம்.

https://www.poetryfoundation.org/poems/49303/howl

நான் சமீபத்தில் எழுதிய சில கவிதைகள்

புத்தன்

உணவை யாசித்துக் கொண்டிருந்த

என்னை

உழைக்கச் சொன்ன

உழவனிடம் சொன்னேன்

நான் தவத்தை உழுது

ஞானத்தை அறுவடை

செய்கிறேன் என

***

அதிசயம்

நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு

சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து நடந்து சென்றேன்

பூங்காவிலிருந்து நண்பரின் வாகனத்தில் வீடு வந்தேன்

சாப்பிட்டேன்

நாய்க்கும் பூனைகளுக்கும் உணவிட்டேன்

இன்று முழுவதும் செய்ய வேண்டிய வேலை

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது

தட்டச்சு செய்யப்பட்டு வந்த நாவலைப்

பிழை திருத்தம் செய்ய வேண்டும்

வாழ்க்கை நம்ப முடியாத அதிசயங்களால்

நிறைந்திருக்கிறது

18.2.2019.

9.54 a.m.

 

இரவு பத்து மணி அளவில்

நாளை காலை உனக்குப் பட்டாபிஷேகம்

என்று அவனிடம் சொல்லப்பட்டது

புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டான்

அதிகாலை நான்கு மணிக்கு அவனை அழைத்து

பதினான்கு ஆண்டுகள் நீ

வனவாசம் செய்ய வேண்டும் என்றான் தகப்பன்

அதையும் அவன் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டான்

9.34 a.m.

18.2.2019.

 

நான் ஒரு கனவு

கண்டேன்

கனவிலேயே காதலித்தேன்

மணம் புரிந்தேன்

குழந்தை பெற்றேன்

விவாகரத்து செய்தேன்

மீண்டும் காதலித்தேன்

மீண்டும் குழந்தை பெற்றேன்

முதுமை வந்தது

முதுமை முடிந்து

மரணமும் வந்தது

கனவிலிருந்து திரும்பாமலேயே

இறந்து போனோமே

என்ற வருத்தத்துடன்

இவ்வுலக வாழ்வை நீத்தேன்.

***

இனி சாருஆன்லைன் இணைய தளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006