கடவுளும் நானும் (1)

with ARR

ஜனவரி ஆறாம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் அவர் அலுவலகத்தில் காலை பத்தரை மணி அளவில் அவரைச் சந்தித்தேன்.  மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மேற்கத்திய இசையும் சூஃபி தத்துவமும் கொஞ்சம் இலக்கியமும்.  கிளம்பும் வேளையில்தான் அன்று அவரது பிறந்த நாள் என்றே தெரிந்தது.  என் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன்.  அந்த மூன்று மணி நேரமும் அவர் தன் மொபைலை எடுக்கவே இல்லை என்பதை கவனித்தேன்.  இத்தனை எளிமையான ஒரு மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  எளிமை என்பதை எப்படி விளக்குவது?  கல்லூரியில் படித்த நம் தோழன் ஒருவனை இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எப்படிப் பேசிக் கொண்டிருப்போமோ அப்படிப் பேசினார் ரஹ்மான்.

2008-இல் நான் எழுதிய கடவுளும் நானும்  என்ற சிறிய புத்தகத்தை மறுபதிப்புக்காக இன்றைய தினம் பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்தேன்.  அதில் உள்ள பல கட்டுரைகள் சூஃபிகள் பற்றி இருந்ததால் இந்த நூலை ரஹ்மானுக்கு dedicate செய்யலாம் என்று நினைத்தேன்.  கரீப் நவாஸ் பற்றி அவர் பாடிய பாடலைப் பற்றியும் கரீப் நவாஸ் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறேன்.  இந்திய சூஃபி இசைக்கு ரஹ்மானின் பங்களிப்புக்காக இந்த டெடிகேஷன்.

கடவுளும் நானும்  என்ற இந்த நூல் என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.  இந்த உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளோடு எனக்குக் கலாச்சார ரீதியான உறவு இருக்கிறது என்பதை இன்று புரிந்து கொண்டேன்.  இந்தியா சீனா எல்லையில் உள்ள பாங்கோங் ஏரிக்கரையில் நானும் நண்பர்களும் அமர்ந்திருக்கிறோம்.  14270 அடி உயரம் என்பதால் மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது.  3,50,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. 60 சதவிகிதம் சீனாவிலும் 40 சதவிகிதம் இந்தியாவிலும் உள்ளது.  இரவு ஏழு மணி இருக்கும்.  பிராண வாயு கம்மி என்பதால் யாரும் மது அருந்துவதற்குப் பிரியப்படவில்லை.  மது அருந்தாத போதே அவ்வப்போது சிலர் அங்கே மூச்சுத் திணறி மரணம் அடைவதுண்டு.

அங்கே எங்கள் அருகே சில சுற்றுலாப் பயணிகள்.  அவர்கள் லெபனானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் பேசும் மொழியை வைத்து இஸ்ரேலியரோ என்று சந்தேகம் வந்து கேட்டேன்.  இஸ்ரேலியர்தான்.  இளைஞர் கூட்டம்.  இஸ்ரேல் என்றால் எனக்கு ஞாபகம் வருவது The Secret Life of Saeed: The Pessoptimist என்ற நாவல்தான் என்றேன்.  ம்ஹும்.  அவர்கள் கேள்விப்பட்டதில்லை.  யார் எழுதினது?  பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.  கூகிளை அடித்துப் பார்க்க முடியாது.  அத்தனை உயரத்தில் போன் வேலை செய்யாது.  நீண்ட நேரம் மூளையைக் கசக்கிய பிறகு ஞாபகம் வந்தது.  Emile Habiby என்ற இஸ்ரேலிய அரபி எழுத்தாளர்.  இப்படியாக எழுத்தும் இசையும் இந்த பூமிக் கொளத்தின் மூலையில் உள்ள ஒவ்வொரு மனிதரையும் என்னோடு இணைக்கிறது.

நீங்கள் ஈரானுக்குச் சென்றிருக்கிறீர்களா?  அங்கே தெற்கு ஈரானில் உள்ள ஒரு நகரம் ஷிராஸ் (Shiraz).  அங்கே அடங்கியிருக்கிறார் ஹஃபீஸ் என்ற உலகப் புகழ் பெற்ற சூஃபி கவிஞர்.  அவர் பற்றி நாளை எழுதுகிறேன்.  இன்று நிஜாமுதீன் ஔலியா.  இந்தப் பகுதி கடவுளும் நானும் புத்தகத்தில் வருகிறது.  புத்தகம் இன்னும் பத்துப் பதினைந்து நாளில் வந்து விடும்.

நிஜாமுதீன் ஒளலியா கிபி 1236இல் பிறந்தார். 100 ஆண்டுகள் வாழ்ந்தார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பதாவ்(ங்) என்ற சிற்றூரைச் சேர்ந்த நிஜாமுதினின் தாயார், தனது கணவரின் மரணத்திற்க்குப் பிறகு பிள்ளையை அழைத்துக் கொண்டு தில்லிக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஃபரீத் பாபா என்ற சூஃபி ஞானியிடம் சீடனாகச் சேர்கிறார் நிஜாமுதீன்.  நிஜாமுதீனும் அவரது தாயாரும் பழைய தில்லியின் வியாபாரம் மியா பஸார் என்ற இடத்தில் வாழ்கின்றனர்.  ஒருமுறை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போக வீட்டின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். அப்போது நிஜாமுதீன் ஒளலியாவின் சீடரான அமீர் குஸ்ரோ (பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கவ்வாலி கவிஞராக அறியப்பட்டவர்). ஹஜ்ரத்தையும் அவரது அம்மாவையும் தன்னுடைய தாத்தாவின் ஹவேலிக்கு அழைத்து சென்று தங்க வைக்கிறார். (பெர்ஷிய மொழிச் சொல்லான ஹவேலி என்பதன் பொருள்: வீடு).

குஸ்ரோவின் தாத்தாவுக்கு இது பிடிக்கவில்லை. குஸ்ரோ வெளியூர் சென்றிருக்கும் போது இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். இப்படியாக நிஜாமுதீன் ஒளலியாவும் அவரது அம்மாவும் இருக்க இடமில்லாமல்  11 வருடங்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பிறகு வெளியே வந்து யமுனையின் கிளை நதியான சிதாரி என்ற நதிக்கரையிலுள்ள ஒரு கிராமத்தில் சிறிய ஓலைக் குடிசை ஒன்றை போட்டுக் கொண்டு குடியேறுகிறார்கள். ஆற்றில் மீன் பிடித்து வாழும் சில மீனவர்களை தவிர அந்த கிராமத்தில் வேறு யாரும் இல்லை. இந்த இடத்தில் இருந்து கொண்டுதான் ஹஜ்ரத் நிஜாமுதீன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை நாடி வருபவர்களின் குறைகளைத் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்.   ஹஜ்ரத் நிஜாமுதீனின் விசேஷம் என்னவென்றால் வியாதிகளை சொஸ்தப்படுத்துவது.

சுமார் 1325-இல்  ஹஜ்ரத் நிஜாமுதீன் அந்த ஊரில் ஒரு பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது சுல்தானாக இருந்தவன் கியாகிசுதீன். இவனுக்கு ஹஜ்ரத் நிஜாமுதினை பிடிக்காது. அதன் காரணமாக முன்பு ஹஜ்ரத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட இடத்துக்கான விலையை ஹஜ்ரத்திடம் கேட்கிறான் கியாசுதீன்.  கியாசுதீன் கேட்டதை ஹஜ்ரத் கொடுக்க மறுத்துவிடுகிறார்.  அதோடு கியாசுதீன் விரைவில் அகால மரணம் அடைவான் என்றும், இளவரசன் ஜானாவே பதவிக்கு வருவான் என்றும் சொல்லிவிடுகிறார். இதனால் கடும் கோபமடைந்த   கியாசுதீன் பள்ளிவாசலைக் கட்டக்கூடாது என்றும் நகரத்தில் உள்ள எல்லா தொழிலாளர்களும் தன்னுடைய கோட்டையை மட்டுமே கட்ட வேண்டும் என்றும் உத்தரவிடுகிறான். ஆனால் தொழிலாளர்களோ பகலில் கியாசுதீனின் கோட்டையைக் கட்டி விட்டு, இரவில் ஹஜ்ரத்தின் பள்ளிவாசலைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள். வெளிச்சத்திற்கு தீவட்டிகளும், காண்டா விளக்குகளும் வைத்துக் கொண்டார்கள். இதை அறிந்த கியாசுதீன் வியாபாரிகள் யாரும் ஹஜ்ரத்துக்கும் அவரது தொழிலாளர்களுக்கும் எண்ணெய் விற்கக் கூடாது என்று உத்தரவு போடுகிறான். உடனே தனது சீடர் ஒருவரை அழைத்த ஹஜ்ரத்  தீவட்டிகளிலும், காண்டா விளக்குகளிலும் தண்ணீரை ஊற்றச் சொல்கிறார். தீவட்டிகளும், காண்டா விளக்குகளும் தண்ணீரில் எரிகின்றன. அச்சம்பவத்தில் இருந்து அந்த சீடர் ரோஷன் சிராக் (எரியும் விளக்கு) என்று அறியப்பட்டு, பின்னர் ஹஜ்ரத் சிராக் தில்லி (தில்லியின் ஒளிவிளக்கு) என்று அழைக்கப்படுகிறார். அவர் அடங்கிய இடம்தான் இன்று தில்லியில் உள்ள சிராக் தில்லி என்று அழைக்கப்படும் பகுதி.

கியாசுதீனின் மர்மமான மரணத்திற்குப்பின் அரசனாகும் ஜானா தான் முகமது பின் துக்ளக் என்னும் பெயரால் அறியப்பட்டவன். அக்காலகட்டத்தைப் பற்றி தனது பயணக்குறிப்புகளில் விரிவாக எழுதி இருக்கும் இப்ன் பதூதா கியாவுதீனின் மரணத்திற்குக் காரணம் முகமது பின் துக்ளக் தான் என்று குறிப்பிடுகிறார். ஆனால் மக்களோ வேறு ஒரு காரணம் சொல்கிறார்கள். அதாவது நிஜாமுதீன் ஒளலியாவுக்கு கியாவுதீன் பெரும் தொந்தரவுகள் கொடுத்ததால் அவனது அரண்மனையில் மின்னல் தாக்கி இறந்தான் என்கிறார்கள் அவர்கள்.

ஒளலியாவின் தோட்டத்தில் மற்றொரு கல்லறையும் உள்ளது. அது ஷாஜஹானின் மகள் ஜஹானாராவின் கல்லறை. அவர்களின் தீவிர பக்தையாக இருந்தவள். அவள் உயிரோடு இருக்கும் போதே தான் இறந்த பிறகு தனது சமாதியின் மேல் வைக்க சொல்லி ஒரு வாசகத்தை கொடுத்தாளாம். அந்த வாசகம்:

“எனது கல்லறைக்கு மேலே சமாதி எழுப்பி புற்களைக் கொள்ள வேண்டாம். பசும்புல் தரையே என்னைப் போன்ற சாமான்யர்களின் கல்லறையாக இருக்கட்டும்.”

இதை எழுதும்போது எனக்கு இது ஒரு சூஃபி ஞானியின் கதையாகத் தோன்றவில்லை. ஒரு மாபெரும் புரட்சியாளனின் கதையாகவே தோன்றியது. அந்த காலத்து கொடுங்கோல் அரசர்களால் துன்புறுத்தப்பட்ட எளிய மக்களின் வாழ்வுக்கு இம்மாதிரி சூஃபி ஞானிகளே ஒளியாய் இருந்திருக்கிறார்கள். இவர்களாலேயே இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தது.

***

இனி சாருஆன்லைன் இணையதளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai