நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழத்தல்

இந்தியாவில் – அதிலும் மிகக் குறிப்பாக தமிழகத்தில் – நிறுவனங்கள் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.  இந்தியாவில் லஞ்சம் என்பது நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட விஷயம். லஞ்சம் இல்லாத இடமே இல்லை.  ஆனால் லஞ்சத்தையே கட்டணம் மாதிரி வசூலிக்கும் போது அதை சீரழிவின் உச்சக்கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே எழுதியதுதான்.  சென்னை மெரீனா கடற்கரைக்கு எதிரே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலிலேயே சீருடை அணிந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரி அந்த கடற்கரைச் சாலையில் போகும் டாக்ஸிகளை நிறுத்தி பேப்பர் இருக்கிறதா இல்லையா என்றே சோதித்துப் பார்க்காமல், “அவர்ட்ட எர்நூர்ரூவா குடுத்துட்டுப் போ” என்று சொல்கிறார்.  நான் போன டாக்ஸி ட்ரைவரும் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் இருநூறு ரூபாயை அந்த அதிகாரிக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபளிடம் கொடுத்து விட்டு வண்டியை எடுக்கிறார்.  உங்களிடம் எல்லா பேப்பரும் இருக்கிறதா என்று கேட்டேன்.  பக்காவாக இருக்கிறது என்றார்.  அப்படியானால் சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டேன்.  ”அவர் பரிசோதனை செய்தால் சொல்லலாம்; அவர் வசூல் அல்லவா செய்கிறார்? மேலும், போலீஸ்காரர்களிடம் போய் மோத முடியுமா சார்?” என்றார் டிரைவர்.  அவர் ஒரு சாதாரண டாக்ஸி டிரைவர்.  அரசியல்வாதியாகவோ, ஏன், அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவராகவோ இருந்தால் போலீஸிடம் வாக்குவாதம் செய்யலாம்.  இவர் செய்தால் கஞ்சா கேஸில் உள்ளே தள்ளி விடுவார்கள்.

இப்போது பொள்ளாச்சி பாலியல் வன்முறையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் ஐபிஎஸ் யார் என்று பார்த்தால் 2017-ல் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி போராட்டம் செய்த ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தவர்.  அப்போது அவர்  திருப்பூர் ஏடிஎஸ்பியாக இருந்தார்.  டாஸ்மாக் வேண்டாம் என்று போராடிய பெண்ணை ரோட்டில் வைத்து அறைந்ததால் பதவி உயர்வு கிடைத்து இப்போது கோவை எஸ்பியாக இருக்கிறார்.   இவர்தான் பொள்ளாச்சியின் பாலியல் வன்கொடுமைகளை விசாரித்து வருகிறார்.  விசாரணையின் முதல் கட்டம் என்ன தெரியுமா?  பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களில் ஒரே ஒரு பெண்ணின் அண்ணன் போலீஸில் ஆதாரத்தோடு புகார் கொடுத்தார்.  உடனே அந்தப் பெண்ணின் பெயர் முகவரி எல்லாம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களே! சிந்தித்துப் பாருங்கள்.  உலகத்தின் ஒரு மூலையிலாவது இப்படிப்பட்ட அக்கிரமம் அநியாயம் நடக்குமா?  ஒரு பெண்ணை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டுகிறது ஒரு கும்பல்.  அவர்கள் மீது புகார் கொடுக்கிறார் பெண்.  உடனே அந்தப் பெண்ணின் பெயர், புகைப்படம், முகவரி எல்லாம் பொதுமக்கள் முன்னே போலீஸால் வைக்கப்படுகிறது.  இது அந்தப் பாலியல் கிரிமினல்கள் செய்த குற்றத்தை விட பெரும் குற்றம் அல்லவா?  புகார் கொடுத்தவர்கள் பற்றிய விபரம் வெளியே தெரிவிக்கப்படக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையே மீறுகிறதே போலீஸ்?  இதன் செய்தி என்னவாக இருக்கும்?  இனிமேல் புகார் கொடுக்கும் பெண்களைத் தடுக்கும் செயல்தானே?  அதோடு நிற்கவில்லை. புகார் கொடுத்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன்.  அவரைத் தாக்கினார்கள் நான்கு பேர்.  அந்த நான்கு பேருக்கும் மூன்று தினங்களில் ஜாமீன் கிடைத்தது.

அரசு நிறுவனங்கள் இந்தியாவில் எந்த அளவுக்கு இயங்குகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.  குற்றவாளி பற்றிப் போலீஸில் புகார் செய்தால் போலீஸும் சேர்ந்து உங்களைத் தாக்கும்.  இப்போது புரிகிறதா, போலீஸ், நீதிமன்றம் என்றால் மக்கள் ஏன் காத தூரம் ஓடுகிறார்கள் என்று?

பொள்ளாச்சி சம்பவங்களைப் பார்த்து பதைபதைக்கும் பலரையும் கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன்.  சமூகமே புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.  இதில் உங்களுக்கு எங்கிருந்து இந்தப் பதற்றமெல்லாம் வருகிறது?  மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் நம் முன்னோர்.  ஆசிரியருக்கு தெய்வத்தை விடவும் பெரிய இடம் கொடுத்தார்கள்.  அப்படிப்பட்ட இடத்தில் உள்ள ஒரு பேராசிரியை தன் மாணவிகளை விபச்சாரம் செய்யச் சொல்லி மிரட்டுகிறார்; கட்டாயப்படுத்துகிறார்.  இதையும் நாம் பார்த்தோம்.  கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இப்போது நீங்கள் பொள்ளாச்சியில் பார்க்கும் பயங்கரங்களை விட அதிபயங்கரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  பிஹெச்டி செய்தால்தான் பேராசிரியர் வேலை சுலபமாகக் கிடைக்கும்.  அந்த பிஹெச்டி ஆய்வுக்கு ஒரு சீனியரின் தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும்.  பெரும்பான்மை ஆண் சீனியர்கள் தங்கள் ஆய்வு மாணவிகளை செக்ஸுக்கு அழைக்கிறார்கள். எத்தனையோ பேரிடம் பேசி விட்டேன்.  இதுதான் நிலவரம்.  ஆண்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று பெண் ஆசிரியர்களிடம் போனால் ஆண்களே தேவலாம் என்று ஆக்கி விடுகிறார்களாம்.  தப்பாக நினைக்காதீர்கள்.  வேலைக்காரியாகவும் கொத்தடிமையாகவும் நடத்துகிறார்களாம்.

இப்படியாக கல்வித் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை, போலீஸ் என்று தமிழகத்தில் எல்லா நிறுவங்களுமே தங்கள் மதிப்பை இழந்து விட்டன.  எப்போதாவது அத்திப் பூத்தாற்போல் குன்ஹாவைப் போன்ற ஒரு நீதிபதி தோன்றுகிறார்.  அவ்வளவுதான்.

பொள்ளாச்சி சம்பவங்களைப் பதற்றத்துடன் கவனிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.  குற்றவாளிகள் சைக்கோ, நாம் நார்மல் என்று இரண்டாகப் பிரிக்கிறோம் இல்லையா, அங்கேதான் பிரச்சினை.  பெண் என்று வந்தால் தொண்ணூறு சதவிகித ஆண்கள் பெண்களை தன் இரை என்றுதான் பார்க்கிறார்கள்.  நான் செக்ஸை வைத்து மட்டும் சொல்லவில்லை. ஒரு மகன் தன் அம்மாவை வேலைக்காரியாகத்தான் நடத்துகிறான்.  அதை அந்தத் தாயும் மகனும் பாசம் என்று அழைக்கிறார்கள்.  இந்த இடம்தான் சமூகத்தில் பெண்கள் ஆண்களின் இரையாகப் பார்க்கப்படுவதற்கான துவக்கப்புள்ளி.  அம்மாவும் சகோதரிகளும் வேலைக்காரிகள்; மற்ற பெண்கள் போகப் பொருள்.  இந்த மனோபாவத்தை சீராட்டிச் சீராட்டி வளர்ப்பது அப்பனும் அம்மையும்தான்.

இன்று நாகேஸ்வரராவ் பூங்காவில் எல்லோரும் இதையே பேசினார்கள்.  இந்தப் பெண்களுக்கும் புத்தியே இல்லை.  எவன் அழைத்தாலும் காதல் என்று நம்பி ஓடி வந்து விடுகிறார்கள்.  வாட்ஸப், முகநூல் எல்லாமே இதற்குத்தான் பயன்படுகின்றன.  முகம் தெரியாத, யார் என்றே தெரியாத, முன்பின் அறியாத ஒருவன் ஐந்தே நிமிடத்தில் தன்னை செல்லக்குட்டி என்று அழைப்பதை ரசிக்கின்ற மனோநிலையில் இருக்கிறார்கள் பெண்கள். டிக்டாக் என்று ஒரு பயங்கரம்.  கிராமத்துப் பெண்கள், ஊர்ப் பெண்கள் எல்லோருமே சினிமாப் பாடல்களுக்கு செக்ஸியாக டான்ஸ் ஆடி ஊரெங்கும் பரவ விடுகிறார்கள்.  ஆஹா பேண்டீஸ் தெரிகிறது என்று ஆர்ப்பரிக்கிறது ஆண்கள் கூட்டம்.  லட்சக்கணக்காய் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையைச் செய்வதற்கென்று சினிமா நடிகைகள் இருக்கும் போது இந்த family womenக்கும் டான்ஸ் ஆட ஆசை.  இடுப்பை ஆட்டி, புட்டத்தைத் தூக்கி நானாவித சேஷ்டைகளும் இவர்கள் ஆடும் ஆட்டம் டிக்டாக்கில் தூள் பரக்கிறது.  டிக்டாக், ஃபேஸ்புக், வாட்ஸப் எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும்.  இதையெல்லாம் பயன்படுத்துவதற்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை.

இதெல்லாம் அந்தப் பேச்சுக்களிலிருந்து நான் தொகுத்தது.  நான் சொன்னேன்:  1947-இல் சுதந்திரம் பெறுவதற்கு இந்தியா தயாராக இல்லை.  பிரிட்டிஷ் பிரதமர் அப்படித்தான் சொன்னார்.  சுதந்திரம் கொடுத்தால் இந்தியாவை ரவுடிகளே ஆள்வர் என்றார் சர்ச்சில்.  அவர் சொன்னதும் உண்மை ஆயிற்று.  சுதந்திரம் வாங்கிய ஒருசில மாதங்களிலேயே காந்தியையும் கொன்று போட்டோம்.  அதற்கும் பிரிட்டிஷ்காரர்கள் சொன்னார்கள், “சிறையில் தள்ளினாலும் நாங்கள் இத்தனைக் காலம் காந்தியை உயிரோடு பாதுகாத்தோம்.  இந்தியர்களுக்கு அவர் உயிரைப் பாதுகாக்கக் கூடத் தெரியவில்லை!” ஆக, ஜனநாயகத்துக்கு இந்தியர்கள் லாயக்கு இல்லை.  பெண் சுதந்திரத்துக்கு பெண்கள் லாயக்கு இல்லை.  வாட்ஸப், முகநூல் ஆகியவற்றுக்கும் இந்தியர்கள் லாயக்கு இல்லை.

அப்படிப்பார்த்தால் மதுபானத்துக்குக் கூட தமிழர்கள் லாயக்கு இல்லை.  மற்ற தேசங்களில் தமிழர்களைப் போலவா குடிக்கிறார்கள்?  ஆனால் தகுதி இல்லை என்பதற்காக சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது.  பிரச்சினை எங்கே இருக்கிறது என்றால், தமிழர்களுக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.  வெறும் சினிமா மட்டுமே தெரிந்தால் இப்படித்தான் இருக்கும்; இப்படித்தான் நடக்கும்.  அடுத்து பணம்.  பணத்தைத் தவிர இந்தியர்களின் சிந்தனையில் வேறு எதுவுமே இல்லை.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் ஒரு சம்பவம் சொன்னார்.  80 வயது நண்பர் ஒருவரின் மனைவி தவறி விட்டார்.  துக்கம் விசாரிக்கச் செல்கிறார் ராகவன்.  நண்பரின் மனைவிக்கு 77 வயது.  ராகவன் ஆறு வயதுச் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூரில் பார்த்தவர், பேசியவர்.  ராகவனை விட 15 வயது பெரியவர் அந்தப் பெண்.  6 வயதுச் சிறுவனான ராகவனுக்கு பெங்களூர் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் அந்தப் பெண்.  ஏனென்றால் அந்தப் பெண் பெங்களூர்.  துக்கம் கேட்கப் போனவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் மனைவியை இளம் பெண்ணாகப் பார்த்ததைப் பற்றி ஆரம்பித்திருக்கிறார் ராகவன்.  உடனே அந்த 80, ராகவன் பேச்சை வெட்டி, அவளுக்கு டைம் வந்துடுத்து, போய்ட்டா, என்று சொல்லி விட்டு பிறகு தன் மகன் ஸ்விட்ஸர்லாந்தில் எவ்வளவு பெரிய வேலையில் இருக்கிறான், எத்தனை சம்பாதிக்கிறான் என்ற பணம் பற்றிய பேச்சிலேயே இருந்தாராம்.

அறத்தைத் தொலைத்து விட்டது தமிழகம்.  Fake பொருளும் fake இன்பமும் பொள்ளாச்சி சம்பவத்தில்தான் கொண்டு போய் விடும்.

***

இனி சாருஆன்லைன் இணையதளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai