பொள்ளாச்சி சம்பவங்கள் : சீரழிவின் அடையாளம்

ஷார்ஜாவில் வசிக்கும் பாலாஜி தன் முகநூல் குறிப்பில் இதை எழுதியிருக்கிறார்:

”சாரு இங்கே ஷார்ஜாவில் என் வீட்டிற்கு வந்திருக்கும்போது என் மகள்களை இரு வருடம் கழித்து இந்தியா சென்று படிக்க வைக்க இருக்கிறேன் என்று சொன்னேன்.. அவர் உடனே பதறி…ஏன் இங்கேயே இருக்கட்டும்..இந்தியா எல்லாம் வேணாம்னு சொன்னார்..

நான் உடனே, ஏன்ப்பா அப்படி சொல்றிங்க..என்ன இருந்தாலும் ஒரு நாள் இந்தியா வந்துதானே ஆகனும்னு சொன்னேன்..

அதற்கு நீங்க வேணும்னா வாங்க. பொண்ணுங்க இங்கேயே படிச்சு, இங்கேயே இருக்கட்டும்..இல்லைன்னா வேற எங்க போறாங்களோ, அங்கேயே போகட்டும், இந்தியா வேணாம்னு தீர்மானமா சொன்னார்..

இப்ப நடக்குற சம்பவம்லாம் பார்த்தா, அவர் சொன்னதுதான் சரின்னு தோணுது…உங்களை எல்லாம் நம்பி எந்த நம்பிக்கையிலடா புள்ளைங்களை ஸ்கூல், காலேஜுக்கு அனுப்பறது.. ச்சை…”

பாலாஜிக்கு மட்டும் அல்ல; வெளிநாடுகளில் வசிக்கும் என் அத்தனை நண்பர்களுக்குமே நான் சொல்லும் அறிவுரை இதுதான்:  உங்கள் குழந்தை குட்டிகளை இந்தியாவுக்கு அழைத்து வராதீர்கள்.  இந்தியாவிலேயே அவர்களைப் படிக்க வைக்கவோ வாழ வைக்கவோ ஆசைப்படாதீர்கள்.  இந்தியா பாரம்பரியம் மிக்க நாடு.  திருக்குறளையும் பாசுரங்களையும் வேதங்களையும் காளிதாஸன் போன்ற கவிகளையும் தந்த நாடு.  இன்றும் ஆயிரக் கணக்கான ஞானிகளும் துறவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு.  உலகின் ஆதி மொழிகளும் ஆதிகுடிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு.  பல்வேறுபட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடு.  ஆனால் இன்றைய இந்தியாவில் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை.  தனியாக பஸ்ஸில் போக முடியாது.  ரயிலில் போக முடியாது.  இரவில் எங்கேயும் போக முடியாது.  கும்பலாகச் சேர்ந்து வன்கலவி செய்து விடுவார்கள்.  தனியாகப் போவதை விடுங்கள்.  பெண் குழந்தைகள் தங்கள் வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது.  சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு gated community என்று சொல்லப்படும் குடியிருப்பில் ஒரு இளம் பெண்ணை அந்தக் குடியிருப்பின் பாதுகாவலர்கள் ஏழெட்டு பேர் சேர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகளாக வன்கலவி செய்து துன்புறுத்தி வந்ததை நாம் சென்ற ஆண்டு படித்தோம்.  இதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும் ஒன்றிரண்டு விஷயங்கள்.  வெளிச்சத்துக்கே வராமல் ஓராயிரம் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.  நாலைந்து பையன்கள் சேர்ந்து ஒரு பெண்ணைப் பார்த்தாலே உய் உய் என்று கூட்டமாகக் கத்துகிறான்கள் என்றால் இது என்ன மாதிரியான நாடு என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  நூற்றுக்கு ஒருத்தன் கத்துவதில்லை.  அவன் நம் வீட்டுப் பையன் என்று நினைத்து நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.

சென்ற ஆண்டு என்ன நடந்தது? ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆறு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து பெட்ரோல் ஊற்றிக் கொன்றான் ஒரு இளைஞன்.  அவனைப் பார்த்தால் பால் மணம் மாறாத பச்சிளம் பாலகன் மாதிரி இருக்கிறான்.  ஜெயிலுக்குப் போனான்.  ஒருசில மாதங்களில் பணத்தை ஏகமாகச் செலவழித்து அவனை ஜாமீனில் வெளியே எடுத்தார் அவன் தந்தை. வெளியே வந்தவன் அம்மாவிடம் பணம் கேட்டு நச்சரித்து அவர் தராததால் அவரையும் கொன்று போட்டான்.  இரண்டு கொலைகள்.

பிள்ளைகளை வளர்க்கின்ற பெற்றோரையும் சொல்ல வேண்டும்.  பையன்களை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்கள்.  கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்க்கிறார்கள்.  சைக்கிளில் கூடப் போனதில்லை.  நெற்றி வியர்வை சிந்தியதில்லை.  மகனின் முதலிரவுக்குக் கூட காண்டம் வாங்கி வரச் செல்வதற்கு அப்பனும் ஆத்தாளும் தயாராக இருக்கிறார்கள்.  குழந்தை கஷ்டப்படவே கூடாது.  கஷ்டப்பட்டு வளராத குழந்தை இந்தப் பொள்ளாச்சி கிரிமினல்களைப்  போல்தான் இருக்கும். இவ்வளவு தூரம் போகாவிட்டாலும் தன்னிடம் மாட்டும் பெண்களை சித்ரவதை செய்யத் துணியாத இளைஞர்கள் இன்றைய தினம் மிகவும் கம்மி. காரணம், அவர்கள் வளரும் போதே அதற்கான பயிற்சியை அவனுக்கு அவன் அப்பனும் ஆத்தாளும் தந்து விடுகிறார்கள்.  அன்பு அன்பு என்று சொல்லி ஊட்டி வளர்த்து கடைசியில் பெண்களை வேலைக்காரிகளாக நடத்தும் காட்டுமிராண்டிகளையே சமூகத்தில் உலவ விடுகிறார்கள் பெற்றோர்கள்.  இல்லாவிட்டால் திருமணமான பெண்கள் எல்லோரும் ஏன் ஒரே குரலாக தங்கள் கணவர்களைப் பற்றி ஒரே கதையைச் சொல்கிறார்கள்.  என்னை வேலைக்காரி மாதிரி நடத்துகிறான்.  கேட்டால் வீட்டை வெளியே போ என்கிறான். அடிக்கிறான்.  உதைக்கிறான்.  அவமானப்படுத்துகிறான்.  செக்ஸ் கேட்டால் தேவடியாளா நீ என்கிறான்.

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.  என் நண்பர் ஒருவர் டாக்டர்.    அவரோடு படித்த ஐந்து ஜோடிகளுக்கு மணம் ஆனது.  ஐந்து ஜோடியும் ஒன்றாகப் படித்த ஜோடி.  காதல் திருமணம் என்று சொல்லத் தேவையில்லை.  ஐந்து ஜோடியும் திருமணம் ஆன ரெண்டே வருஷத்தில் விவாகரத்து.  என் நண்பர் அவர்களோடு கூடப் படித்தவர் என்பதால் உள்விவகாரம் தெரிந்து விட்டது.  அந்த ஐந்து பெண்களுமே இவரிடம் சொன்ன விபரம் Marquis de Sade கதைகளில் வரும் விவகாரம்.  சிகரெட்டால் சுட்டார்கள்.  எங்கே?  மார்பகங்களில்.  அடித்தார்கள்.  நிர்வாணமாக வீட்டில் நாயைப் போல் தவழச் செய்து அந்தப் பெண்களின் புட்டங்களில் பெல்ட்டால் அடித்திருக்கிறார்கள் சிலர்.  அப்போதுதான் அவர்கள் “எழுச்சி” பெறுகிறார்களாம்.  இதெல்லாம் ஒருசிலரின் aberration என்று எப்படி விடுவது?  என் டாக்டர் நண்பரின் நண்பர்களான ஐந்து ஜோடியுமே இப்படிப் பிரிந்திருக்கிறது.

மேற்கண்டதெல்லாம் aberration என்று விட்டுவிட்டு நல்லவர்களின் கதையைப் பார்த்தால் – அது இத்தனை தீவிரமாக இல்லாவிட்டாலும் தன் மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டும் விதத்தில்தான் நடந்து கொள்கிறார்கள் பல கணவன்மார்கள்.  வெகு நுணுக்கமான, கண்ணுக்குப் புலனாகாத அவமானங்கள், அடிமைத்தனங்கள், ஆணாதிக்கச் சீண்டல்கள்… எதையென்று சொல்வது?  15 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறேன்.  நியூஜெர்ஸியிலிருந்து ஒரு வாசகி – தமிழ்ப் பெண் – கண்ணீர் விட்டு எழுதியிருந்தார்.  அமெரிக்கா வந்த தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் மனைவியை கைக்குழந்தையோடு வெளியே துரத்திய ஒரு கணவனைப் பற்றி.  அவருடைய பாஸ்போர்ட் கூட அவர் வசம் இல்லை.  கையில் பரம் பைசா இல்லை.  ஐஐடியில் கோல்ட் மெடல் வாங்கிய பெண்.  எப்படியோ தன் தோழி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து எப்படியோ பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்து எனக்கு எழுதியிருந்தார்.

விடியோவில் என்னை அடிக்காதே – அடிக்காதே – பெல்ட்டால் அடிக்காதே – உன்னை நம்பித்தானே வந்தேன் – இப்போது இப்படி அடிக்கிறாயே என்று கதறும் பெண்ணின் குரலைக் கேட்டு பலரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.  உணர்ச்சிவசப்படுவது எளிது.  இந்தியா முழுவதுமே பெண்கள் எங்குமே தனியாகச் செல்ல முடியவில்லை என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.  பெல்ட்டால் அடிக்காதே, நானே கழற்றி விடுகிறேன் என்று கதறும் பெண்ணிடம் எப்படி ஒருவனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடிகிறது என்று கேட்கிறார் என் நண்பர் சாம்.  அட தடியா, இந்தியாவின் எதார்த்தமே தெரியவில்லையே உனக்கு?  உடம்பு சரியில்லாத, எழுந்தே நடமாட முடியாத நிலையில் இருக்கும் தன் அம்மாவைத் திட்டி என் துணியைத் துவைத்துக் கொடு, என்னைக் கொண்டு போய் கல்லூரியில் விடு, எனக்கு சமைத்துப் போடு என்று அதிகாரம் பண்ணுகின்ற எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?  இதெல்லாம் பாலியல் வன்கொடுமை அல்ல; தாய்ப்பாசம்!!! இதையெல்லாம் அவன் தன் தகப்பனிடமிருந்து கற்றுக் கொள்கிறான்.  தலைவலியில் துடித்துக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம் ”ஏய், எப்பப் பார்த்தாலும் தலைவலி?  எங்கம்மா ஒருநாள் கூட தலைவலின்னு சொன்னதில்லை தெரியுமா, காலை அமுக்கி விடுடி” என்று சொல்கிறான் கணவன்.  இப்படி இருக்கிறது இந்திய எதார்த்தம்.  ஒட்டு மொத்தத்தில் இந்திய ஆண்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள்.  காட்டுமிராண்டிகள்.  சைக்கோக்கள்.

சமீபத்தில் ஒரு உபநயன வைபவத்துக்குச் சென்றிருந்தேன்.  வழக்கம்போல் ஒருமணி நேரம் முன்னதாகப் போய் விட்டேன்.  அப்போது ஒரு முதியவர் (65 வயது இருக்கும்) என் பக்கத்தில் அமர்ந்து அரை மணி நேரம் போட்டார் பாருங்கள் ஒரு பிளேடு.  எழுத்தில் எழுத முடியாது அந்த அனுபவத்தை.  Assholes.  அப்படியே மனநோய் இல்லத்திலிருந்து சுவரேறிக் குதித்து வந்தவர்களைப் போலவே இருக்கிறான்கள்.  இத்தனைக்கும் அவர் ஓய்வு பெற்ற ஆசிரியராம்.  என்னை யார் என்றே தெரியாது.  ஒரு புத்தகம் படித்ததில்லை.  உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன் என்று ஆரம்பித்து வன்கலவி செய்து விட்டான் பாவி. இப்படிப்பட்டவர்களெல்லாம் ஒரு பெண்ணை எப்படி பாவிப்பான்?

ஒட்டு மொத்தத்தில் இலக்கியமோ நல்ல சினிமாவோ தெரியாத கலாச்சாரமற்ற ஒரு philistine சமுதாயம் இப்படித்தான் சீரழியும்… பொள்ளாச்சி மேலும் ஒரு உதாரணம்.

***